1152.
|
கன்னி
நன்னெடுங் காப்புடை வரைப்பிற்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு
சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பு
திருப்பெ ரும்பெயரி ருக்கையிற் றிகழ்ந்து
மன்னு வெங்கதர் மீதெழும் போது
மறித்து மேல்கடற் றலைவிழும் போதுந்
தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித்
தான மேவிய தன்மையு முடைத்தால். 75 |
(இ-ள்.)
வெளிப்படை. காளிதேவியினுடைய நன்மையானபெரிய
காவல் பொருந்திய அந்தக் காஞ்சிநகர எல்லைக்குள், காஞ்சி என்ற
பெயருடைய ஆற்றினது கரையின் பக்கத்தில் சென்னியிற்
பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் விரும்பி ழுந்தருளியிருக்கும்
திருப்பெரும் பெயரிருக்கை என்னும் பெயருடைய
கோயிலில்,
விளங்கி நிலைபெற்றவெப்பமாகிய கதிர்களைப் பரப்பும் சூரியன்
மேற்கிளம்பும்போதும் மீண்டும் மேல்கடலில் விழும்போதும் தனது
நிழல் தன்னிடத்தினின்றும் பிரியாத வளமுடைய காஞ்சித்தானம்
பொருந்திய மேன்மையினையும் அந்நகரம் உடையதாகும்.
(வி-ரை.)
கன்னி காப்பு - கன்னி - காளி; கன்னி காப்பு
என்பது காஞ்சிபுரத்தின் பன்னிரு பெயர்களுள் ஒன்று. ஒருகாலத்தில்
உமையம்மையாரைச் சிவபெருமான் காளி என்றழைக்க, அதனைப்
பொறாது, அம்மையார் அவ்விறைவரைப் பூசித்துக் காளிம
வடிவத்தின்நீங்கினர். அவ்வாறு நீக்கிய வடிவத்தினின்றும்கண்டாரை
அச்சுறுத்தும்உருவத்தோடு ஒரு பெண் தோன்றி அம்மையாரை
வணங்கிப் பணி கேட்டு நிற்க, அதனை நோக்கி அம்மையார்,
"சும்பன், நிசும்பன் என்ற அவுணரைச் சங்கரித்துக்
கவுசிகி
என்னும் பெயர் பூண்டு, காஞ்சியில் நிலைபெற்றிருந்து நகர்
காவல்செய்து வருவாய்" என்று கட்டளையிட்டருளினர்; அவ்வாறே
அந்தக் காளி, கச்சிநகரைக்காவல் புரிகின்றாள்; என்பது வரலாறு.
"கன்னி காத்திடலாற் கன்னி காப்பென்னும் கவின்பெய ருடையது
கச்சி" என்பது கந்தபுராணம். காஞ்சிமரத்தை யுடைமையால் காஞ்சி
நகரம் என்ற பெயர் பெற்றது. கன்னி - உமையம்மையார்
என்றுரைப்பாருமுண்டு.
திருப்
பெரும்பெய ரிருக்கை- கோயிலின் பெயர். பெரும்
பெயர் - மகாவாக்கியம். பெரும் பெயரால் - மகாவாக்கியத்தினாற் -
பேசப்பட்ட கடவுளாகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம் என்க.
"பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு" (சிவஞான போதம் - பாயிரம்).
"பெரும்பெய ரியவுள்" (திருமுருகு).
காஞ்சித்தானம்
- காஞ்சிமரமுள்ள இடம். தன் நிழல்
பிரியாத காஞ்சி - சூரியன் உதயமாகும்போதும் மேல் கடல்
விழும்போதும் இந்த மரத்தின் நிழல் அதனைப் பிரியாது
அதனடியிலே அடங்கி விடுவதாகும் என்பது.
உடைத்து
- அந்நகரம் என்ற எழுவாய் வருவிக்க. 75
|