1153.
மறைக ளாற்றுதிக், தருந்தவம் புரிந்து,
     மாறி லாநிய மந்தலை நின்று,
முறைமை யால்வரும் பூசனை செய்ய,
     முனிவர் வானவர் முதலுயி ரெல்லா
நிறையு மன்பினா லருச்சனை செய்ய
     நீடு காமங்க ளவரவர்க் கருளி
யிறைவர் தாமகிழ்ந் தருளிய பதிக
     ளெண்ணி றந்தவத் திருநக ரெல்லை.
76

     (இ-ள்.) வெளிப்படை. வேதமந்திரங்களினாற் றுதிசெய்து,
அரிய தவத்தைச்செய்து, மாறுபாடில்லாத நியமத்தினிற் சிறந்து,
முனிவர்கள் முறைமையால் வருகின்ற பூசனை செய்யவும்,
தேவர்கள் முதலிய எல்லா வுயிர்களும் உள்ளத்து நிறைந்த
அன்பினால் அருச்சனை செய்யவும், அவரவர் விரும்பிய நீடிய
விருப்பங்களை அவ்வவர்க்குக் கொடுத்தருளிச் சிவபெருமான்
மகிழ்ந்து எழுந்தருளிய தலங்கள் அத்திருநகரத்தின்
எல்லையினுள் எண்ணிறந்தன உள்ளன.

     (வி-ரை.) முனிவர் பூசனை செய்ய, வானவர் முதல்
உயிரெல்லாம் அருச்சனை செய்ய அருளி, இறைவர் மகிழ்ந்து
அருளிய பதிகள் என்க. திருநகர் எல்லையுள் - பதிகள் -
உள்ளன என்பதாம்.

     மறைகளால்...பூசனை- சிவபூசை செய்தற்கின்றியமையாத
ஒழுக்கமும் நியதியும் கூறப்பட்டன. முறைமை - ஆகமவிதி.
கண்ணப்பர் புராணத்தினுள் சிவகோசரியாரது பூசையின்
வரலாறு காண்க.

     காமங்கள் - விரும்பிய வரங்கள். பதிகள்- தலங்கள்.

     ஓணகாந்தன்றளி - (ஓணன் - காந்தன் என்ற
அசுரர் பூசித்தது), கச்சிமேற்றளி (விட்டுணு பூசித்தது), தக்கேசம்
(தக்கன் தாபித்துச் சமக மந்திரங்களாற் றுதித்தது) முதலியவை
காண்க. கண்ணீசம், சலந்தரீசம், சித்தீசம், அபிராமீசம்,
ஆதிபதீசம், இரணீசம், இரேணுகீச்சரம், கச்சபேசம், சுரகரீசம்,
நவக்கிரகீசம், நாரசிங்கீசம், பரசுராமீசம், பராசரேசம்,
பலபத்திரராமீசம்,பாண்டவீசம்,மக்கீசம், மணிகண்டீச்சரம்,
முத்தீசம், வயிரவீசம், வாணீசம், விடுவச்சேனீசம், வீரராகவீசம்,
பணாதரீச்சரம் முதலிய பெயர்கள் அவற்றைத் தாபித்துப்
பூசித்துப் பேறுபெற்ற முனிவர்தேவர் முதலியோரை விளக்கி
நிற்றல் காண்க. விரிவு காஞ்சிப்புராணத்தினுட் கண்டுகொள்க.

     திருநகர் எல்லை - பதிகள் எண்ணிறந்த - தன்
எல்லையுள் எண்ணிறந்த சிவாலயங்கள் உள்ள தலம்
காஞ்சிபுரத் திருநகரமேயாம் என்பது தேற்றம். "கச்சிப்
பலதளியும் கயிலாய நாதனையே காணலாமே" (க்ஷேத்திரக்
கோவை - 4) என்ற திருத்தாண்டகமும் காண்க. கச்சிக்
கயிலாயநாதர் கோயில் கயிலையின்காட்சிபோலக்
கட்டப்பட்டதென்றும், "காடவர்கோமான் கச்சிக் கற்றளி
யெடுத்து" (பூசலார் - புரா - 9) என்ற கோயில்இதுவே
என்றும், இவர் இராச சிம்மனென்றும் காடவ அரசர்
என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். தளிகளெண்ணிறந்தன
- என்பதும் பாடம். 76