1155.
|
ஈண்டு
தீவினை யாவையு நீக்கி
யின்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்த, நன் மங்கல தீர்த்த,
நீண்ட காப்புடைத் தீர்த்த, மூன் றுலகி
னிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா
வாண்டு நீடிய தீர்த்தமெண் ணிலவு
மமர நாட்டவ ராடுத லொழியார். 78 |
(இ-ள்.)
வெளிப்படை. (மலைபோலக்) குவிந்த பாவங்களை
யெல்லாம் நீக்கி இன்பத்தையே தருகின்ற புண்ணிய தீர்த்தமும்,
வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றையே கொடுப்பதாய் விளங்கும்
இட்டசித்தி என்னும் தீர்த்தமும், நன்மையைத்
தரும் மங்கல
தீர்த்தமும், தேவர்களது பெருங்காவலையுடைய தீர்த்தமும்,
மூன்றுலகங்களிலும் உள்ள தீர்த்தங்களெல்லாம் ஒருங்குகூடிய
சருவ தீர்த்தமும் என்ற இவை முதலாக அந்நகரத்தில் உள்ள
எண்ணில்லாத தீர்த்தங்களிலும் தேவர்கள் வந்து ஆடுதலை
ஒழியார்கள்.
(வி-ரை.)
இப்பாட்டின் அங்குள்ள தீர்த்தங்களின் சிறப்பினால்
நகரச் சிறப்புக் கூறினார்.
ஈண்டுதல் - குவிதல். ஈண்டு தீவினை யாவையும்
-
ஈட்டப்பட்டதனால் வந்து குவிந்த தீவினைகளெவற்றையும்."பண்ணிய
வுலகினிற் பயின்ற பாவம்" (அப்பர் சுவாமிகள்).பிராரத்தம் ஆகாமியம் சஞ்சிதம்
என்ற மூவகைக் கருமங்களையும் நீக்கி என்றபடி. ஈண்டு -
இவ்வுலகத்தில் என்றும், காஞ்சிபுரத்தில் என்றும் கூறுவாருமுளர்.
தீவினை நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் - இது
துரிதநாச தீர்த்தம் என்று பெயர்பெறும். துரிதம் - பாவம்.
இட்ட
சித்தியதாய் விளங்கும் தீர்த்தம் - இட்டசித்தித்
தீர்த்தம். தீர்த்தத்தின் பெயரையும், அது விளைக்கும் பயனையும்
உடன் கூறியவாறு காண்க. இது கச்ச பாலயத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையில் இதனுள் மூழ்குதல் சிறப்புத் தருவதென்பர்.
இதன் பெயர் சிலப்பதிகாரத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
நன்
மங்கல தீர்த்தம் - அமங்கலமானவற்றை
மங்கலமென்றும், சிறந்த மங்கலந் தராததனை மங்கலமென்றும்
உபசரித்துக் கூறும் இலக்கண வழக்குண்டாயினும் அவ்வாறன்றி,
இது, சிறந்த நன்மைகளைத் தருவதால் மங்கல தீர்த்தம்
என்று
பெயர்பெற்றதென்று பெயர் போந்த காரணத்தையும் பயனையும்
காட்டுதற்கு நல் என்ற அடைமொழி பெய்து ஓதினார். இதனுள்
செவ்வாய்க்கிழமையில் மூழ்குதல் சிறப்புத் தருவதாம் என்பர்.
காப்புடைத்தீர்த்தம்
- இது சுரரட்சிதம் எனப் பெயர் பெறும்.
காப்பு என்றதனால் தேவர்களின் காவல் குறிக்கப்பட்டது,
உலககாவலர் (திசை காவலர்) தேவர்களேயாகலான்.
சருவதீர்த்தம்
- இதனுட் சனிக்கிழமைகளில் மூழ்குதல்
சிறப்புடையதென்பர். சருவ - என்றதனால்
மூவுலகங்களிலும் உள்ள
எல்லாத் தீர்த்தங்களும் பொருந்துவது என்னும் காரணத்தாற் போந்த
பெயர் என்று குறிப்பதற்கு மூன்றுலகினிகழ்ந்த என்றார்.
இது
திருவேம்பகம் தேரடியில் உள்ளது. (சருவ என்றதனைக்
கோணல்
வழியிற் பொருளாக்கிக்கொண்டு, புண்ணிய தீர்த்தத்தினுட்
செய்யத்தகாத செயல்களையும் மாக்கள் செய்யக் காண்பது இந்நாட்
கொடுமைகளுள் ஒன்று).
அமரநாட்டவர்
ஆடுதல் ஒழியார் - தேவர்கள்
எப்போதும் ஒழியாமல் இவற்றுள் மூழ்கிச் செல்வர்.
(குறிப்பு
:- தேவர்கள் மூழ்குதல் ஒழியார் என்ற
இலேசினால் மனிதர் மூழ்குதல் ஒழிந்தாலும் என்ற குறிப்புப்
பறப்படுகின்றதற்கேற்ப, இத்தீர்த்தங்கள் பலவும் மனிதர்
மூழ்கத்தகாத நிலையில் இந்நாளில் ஆக்கிவைக்கப்பட்டுள்ளமை
வருந்தத்தக்கது. அன்பர்கள் இத்தூய தீர்த்தங்களைத்
தூய்மையான நிலையில் வைத்துக் கொண்டாடுதல் தகுதியும்
சிவபுண்ணியமுமாகும். இது திருக்கோயிலதிகாரிகளும்,
கும்பிடச்செல்லும் ஆண் பெண் மக்களும் ஒருங்கே
கவனிக்கற்
பாலதாகிய சிறந்த செய்தி.) 78
|