1157.
|
சாயை
முன்பிணிக் குங்கிண றொன்று,
தஞ்ச முண்ணினஞ் சாந்தட மொன்று,
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வரம்பில மொன்று,
மேய வவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையு மொன்று, விண் ணவரோ
டாய மின்பமுய்க் கும்பில மொன்றோ,
டனைய வாகிய வதிசயம் பலவால். 80
|
(இ-ள்.)
வெளிப்படை. தன்னுட் படிந்தோர்களது சாயையைப்
புலப்படாதபடி தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் கிணறு ஒன்றும்,
சிறிதுண்டாலும் நஞ்சாகிக் கொல்லும் நீருடைய தடம் ஒன்றும், ஒரு
வஞ்சமுமின்றி வந்து உள்ளே புகுந்தவர்கள் குரங்கினுருவத்தை
யடையும் ஒரு பிலமும், பொருந்திய அந்தக் குரங்குருவம் நீங்கும்படி
குளிக்கத்தக்க பொய்கை ஒன்றும், தேவர்களோடு கலத்தலால்
உளதாகும் இன்பத்தைக் கொடுக்கும் பிலம் ஒன்றும், ஆக
அத்தன்மையனவாகிய அதிசயம் அந்நகரத்தில் பலவாகும்.
(வி-ரை.)
சாயை- தண்ணீரிற் காணும் நிழல். பிரதிபிம்பம்
என்பர். பிணித்தல் - வெளித் தோற்றாமல்
தனக்குள் அடக்கிக்
கொள்ளுதல்.
தஞ்சம்
- சிறிதளவு. நஞ்சாம் தடம் -
நஞ்சுத் தன்மை
செய்யும் நீருடைய தடாகம்.
மாயை
- வஞ்சனை. மாயையின்றி - மனிதஉரு
நீங்கிக்
குரங்குருவம் அடைதற்குரிய தீவினை ஒன்றுமின்றி என்க.
இவ்வாறன்றி இதனைப் பிலத்துக்கேற்றி, வானரத்துருவ மாக்குதல்
அதன் வஞ்சனைத் திறத்தாலன்று; விம்மிதத் திறத்தாலாவதாம்
என்றுரைப்பினும் பொருந்தும். பிலம் - ஆழத்தில்
உள்ள
நீர்நிலை என்ற பொருளில் வந்தது.
விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் - தேவர்களோடு
கூடச்செய்து அக் கூட்டத்தினால் உளதாகிய இன்பத்தைத்தரும்.
உய்த்தல் - செலுத்துதல் - அந்த இன்பத்திற்
சேர்த்தல்.
இந்த இரண்டுபாட்டுக்களானும்
அதிசயங்களால் நகரச்சிறப்புக்
கூறினார். 80
|