1158.
|
அஞ்சு
வான்கரத் தாறிழி மதத்தோ
ரானை நிற்கவு, மரையிருட் டிரியு
மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப
நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையி
னாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை
யெஞ்ச வின்றிமுன் றிரியவுங், குன்ற
மெறிந்த வேலவன் காக்கவு மிசையும். 81 |
(இ-ள்.)
அஞ்சு...நிற்கவும் - ஐந்து பெரிய கைகளையும்
ஆறுபோலப் பாயும் மதத்தையும் உடைய ஒப்பற்ற யானை
முகமுடைய விநாயகக்கடவுள் நின்றுகாக்கவும்;
மலர்ப்பதங்களில்
வண் சிலம்பு ஒலிப்ப - மலர்போன்ற பாதங்களில் வண்மையுடைய
சிலம்புகள் சத்திக்க, அரை இருள்.......மேனி - பாதியிரவிலே
திரிகின்ற மேகம் நீள்வது போன்ற கரிய (கஞ்சுகம் போர்த்த)
திருமேனியினையும்; நஞ்சு.......வெற்றரையின் - நஞ்சினை
ஒழுக்குகின்ற பற்களையுடைய பாம்பைக் கச்சாக அணிந்த
வெற்றரையினையும் உடைய; நாமம்...திரியவும் - அச்சத்தைத்
தருகின்ற மூன்றிலை வடிவுடைய சூலப்படையை ஏந்திய
பிள்ளையாகிய வைரவக்கடவுள் இடைவிடாது முன்னே
திரிந்து காக்கவும்; கடவுள் இடைவிடாது முன்னே திரிந்து
காக்கவும்;
குன்றம்...காக்கவும் - கிரவுஞ்சமலையை
இருபிளவாகப் பிளந்த வேற்படையினையுடைய முருகக் கடவுள்
காக்கவும்; இசையும் - (அந்நகரம்) பொருந்தும்.
(வி-ரை.)
அஞ்சுவான் கரம். "ஐந்து கரத்தனை யானை
முகத்தனை" என்று திருமந்திரம் காப்புச் செய்யுள் இதனையே
போற்றிற்று. ஐந்து என்பது அஞ்சு என மருவி
வந்தது. வான்
என்றதனால் வானவர்க்காக என்பதும், அஞ்சு
என்றதனால்
அவ்வானவர்க்குப் பகையாயிருந்த கயமுகாசுரன் முதலிய
கொடியோர் அஞ்சுகின்ற என்பதும் குறிப்பாம். கரத்தைக்கண்டு
அஞ்சுதலாவது அதனில் ஏந்திய ஒரு கோடாகிய படையினால்
அக்கொடிய கயமுகனைச் சங்கரித்தமையால் அதனைக்
கண்டஞ்சுதல் என்ற குறிப்புத் தருவது. இக்கருத்துப் பற்றியே
"ஒரு கோட்டன்"என்று தொடங்கித் தமது ஞான நூலுக்குக்
காப்புக் கூறினர் அருணந்திசிவாசாரிய சுவாமிகள்.
பாசம், அங்குசம்,
அரதனகலசம், கொம்பு, மோதகம் என்ற
இவைகளை முறையே ஐந்து கைகளும் ஏந்தி நிற்கின்றன. இதனைப்
"பண்ணிய மேந்துங் கரந்தனக் காக்கிப் - பானிலா மருப்பமர்
தடக்கை, விண்ணவர்க் காக்கி - யரதனக் கலச வியன்கரந்
தந்தைதாய்க் காக்கிக், கண்ணி லாணவவெங் கரிபிணித் தடக்கிக்
கரிசினேற் கிருகையு மாக்கு, மண்ணலைத் தணிகை வரைவள ராபச்
சகாயனை யகழ்ந்தழீஇக் களிப்பாம்" என்று தணிகைப் புராணத்தினுள்
(கடவுள் வாழ்த்து) கச்சியப்ப முனிவர் அழகாக எடுத்தோதியது
காண்க. வன்கரம் என்பது பாட மாயின் இப்பெருஞ் செயல்கள்
செய்யும் வலிமையுடைய கைகள் என்றுரைத்துக் கொள்க. ஆறு
இழி மதம் - ஆறுபோல வழிகின்ற கன்னமதம், கபோலமதம்
என்ற இரண்டு மதங்கள். முகம்மட்டும் யானை உருவுடையதாதலால்
இவ்விரண்டுமே அவர்க்கு இயல்பிற் கூறப்படுவது. மும்மதத்தன்
என்பது உபசாரம். முருகப் பெருமான் பொருட்டு யானையாகவே
வந்தது ஓர் அவசரம் பற்றியது.
ஆனை
- யானை முகமுடைய விநாயகக் கடவுள். ஆகுபெயர்
இங்குக் குறிக்கப்பட்ட மூர்த்தி திருவேகாம்பரத்தில் தெற்கு வாயிலில்
ஆயிரக்கான் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விகடசக்கர
விநாயகமூர்த்தி. தக்க யாகத்தில் விட்டுணு வினிடமிருந்த சக்கரம்
விநாயகக் கடவுளின் திருக்கையிற் போந்ததாக, அதனை மீளப்பெறும்
பொருட்டு, விட்டுணுவின் சேனைத் தலைவனாகிய விடுவசேனன்,
விநாயகக் கடவுளின் முன்பு நின்று விகடக்கூத்தாடி அதனைப்
பெற்றனன் என்பது சரிதம். இக்காரணத்தால் இவருக்கு இப்பெயர்
வழங்குவதாயிற்றென்ப. "விழிமலர்ப்பூ சனையியற்றித் திருநெடுமால்
பெறுமொழி மீள வாங்கி, வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி
முடைநாற்ற மாறு மாற்றாற், பொழிமதநீர் விரையேற்றி விகடநடப்
பூசைகொண்டு புதிதா நல்கிப், பழிதபுதன் றாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்" (கடவுள் வாழ்த்து) என்ற
காஞ்சிப்புராணம் விகடசக்கர விநாயகக் கடவுள் துதி
இவ்வரலாற்றைத் தமிழ் மணம்படக் கூறுதல் காண்க.
ஆனை
நிற்கவும் - நிற்க- நின்று காக்க. காஞ்சிமாநகரத்தை
விநாயகக் கடவுள் - வைரவமூர்த்தி - முருகப்பெருமான் என்ற
மூன்று சிவகுமாரர்களும் காவல் புரிகின்றனர் என்பது வரலாறாதலின்
அந்த மூவர் காவலும், இவ்வொரு பாட்டாற் கூறப்பட்டது. விகடசக்கர
விநாயகர் தலவிநாயகராதலின் கந்தபுராணத்தில் கடவுள் வாழ்த்தில்
"கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம்" என்று துதி
கூறினர். காஞ்சிப் புராணமுடையாரும் மேற்கூறிபடி இவருக்கு
வாழ்த்துக் கூறியதும் இது பற்றியேயாம்.
அரை
இருள் திரியும் மஞ்சு நீள்வது போலும் மா மேனி
என்றது வைரவ மூர்த்தியின் திருமேனியிலணிந்த கஞ்சுகத்தின் மிக்க
கருமைநிறங் குறித்தது. மா- கருமை நிறமுடைய.
இக்கறுப்பு அவர்
பூண்டுள்ள கஞ்சுகத்தினது நிறம். வைரவர் மகாவிட்டுணுவின் கரிய
தோலினைச் சட்டையாகப்போர்த்துள்ளவர் என்றும், அதனால்
அவருக்குச் சட்டைநாதர் என்று பெயர் வழங்குவதென்றும் கூறுப.
வைரவக் கடவுளது திருமேனி சிவந்த நிறமுடையதென்பர். "கோடி
சூரியப் பிரகாசம்" என்பது வடமொழித் தியானசுலோகம். "வெஞ்சினப்
பரியழன்மீது போர்த்திடு, மஞ்சனப் புகையென வால மெனச்,
செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக், கஞ்சுகக் கடவுள்பொற்
கழல்க ளேத்துவாம்" என்ற கந்தபுராணமுங் காண்க. இவ்வாறன்றி
பாதியிரவில் திரியும் மேகம் போன்ற திருமேனி என்றுரைத்து,
நிறப் பண்பினாலன்றி இரவிற்றிரியும் தொழிற் பண்பு பற்றிப் போந்த
உவமையாகக் கூறுவாருமுண்டு. எவ்வகையினும் மேகம்
உபகாரத்தினாகிய பயன்பற்றி வந்த உவமம் என்பது கொள்ளத்தக்கது.
சிவபெருமானைப் போலவே குமாரர்கள் மூவரும் சிவந்த
நிறமுடையவர் என்ப.
இருள்
திரியும் - திரியும் என்பதனைப் பிறவினையாக்கி
இருளைத் திரிக்கும் கருமை என்றுரைப்பாருமுண்டு. அரையிருள்
திரியும் என்றதனால் வைரவக் கடவுளின் காவல் இரவில்
சிறப்புரிமையாவது குறிப்பு.
மஞ்சு
நீள்வது போலும் - வைரவர் காவற்செலவின்
வேகத்தால் அவர் மேற் போர்த்த கஞ்சுகம் நீண்டு அசைவது
கரிய மேகம் நீண்டு செல்வது போல்வது என்க. நீள்வதாகிய
மஞ்சு - காளமேகம் என்று கொள்வதுமொன்று.
மா
மேனி - கஞ்சுகத்தாற் கரிய திருமேனி - கஞ்சுகம்
போர்த்த என வருவித் துரைக்கப்பட்டது.
வண்
சிலம்பு - எண்ணும் அடியார்களுக்குத் திருவடிகள்
இருக்கும் இடத்தை அறிவுறுத்திக் காட்டுவதனால் சிலம்பு
வண்மையுடையது என்பதாம். "திருச் சிலம்போசை யொலிவழி
யேசென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற" (திருவுந்தியார்)
என்றஞான சாத்திரமும், "மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங், காலமிதுவென் றங்கவரை
யழைத்தா லென்னக் கடல்விளைத்த,
வால மிருண்ட கண்டத்தா னடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப"
(ஏயர்கோன் - புரா - 334) என்ற திருவாக்கும், பிறவும் காண்க.
மஞ்சு
நீள்வதுபோலும் மா மேனி - என்றதற்கு
மேற்கூறியபடி யன்றி மேகம் போன்ற நிறமுடைய திருமேனி என்று
உரை கூறுவாருமுண்டு. வைரவக் கடவுளுக்கு நிறம் அஞ்சனம்
என்னும் கறுப்பு என்று சில ஆகமங்களிற் கூறப்படுவதென்பர். மிக்க
சிவப்பு கருநிறங் காட்டுமென்பதும் இயல்பு.
வெற்றரை
- உடை அணியாத இடை. முன்றிலைப் படை -
திரிசூலம்; சிவபெருமானைப்போலவே வயிரவக் கடவுளும் திரிசூலம்
ஏந்துபவர். சிறுத்தொண்ட நாயனார் பொருட்டு வயிரவக் கோலம்
பூண்டுவந்த இறைவர் திரிசூலம் ஏந்தி வந்த
சரிதமும் உன்னுக.
"அயன்கபா லந்தரித்த இடத்திருக்கை யாலணைத்த, வயங்கொளிமூ
விலைச்சூலம்" (சிறுத்தொண்டர் புரா - 34) என்றது காண்க. நாமம்
- அச்சம்.
பிள்ளை
- வயிரவக் கடவுளைச் சிவகுமாரர்களில் ஒருவராகக்
கூறும் புராண மரபு குறித்தது. வைரவக் கடவுளின் கோலத்தையும்
அவரது திருவருட் பெருமையினையும் வரலாற்றினையும், கச்சிநகர்க்
காவலினையும் பற்றி "எளியரை வலியர் வாட்டின் வலியரை யிருநீர்
வைப்பி, னளியறத் தெய்வம் வாட்டு மெனு முரைக் கமைய வன்றே,
தெளியுமா வலியைச் செற்றோற் செகுத்துரிக் கவயம் போர்த்த,
வளியுயர் கச்சி காவல் வயிரவர்க் கன்பு செய்வாம்" என்று (கடவுள் வாழ்த்து)
காஞ்சிப்புராணத்துள் எடுத்துக் கூறுதலும்,
கந்தபுராணத்துள்ளும் மேற் காட்டியபடி துதி கூறுதலும் காண்க.
"நிறைவாந்
தன்மை, வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்"
(தனித்திருத் தாண்டகம்), "விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு
தமரு கங்கை, தரித்ததோர் கோலகால பைரவ ராகி" (திருநேரிசை -
திருச்சேறை - 6) என்ற தேவாரங்கள் முதலியவை இவர்
சிவபிரானின் வேறல்லாத தன்மையினையுடையவர் என எடுத்துக்
கூறுவனவும் காண்க. கணபதி, முருகப்பெருமான் வரலாறுகளின்
உள்ளுறையும் இதுவேயாதலும் அவரவர் புராணங்களுட்
கண்டுகொள்க.
குன்றமெறிந்த
வேலவன் காக்கவும் - குன்றம் -
கிரவுஞ்சமலை. இம்மலை சூரபதுமன் முதலிய மூவருள் மாயாமல
நிலையினனாகக் கூறப்படும் தாரகாசுரன் இருந்த வஞ்ச மலையாகும்.
மாயையினுட்பட்ட உயிர்கள் அதினின்றும் மீளும் வகையறியாது
அதனுள்ளே உழன்று அலைதல்போல, இம்மலையினுட்பட்டோரைத்
தாரகன் தனது மாயத்தால் அதனுள்ளே உழலவைத்து மாய்த்தனன்.
இம்மலையை முருகப் பெருமான் தமது வேலாயுதத்தால்
இருபிளவாக்கித் தாரகனையும் சங்கரித்தனர் என்றவரலாறு
(கந்தபுராணம் - தாரகன் வதைப்படலம்) காண்க. "முன்னாள் வரை
கிழிய, ஏந்து மயில்வே னிலைகாட்டி யிமையோ ரிகல்வெம்
பகைகடக்கும், சேந்தன்" (சண்டீ - புரா - 1) என்று பின்னரும்
இதனை ஆசிரியர் எடுத்தோதுதல் காண்க. மாயாமலம் சிதைவு
பட்டால்உயிர்கள் விரைவில் ஈடேறுவர் என்ற குறிப்புப்பெற
முருகப்பெருமானது பெருமைகளில் இதனைத் தேற்றம்பெற இங்கு
எடுத்துக் காட்டியருளினர் ஆசிரியர். 661ல் உரைத்தவையும் பார்க்க.
இசையும்
- இடையூறின்றி யிருக்கும் என்க. "கன்னி
நன்னெடுங்காப்பு" (1152) என்றதனால் இந்நகரத்தினைக் காளி
காவல் செய்தல் கூறினார். சாத்தனார் முதலினோரும் காவல்
புரியும் வரலாறுகள் கந்தபுராண காஞ்சிப்புராணங்களுட்
காண்க.
"கணிமுகில்
செக்கர் போர்த்தெனுங் கரிய கஞ்சுகச் செந்நிறக் கடவுள்
மணிசுடர் வயிரக் கிம்புரி மருப்பு மால்காரி முகத்தவன் வருசூர்
துணிபட வெறிந்த வேலவ னயன்போற் றோன்றிய சாத்தான்மால்
விசையை
யினையில்சீர்க் காளி முதலினோ ரென்று மினிதுகாத் திடுவதந் நகரம் |
(திருநகரப்படலம் - 82) என்பது
கந்தபுராணம். சிறப்புப்பற்றிக்
கணபதி வயிரவர், முருகர் என்ற மூவர் காவலையும் இங்கு
ஒருங்குவைத்து எடுத்துக் கூறினார். ஐயனாரது காவல் அடுத்த
பாட்டிற் கூறுதல் காண்க. "அணிய மரர்க்கிறை காப்பதாய கடி
பொழிலேகம்பம்"(குறுந்தொகை - 7) என்றதுங் கருதுக. 81
|