1159.







சத்தி தற்பர சித்தியோ கிகளுஞ்
     சாத கத்தனித் தலைவரு முதலா
நித்த மெய்திய வாயுண்மெய்த் தவர்க
     ணீடு வாழ்திருப் பாடியு மனேகஞ்,
சித்தர் விஞ்சைய ரியக்கர்கந் தருவர்
     திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி,
வித்த கக்கரி மேற்கொளுங் காரி
     மேவு செண்டணை வெளியுமொன் றுளதால். 82

     (இ-ள்.) வெளிப்படை. சிவசத்தியை உபாசித்துச் சித்தியடைந்த
சத்தியோகிகளும், சிவயோக சாதகமுடைய தனித்தலைவர்களாகிய
சிவயோகிகளும், முதலாக அழிவில்லாமையுடைய ஆயுளைக்
கொண்ட மெய்த்தவர்கள் நிலைத்து வாழ்கின்ற பாடிகளும் அநேகம்
அங்கு உள்ளன; சித்தர்கள், விஞ்சையர்கள், இயக்கர் கந்தருவர்கள்
என்ற இவர்கள் விளக்கம் பெற்றுப் பொருந்துகின்ற, நீண்ட
செண்டினைக் கையில் ஏந்திச் சிறந்த யானையின்மேல் ஏறிச்
செல்கின்ற ஐயனார் உலாவருகின்ற செண்டனை வெளியும்
ஒன்று அங்கு உண்டு.
  

     பாடி- இடம். சிற்றூர் என்பாருமுண்டு.

     சித்தர் - விஞ்சையர் - இயக்கர் - கந்தருவர் - இவர்கள்
தெய்வச் சாதியர். சித்தர் - சித்துக்களைச் செய்யும்
வன்மையுடையவர்.இவர்களைப் பதினெண் சித்திர்களெனவும்
அவர்களது மரபில் வந்தோர் என்றும் கூறுவர். இவர்களது
வலிமையினைச் "சித்தர்கணம்" என்ற பகுதியில் "வித்தகச் சித்தர்
கணமே" என்று பாராட்டினர் தாயுமானார். மன்னும் - மன்னுகின்ற.
மன்னும் - வெளி என்று கூட்டுக. இவ்வாறன்றி மன்னுவார் -
வாசிப்பார்கள் என்று உரைப்பாருமுண்டு. முன்னர் வாழ்பாடிஎன்றும்,
பின்னர் மேவு - வெளி என்றும் கூறுவதனால் இப்பொருள்
பொருந்துமோ என்பது ஐயம்.

     வார் செண்டு - தலையில் இரு பிளவாகப் பிளந்து நீண்டு
வளைந்த பிரம்பு. சவுக்கு என்பர். வார் - நீண்ட. வார் -பொருந்திய என்பாருமுண்டு.

     வித்தகக்கரி - வித்தகம் - சிறப்பு. கரி- ஐயனாருக்குயானை
ஊர்தியாகும். காரி - ஐயனார். அரிகரபுத்திரர் என்ப. செண்டணை
வெளி
- யானை குதிரைகளை நடத்தும் வையாளி வீதி. வெளி- வீதி.
இதனை வெளிவீதி என்று மதுரையில் வழங்கும் வழக்கும் காண்க.
இமயமலையிற் புலிக்கொடி பொறித்து அதன் எல்லைவரைத் தனது
வலிமையை நாட்டச்செல்லும் கரிகாற்சோழர் இந்தக் காரிக் கடவுளை
வழிபட்டு, அவரிடத்துச் செண்டுபெற்றுச் சென்று அங்ஙனமே வெற்றி
பெற்று வந்தனர் என்பது சரிதம். "தனது ஆணை சேறற்கும், சாத்தன் அருளால் தான்பெற்ற செண்டினாலே அதனை (இமயத்தை) அடித்துத்
திரித்துப் பொறித்து மறித்து நிறுத்தான்" என உணர்க. என்னை?

     " 'செண்டு கொண்டுகரி கால னொருகாலி லிமயச் சிமய
மால்வரை திரித்தருளி மீளவதனைப், பண்டு நின்றபடி நிற்க
விதுவென்க முதுகிற் பாய்பு லிப் பொறி குறித்து மறித்தபொழுதே'
(கலிங்கத்துப்பரணி - இராச - 1) எனவும், 'கச்சி வளைக்கைச்சி
காமக்கோட் டங்காவன், மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் -
கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்,

செம்பொற் கிரிதிரித்த செண்டு' எனவும் கூறினாராதலின்" என்று
அடியார்க்கு நல்லார் உரையினுட் கூறுதல் இங்கு நினைவு
கூர்தற்பாலன.1 (சிலப் -இந் - காதை - 95 - 98 - உரை) 82
  


     1. இது பற்றி எனது சேக்கிழார் - 107- 111 பக்கங்கள் பார்க்க.