1160.
|
வந்த
டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது;
சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள்
சேரும் யோகபீ டமுமுள; தென்று
மந்த மில்லறம் புரப்பவள் கோயி
லான போகபீ டமுமுள தாகு;
மெந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை
யெல்லை யில்லன வுள்ளவா ரறிவார்? 83 |
(இ-ள்.)
வெளிப்படை. அந்நகரத்தில், தன்னிடத்து வந்து
அடைந்தவர்கள் தனதுருவம் மற்றவர்க்குத் தோற்றாது மறையத்,
தாம் அவர்களைக் காணும்படி யானதொரு இடமுளது; சிந்தை
யோகத்து முனிவர்கள், யோகினிகள் சேர்ந்துள்ள யோகபீடமும்
ஒன்றுள்ளது; அழிவில்லாத அறங்களை என்றும் புரக்கின்ற
காமாட்சி அம்மையார் விரும்பி எழுந்தருளியிருக்கும் கோயிலாகிய
போகபீடமும் உளதாகும்; எமது பெருமானாராகிய
ஏகாம்பர நாதர்
மகிழ்ந்து வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தில் இவ்வாறு நீண்ட அளவற்ற
அதிசயங்கள் உள்ளன; அவற்றை யாவர் அறிவார்கள்?
(ஒருவருமிலர்.)
(வி-ரை.)
காண்பிடம் - காணுமிடம். தம்மைப் பிறர்காணாது
தாம் பிறரைக் காண்பது சித்திகளுள் ஒன்று. ‘வேறொருவர்
காணாம லுலகத் துலாவலாம்' என்றார் தாயுமானார். இவ்வாறு
சித்திகள் செய்வார் சித்தர்கள் எனப்படுவர். இவர்களை முன்பாட்டிற்
கூறினார். இது தவமுயற்சிகளால் அவ்வவர்க்கு மட்டும் உண்டாவது;
இங்குக் கூறியது வேறு; இது இந்த இடத்தின் தன்மையாம்; இந்த
இடத்தில் வந்து அடைந்தவர் எல்லாரும் பெறக்கூடியது.
மற்றுள்ளாரை - அங்கு வராதவரை என்றுரைப்பாருமுண்டு.
யோகத்து
முனிவர் - யோகம் - கூடுதல்.சிந்தையை
இறைவன்பாற் கூட்டியவர் யோகர் எனப்படுவர். யோகினி
-
பெண்பால்.
அறம்
புரப்பவள் - காமாட்சியம்மையார். "அறம்புரந்தளிக்கும்
அம்மை" (1151) என்றது காண்க.
போக
பீடம் - திருக்காமக்கோட்டம்.
எல்லையில்லன
உள்ள - இன்னும் அநேகம் விம்மிதங்கள்
உள்ளன. இவற்றைக் காஞ்சிப் புராணம் விம்மிதப்படலத்தும்,
கந்தபுராணம் திருநகரப்படலத்தும் விரிவாய்க் கண்டு கொள்க.
ஆர்
அறிவார்? வினா, முற்றும் அறிபவர் ஒருவருமிலர்என்று
எதிர்மறை உணர்த்திற்று. இவை இக்கலியுகத்திற் சிறப்புடைய
சிலர்க்கு மட்டுமன்றி யாவர்க்கும் தெரியாவென்பர். இதற்கு "இன்னவா
மதிசயங்கள் மற்று முள்ள எல்லையிலை; வைமுற்று மறிவார்யாரே?,
முன்னுகத்தி னெல்லார்க்குங் காட்சியெய்து; மூண்டகொடுங்
கலியுகத்திற் படிமை வாழ்க்கை, மன்னினோர் சிலர்க் கன்றித்
தோன்றா" (விம்மிதப்படலம் - 21)என்று காஞ்சிப்புராணமுடையார்
விரிவுரை கூறுதல் காண்க. 83
|