1161.
|
தூண்டு
சோதியொன் றெழுந்திரு டுரக்குஞ்
சுரர்கள் வந்துசூ ழுருத்திர சோலை,
வேண்டி னார்கடம் பிறப்பினை யொழிக்கு
மெய்ந்நெ றிக்கணின் றார்கடாம் விரும்பித்
தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர் சிலையு
முண்டுரை செய்வதற் கரிதா
லாண்ட நாயகி சமயங்க ளாறு
மகில யோனியு மளிக்குமந் நகரம். 84 |
(இ-ள்.)
வெளிப்படை. விளங்கி எழுகின்ற ஓர்
ஒளிப்பிழம்பானது இரவில் தோன்றி இருளை நீக்குதற்கிடமாகியும், தேவர்கள் வந்து சூழ்வதற்கிடமாயுமுள்ள
உருத்திரசோலை யென்னும்
பூங்காவனமும், விரும்பி வேண்டியவர்களுக்கு அவர்களுடைய
பிறவியை யொழிக்கின்ற மெய்ஞ்ஞானநெறியில் நின்றவர்கள்
(பொன்னாக்க) விரும்பித் தீண்டும்படி செய்தால், ஓடு முதலிய
எவ்வகைப் பொருள்களையும் பொன்னாகச் செய்கின்ற ஒரு கல்லும்
உண்டு; எம்மை ஆட்கொள்ளும் காமாட்சி யம்மையார் தாம்
ஆறுசமயங்களையும் எல்லாவுயிர்களையும் காப்பாற்றும் அந்தத்
திருநகரத்தில் உள்ள இத்தன்மையான பெருமைகளைச் சொல்வதற்கு
அரிதாகும்.
(வி-ரை.)
தூண்டுசோதி - வேறெவராலும் தூண்டப்படாமல்
இறைவனது சத்தியாலே தூண்டப்படுவது என்ற பொருளில் வந்தது.
படுவிகுதி தொக்குவந்த செயப்பாட்டுவினைப் பெயரெச்சம்.சுரர்களைத்
தூண்டும் என்று பெயரெச்சமாகக் கொண்டு உரைத்தலுமாம். "தூண்டு
சுடரனைய சோதி கண்டாய்" (திருமறைக்காடு) என்ற திருத்தாண்டகம்
காண்க. இறைவன், தூண்டப்படாது இயல்பாய ஒளியுடையவன்
என்பது"தூண்டாமைச் சுடர்விடு நற்சோதியானை" (ஆவடுதுறை - 9)
என்ற திருத்தாண்டகத்தாலறியப்படும்.
வேண்டினார்கள்
தம் பிறப்பினை ஒழிக்கும் சிலையும்
- பொன்னாக்குவதோர் சிலையும் என்று பிரித்துத் தனித்தனி
கூட்டி உரைப்பாருமுண்டு.
பிறப்பினை
ஒழிக்கும் மெய்ந்நெறி என்று கூட்டுக."தண்ட
முடைத்தருமன்றம ரென்றம ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்,பிண்ட
முடைப்பிற வித்தலை நின்று நினைப்பவ ராக்கையை நீக்குமிடம்"
(கச்சியனே - இந்தளம் - 6) என்ற நம்பிகள் தேவாரமும் காண்க.
தீண்டில்
யாவையும் செம்பொன்னாக்குவது - பரிசவேதி
என்பது. தீண்டில் - தீண்டும்படிசெய்தால்.
பொன்னாசைகொண்டு
தீண்டில் இது பலிக்காது என்பதும் ஆசையற்று வீடுபேற்றின்
முயல்வோர் விரும்பித் தீண்டும்படி செய்தால் மட்டும் யாவையும்
பொன்னாக்குவிக்கும் என்பதும் பெறப்பட்டன. "ஓட்டினை
யெடுத்தாயிரத்தெட்டு மாற்றாக வொளிவிடும் பொன்னாக்கு"ம்
சித்தர்கள் என முன் சொல்லப்பட்ட தன்மைவேறு. இங்குக்
கூறப்படும் பிறப்பறுக்கும் மெய்ந்நெறிக்கணின்றார்கள் விரும்பித்
தீண்டுஞ் செய்கை வேறு. இரசவாதத்திலும் இவ்விதமாகியதொரு
நியதியுண்டு.
சமயங்களாறும்
அளிக்கும் - "சமயமவை யாறினுக்குந்
தலைவன் றான்காண்" (கச்சி - தாண்டகம் - 7), "ஆறுசமயத்
தவரவரைத், தேற்றுந் தகையன" (இன்னம்பர் - திருநேரிசை) என்ற
அப்பர் சுவாமிகள் தேவாரமும், "அறிவினால் மிக்க வறுவகைச்சமயம்
அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து" (தக்கேசி - புன்கூர் - 9) என்ற
திருவாக்கும், "அறுசமயத்தலைவர்" (சாக்கியர் புரா, 1) என்ற
மாபுராணமும்,
பிறவும் கூறுகின்றபடி அவ்வவர் பக்குவத்திற்கேற்றபடி
உதவ ஆறுவகைச் சமயங்களையும் இறைவர் வகுத்தருளினர்.
இறைவியார் ஆன்மாக்களை அவ்வவற்றில் நிறுத்துவித்து மேல்வரச்
செய்வர் என்பதாம். இவை உட்சமயங்கள்.
அகில
யோனியும் அளிக்கும் - உயிர்களுக்காக இறைவன்
செய்யும் தொழில்களெல்லாம் சத்தியினாற் செய்தலின் இவ்வாறு
கூறினார். ஐந்தொழில்களுள் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற
மூன்றும் உயிர்கள்பெறும் உடம்பினைப் பற்றிச் செய்யப்படுவன.
உடம்பு மாயையினின்றும் வரும். மாயை இறைவனுக்குச் சத்தியம்.
84
|