1162.
என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி
     லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி யிமயமால் வரைமேல்
     வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
     திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
     குடியி ருத்தின கொள்கையின் விளங்கும். 85

     (இ-ள்.) வெளிப்படை. என்றும் அழியாது நிலைத்துள்ள
இக்காஞ்சிபுரத் திரு நகரமானது, வலிய திறலுடைய
புலிக்கொடியினைப் பெரிய இமயவரையின் மேல் நாட்டும்படிச்
செல்வோராகிய, கலியுகத்திலே விளங்குகின்ற
கரிகாற்பெருவளத்தான் என்னும் சோழ அரசர்க்கு, முன்னே
இதனைக் கண்டு (சிந்து் மேதன் என்னும்) ஒரு வேடன் சென்று
இதன் சிறப்பைச் சொல்லத், திருத்தம் செய்யப்பெற்ற நான்கு காத
தூரம் சுற்றெல்லையுடைய ஒரு நகரமாக அமைத்துக் கொண்டு,
மலையைப்போலும் பெருமதிலை நான்கு பக்கத்திலும் சூழச்செய்து,
அவர், அனேகம் குடிகளை அவ்விடத்தில் குடியிருக்கும்படி
செய்த பெருமையுடன் விளங்கும்.

     (வி-ரை.) என்றும் உள்ள - பிரளயத்திலும் அழியாத,
பிரளயசித் என்று பேர் பெற்ற.

     கலியுகத்தில் - இந்நகர் என்றும் நிலைத்திருப்பதனால்இங்குச்
சொல்லப்படுவது கலியுகத்தில் அதனுடைய தோற்றம் நிலை என்ற
வரலாறுகளாம் என்பதாம்.

     கரிகால் பெருவளத்தோன் - தீயினாற் கரிந்த
காலையுடைமையாற் கரிகாற்சோழர் என்ற காரணப் பெயர்பெற்ற
அரசர். இவரே இக்கலியுகத்தில் இந்நகரத்தை அமைத்தவர். இவரது
திருவுருவம் ஏகாம்பரநாதர் கோயில் உள்வாய்தலின் முன்பு வைத்து
வணங்கப்படுகிறது காண்க. படம் பார்க்க. அரசர்
பெருந்திருவெல்லாமுடையாரான வளம்பற்றி இவரைப்
பெருவளத்தோன் என்று பழைய நூல்கள் எல்லாம் கூறும். இவர்
கலி 425ல் வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது. காஞ்சிபுரம்
ஞானப்பிரகாச தேசிகராதீனத்துச் செப்புப்பட்டயத்தினால் இஃது
கருதப்படுகின்றது. மேற்படி மடம் இதுவரை 250 பட்டங்கள்
ஆயிருக்கின்றன என்பர். பட்டம் ஒன்றுக்கு 20 ஆண்டுகளாகக்
கணக்கிட்டால் 5000 ஆண்டுகள் ஆகின்றன.

     புலி இமயமால் வரையில் வைக்க ஏகுவோன் தனக்கு
- கரிகாற் சோழர் இமயமலைவரை நாடுகொண்டு அடிப்படுத்தி
இயமத்தில் தமது புலிக்குறியைப் பொறித்து வெற்றிகொண்டனர்
என்பது வரலாறு. இதனை, "அசைவி லூக்கத்து நசைபிறக்கொழியப்,
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென, விமையவ ருறையுஞ்
சிமயப் பிடர்த்தலைக், கொடுவரி யேற்றிக் கொள்கையிற்
பெயர்வோற்கு" என்ற சிலப்பதிகாரத்தாலும், (இந்திரவிழா - காதை
- 95 - 98), அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையாலுமறிக.
அவ்வாறு இமயம் நோக்கிப் புறப்படும்போது வேடன் காஞ்சியின்
பெருமைகண்டு வந்து சொன்னானாகக், கரிகாற்சோழர்அங்குச்சென்று,
காடெறிந்து நாடு கண்டு, நான்கு காதம் எல்லை வகுத்து நகராக்கி
மதில்போக்கிக் குடியிருத்தனர்; காரிக்கடவுளை வழிபட்டு அவர்பாற்
செண்டு பெற்று ஏகி, அச்செண்டினைக் கொண்டு இமயத்தலையில்
எறிந்து வெற்றிபெற்றனர் என்பது இப்பாட்டிற் குறித்த சரித
வரலாறாகும். சோழர் இமயத்தில் புலி பொறித்த வரலாறுபற்றி 552 -
608-ல் உரைத்தவையும் பார்க்க.

     வன்திறல் - ஒரு பொருட் பலசொல்; மிகுதி குறித்தது.
மிக்க வலிமையுடைய.

     புலி - புலி முத்திரை. இது சோழர் மரபுக்குரியது.
"புண்டரிகம்(புலி) பொன்வரைமே லேற்றி" (608) என்றதும்,பிறவும்
காண்க. சோழர் குலத்தின் முதற்குரவரான வியாக்ரபாதரின்
இலச்சினைபோலும். இமயமால் வரைமேல் புலி வைக்க
ஏகுவோன்
என்க. இமயமலையில் புலிக்குறி பொறிக்கச் செல்வோன்.

     இமயமலையைவடபெருங்கல் என்பது மதுரைக்காஞ்சி (70),
வேடன் கண்டு உரைசெய்த வரலாற்றின் விரிவு 
காஞ்சிப்புராணத்துட் காண்க. இவ்வாறே மதுரைச் சிறப்பை
ஒருவணிகன் கண்டு குலசேகர பாண்டியனுக்குச் சொல்ல அவன்
சென்று கண்டு காடெறிந்து திருமாளிகையும் நகரமும் ஆக்கிய
செய்தி திருவிளையாடற் புராணத்தினா லறியப்படுவதாகும். இவ்வாறே
தில்லையின் வரலாறும் காண்க.

     கரிகாற் பெருவளத்தோன் - ஏகுவோன்றனக்கு - வேடன் -
கண்டுஉரைசெய்ய - வகுத்து - மதில்போக்கிக் - குடியிருத்தின -
கொள்கையின் - நகர் - கலியுகத்தில் - விளங்கும் என்று கூட்டி
முடித்துக்கொள்க. உலகத் தோற்றம், ஒடுக்கம், முனிவர் மரபு,
அரசர் மரபு, சரிதம் என்ற ஐந்தும் கூறுதல் புராணத்துக்குரிய
உறுப்புக்களாதலின் இவ்வாறு அவையெல்லாம் அமைய இங்கு
எடுத்துக் கூறினார் என்க. புராணம் பாடுவித்த அநபாயரது மரபின்
தொடர்புபற்றிய சிறப்பும் உடன்கண்டவாறாயிற்று. 85