1163.
தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
     சார்ந்தசைய வதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண்காஞ்சி யிசைபாடும் பழன வேலிப்
     பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரி னீடுந்
திண்காஞ்சி நகர்நொச்சி யிஞ்சி சூழ்ந்த
     செழுங்கிடங்கு திருமறைக ளொலிக்குந் தெய்வ
வண்காஞ்சி யல்குன்மலை வல்லி காக்க
     வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தான்  மானும்.86

     (இ-ள்.) வெளிப்படை. குளிர்ச்சியையுடைய காஞ்சிமரத்தின்
மெல்லிய கிளைகளாகிய பூங்கொத்துக்களையுடைய கொம்புகள்
(காற்றினால்) ஆடலைப் பொருந்தி யசைய, அதன் பக்கத்தில்
வண்டுகள் விரும்பிவந்து காஞ்சிப்பண்ணிசையைப் பாடுதற்கிடமாகிய
மாஞ்சோலையைத் றனக்கு வேலியாகவுடைய வயல்களோடு கூடிய
மருத நிலத்தை அருகில் உடையதாய், உலகத்தில் நீடுகின்ற வலிய
காஞ்சி நகரத்தின் வலிய நொச்சியாகிய மதிலைச் சூழ்ந்த
செழித்த அகழியானது,
சிறந்த வேதங்கள் சத்திக்கின்ற தெய்வத்
தன்மையுடைய வண்மையுடைய காஞ்சி என்கின்ற அணியை
அணிந்த இடையினையுடைய மலைவல்லியார், காக்கின்றதனால்,
வளர்கின்ற கருணைக்கடலானது இவ்வுலகத்தைச் சூழ்ந்திருந்தால்
எவ்வாறிருக்குமோ அதனை ஒக்கும்.

     (வி-ரை.) காஞ்சி (மென்சினை) = மாமரம். காஞ்சிப்பண்
இசை
என்க. காஞ்சி - மருதப்பண்களுள் ஒன்று. திண்காஞ்சி
நகர்
- காஞ்சி நகரத்தின் பெயர். வண்காஞ்சி - பெண்கள்
அணியும் மேகலை என்னும் அணி. இவ்வாறு ஒருசொல்
பலமுறையும் வருவது சொற்பின் வருநிலை என்ற அணி.

     ஆடல் சார்ந்து அசைய - சுரும்புதாழ்ந்து வண்காஞ்சி
இசைபாடும்
என்றதனால் மாவின் பூங்கொம்பர் ஆடற்
பெண்கள்போல ஆடலினைப் பொருந்தியசைய வண்டுகள்
அவ்வாடற் பெண்களின் பக்கம் தாழ்ந்து வணக்கத்துடன்
அவ்வாடலுக் கேற்றபடி பாடல் பாடுகின்றன என்றதோர் நயமும்
கண்டுகொள்க.

     பூங்கொம்பர் - பூங்கொம்பு போன்றார் என்ற
தனிப்பொருட்சுவையுங் காணத்தக்கன.

     தாழ்ந்து - தாழ்தல் - விரும்புதல். பழனம் - இங்கு
மாமரச்சோலை குறித்து நின்றது; ஆகுபெயர். வேலிமருதம் -
மருதவயலின் கரைப்பக்கம் மாஞ்சோலையிருத்தலால்
பழனவேலி
என்றார்.

     நொச்சி இஞ்சி - நொச்சியாகிய மதில் - காவலினை
வேண்டாத அரண் என்ற படியாம்.

     இஞ்சி சூழ்ந்த கிடங்கு - கருணைக்கடல் - உலகத்தைச்
சூழ்ந்தால் - ஒக்கும் என்று கூட்டுக. "ஆழ்கிடங்கும் சூழ்வயலு
மதில்புல்கி யழகமரும், நீண்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே" (8) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்
காண்க.

     திருமறைகள் ஒலிக்கும் தெய்வ வண்காஞ்சி என்றது
மேகலையின் ஆர்ப்பரவம் வேத வொலியினைப்போன்று
உளதென்றதாம். மறைகள் சத்தித்துத், தொண்டு பூண்டார்க்கு
இறைவி இருக்கும் இடம் அறிவிப்பதால் வள்ளன்மையுடைய
காஞ்சியாம் என்பது குறிப்பு. அம்மையார்க்கு வேதமே என்ற அணியாம்; ஆதலின் வேதமாகிய காஞ்சி (அணிகலன்)
என்றலுமாம். வண்சிலம் பொலிப்ப - (1158) என்றது காண்க.

     காக்கக் கருணைக்கடல் உலகத்தைச் சூழ்ந்தால் மானும்
என்றது கருணை வடிவாகிய அம்மையார் நாற்புறமும் காவல்
புரிதலின் கருணைக்கடல் சூழ்ந்தாற்போலும் என்றார்; உலகம்
என்றது காஞ்சியை யுணர்த்திச் சுட்டுப் பெயராய் நின்றது என்றலும்
பொருந்தும். 86