1164.







கொந்தலர்பூங் குழலிமையக் கொம்பு கம்பர்
     கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க
மந்திரமா மதிலகழி, யவர்தாந் தந்த
     வாய்மையா கமவிதியின் வகுப்புப் போலு;
மந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி
     யடைகளங்க மறுப்பரிதென் றறிந்து சூழ
வந்தணைந்து தன்கறுப்பு முவர்ப்பு நீக்கு
     மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.
87

     (இ-ள்.) மலர்க்கிடங்கு - நீர்ப்பூக்கள் நிறையப் பூத்தற்
கிடமாகிய அகழியானது; கொந்தலர் ... காக்க - கொத்துக்களாக
அலர்ந்த பூக்களைச் சூடிய கூந்தலினையுடைய பார்வதிதேவியார்,
திருவேகாம்பரநாதர் விரும்பி ஏற்றுக் கொள்ளும்
பூசைத்தானத்தைக் காப்பதற்காக; அவர்தாம் ... வகுப்பு -
அவ்விறைவரால் அருளிச் செய்யப்பட்ட உண்மை யாகமங்களின்
விதிப்படி வகுக்கப்பட்டவையாகிய; மந்திரமா மதில் அகழி -
மந்திரத்தால் அமைத்த மதில்களுடன் கூடிய அகழிகளை;
போலும் - ஒத்திருக்கும்; (அன்றியும் அந்த அகழியானது)
அந்தமில் ... மாகடலும் போலும் - கெடுதலில்லாத
சிறப்பினையுடைய காஞ்சிநகரை வந்து அடைந்தவர்களுக்கல்லாது
தம்மைப்பற்றிய குற்றங்களை நீக்கிக்கொள்ளுதல்
அருமையாமென்று அறிந்து அக்காஞ்சியைச் சூழவந்து தனது
கறுப்பையும் உவர்ப்பையும் நீக்கிக்கொள்ளும் பெரிய
கடலினையும் ஒத்திருக்கும்.

     (வி-ரை.) மலர்க்கிடங்கு, இமயக் கொம்பு - தானங்காக்க -
ஆகமவிதியின் - மந்திரமாமதில் அகழி - வகுப்புப்போலும்; -
மாகடலும்போலும் என்று கூட்டி முடித்துக் கொள்க.

     பூசனை குறித்த ... வகுப்பு - பூசைக்குரிய ஐவகைச்
சுத்திகளுள் இது தானசுத்தி எனப்படும். ".....ஐவகைச் சுத்திசெய்
தாசனம் மூர்த்தி மூர்த்திமானாம் சோதியையும் பாவித்து
ஆவாகித்து....." (சித்தி - 8 - 20) முதலியவை பார்க்க. ஐந்து
சுத்தியாவன : ஆன்மசுத்தி - தானசுத்தி - திரவியசுத்தி -
மந்திரசுத்தி - இலிங்கசுத்தி - என்பனவாம். இவற்றைச்
செய்யும்முறை ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளன. இது உரிய
மந்திரம் பாவனை கிரியைகளால் பூசைத்தானத்துக்குவரும்
இடையூறுகளைப் போக்கி நான்கு மூலைகளினும் தீயின் ஒளியுடன்
சொலிக்கின்ற மூன்று மதிலும், அவற்றைச் சுற்றி மூன்று அகழியும்,
உண்டாக்கியும், அவ்வாறே சத்தியாகின்ற காவலை மேலும் கீழும்
உளதாக்கியும், எல்லாவகைக் காவலும் பொருந்தச் செய்து
கொள்ளுதலாம் என்பர். ஞான பூசையிலும் ஐவகைச் சுத்தியுண்டு.
"மண்முதற் கரணமெல்லாம்" (97) என்ற சிவப்பிரகாசத் திருவாக்குக்
காண்க. இவையெல்லாம் ஆகமநூல் வல்லார்வாய் முறைப்படி
கேட்டுணரத் தக்கன.

     மந்திரமாம் மதில் அகழி - உரிய மந்திரங்களாலும் பாவனை
கிரியை என்பவற்றாலும் செய்து அமைக்கப்பட்ட மதில்களுடன்கூடிய
அகழிகள். ஆம் - என்றதனால் மந்திரத்தின் முன்வரும் பாவனையும் பின்வரும் கிரியையும் கொள்ளப்படும். மந்திரம் - நினைப்போனைக்
காப்பது.

     வாய்மை ஆகமம் - உண்மைப் பொருளை உணர்த்தும்
ஆகமம். ஆகமங்களின் உண்மைப்பொருள்களாகிய
முப்பொருள்களை வடித்தெடுத்து உணர்த்தும் சித்தாந்த ஞான
சாத்திரங்கள் மெய்கண்ட சாத்திரங்கள் என்னப்படுதலும் காண்க.

     அந்தமில்சீர் - "என்றுமுள்ள இந்நகர்" (1162) என்றது
காண்க.

     அடைந்தார்க்கன்றி - அரிது- எதிர்மறை உறுதி குறித்தது.
அடைகளங்கம் - அநாதியே உயிருடன் வரும் மூலமலம்.

     அறிந்து - சூழவந்து - அணையும் - மாகடல் -
தற்குறிப்பேற்றம்; அறிதலும், அறிந்தபடி செய்தலும் என்ற
உணர்ச்சியுடையதாய்க் கூறுவதால், தனக்குக் கறுப்பும் உவர்ப்பும்
உள்ளதென்றுணர்தலும் நீக்கும் வழியறிதலும் ஆம். கிடங்கு கடலும்
போலும் என்பது அகழியின் அகலமும் ஆழமுமான நீர்ப்பரப்புக்
குறித்தது. மெய்யும் உருவும் பற்றி எழுந்த உவமையை உள்ளுறுத்தது.

     ஆகமவிதியின் வகுப்புப் போலும் - என்றது வினையும்
பயனும் பற்றி எழுந்த உவமை. இவ்வுவமைகளினால்
ஆகமவிதிப்படி பூசை
செய்யும் சிவசாதனமும், அதனைச்
சாதித்தார்க்குக் களங்கம் அறுதலாகிய பயனும் உள்ளுறையாகக்
காட்டிய தெய்வக் கவிநலமும் காண்க.

     உயிர்களுக்கு ஆணவமும், அதனாற் கட்டுப்பட்டமையாகிய
பசுத்துவமும் சகசமாகிய களங்கமாதல் போலக், கடலுக்குக்
கறுப்பும் உவர்ப்பும் சகசமாயுடனேதோன்றிய களங்கமென்பதும்
காண்க. இவ்விரண்டுமில்லாத தன்மையால் காஞ்சியை
அடைந்ததனால் கடல் இவை நீங்கப் பெற்றது என்பது உவமததின்
உள்ளுறை. நீக்கும் - என்றதும் காண்க. இவ்வாறே உயிர்களும்
தமது சில முயற்சிகளால் களங்கம் நீக்கிக்கொள்ளலாம் என்பதும்
குறிப்பு. பூசையும் பூசைக்குரிய அவசியமும் கூறிய பொருத்தமும்
காண்க. 87