1165.

ஆங்குவள ரெயிலினுடன் விளங்கும் வாயி
     லப்பதியில் வாழ்பெரியோ ருள்ளம் போல
வோங்குநிலைத் தன்மையவா யகில முய்ய
     வுமைபாக ரருள்செய்த வொழுக்க மல்லாற்
றீங்குநெறி யடையாத தடையு மாகிச்
     செந்நெறிக்க ணிகழ்வாய்மை திருந்து மார்க்கந்
தாங்குலவ நிலவிவள ரொளியா லென்றுந்
     தடநெடுவா னளப்பனவாந் தகைய                               வாகும்.  88

     (இ-ள்.) வெளிப்படை. அவ்விடத்தில் மதிலினுடன்
விளங்குகின்ற வாயில்கள் அந்த நகரத்தில் வாழும்
பெரியோர்களுடைய உள்ளம்போல ஓங்குதலும்
நிலைத்தலுமாகிய தன்மையுடையனவாகி, உலகத்தார்
உய்யும்பொருட்டு உமைபாகராகிய சிவபெருமான்
அருளிச்செய்த நல்லொழுக்கமல்லாது தீங்கு நெறிகள் அடையாத
தடைகளுமாகிச், செம்மை நெறியின்கண் நிகழும் வாய்மையுடன்
விளங்கும் ஆகமவிதிகள் தாம் பொருந்த நிலவி வளர்கின்ற
ஒளியினால் என்றும் பெரிய நீண்ட ஆகாயத்தை அளப்பன
போன்ற தன்மையுடையனவாகும்.

     (வி-ரை.) வாயில் - இது நகரத்தைச் சுற்றியுள்ள மதிலின்
வாயில்களைக் குறித்தது. இவை வேறு; ஆலயக் கோபுரவாயில்
வேறு. இவற்றையே கோயில் வாயில் என்றுரைப்பாரும் உண்டு.

     ஆங்கு- மதில் அகழியின் பக்கம். வாயில் - உள்ளம்போல்
- தன்மையவாய் - தடையுமாகி - அளப்பனவாம் தகைய ஆகும்
என்று முடிக்க.

     வாயில் பெரியோர் உள்ளம்போல் ஓங்கி நிலைத்த
தன்மைய
என்றதாம். ஒங்குதல் - நிலைத்தல் - பெரியோர்
உள்ளத்தின் தன்மைகள்; ஓங்குதல் - உயர்வையே நினைத்தலும், நிலைத்தல் - நடுநிலை பிறழாமையும் அசைவின்மையுமாம்.

     வாயில் ஓங்குதல் - உயர்ந்திருத்தல். வாயிலின்
நிலைத்தன்மை - நடுநிலையின் அமைந்திருத்தல். மனையின்
முன் பாகத்தை நவக்கிரகங்களுக்கும் பங்கிட நடுவில் நின்ற
புதனின் பங்கில் வாயில் வைத்தால் அது என்றும் ஓங்கும் என்பது
நம் நாட்டு மரபு. வாயில் நிலை- என்ற பெயர் வழக்கும் காண்க.
தன்னிடம் வந்தடையத்தக்க எல்லா உயிர்களையும் ஒப்ப உள்ளே
விடுதலானும் நடுநிலையில் நிற்பது திருவாயில் என்க. வாயில் -
வாயில்கள். சாதி யொருமை; ஆதலின் தன்மையவாய், தடையுமாகி,
அளப்பன ஆம் தகைய எனப் பன்மை வினைகள் கொண்டது.

     உமைபாகர் அருள்செய்த ஒழுக்கம் - ஆகமவிதிகளில்
விதித்த சிவநெறியொழுக்கம். ஏனையவெல்லாம் தீங்குநெறி
எனப்படும் என்க. "திருவீழி மிழலை யானைச் சேராதார்
தீநெறிக்கே சேர்கின் றாரே", "திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே" என்பனவாதி
திருத்தாண்டகங்கள் காண்க. தீங்குநெறி - ஆகம முதலிய
நூல்களால் விலக்கப்பட்டவை; வாயிலைக் குறிக்கும்போது
பகைவரால் இடையூறு வரும் வழிகள்.

     பெரியோர் உள்ளம் - சிவவொழுக்கமல்லாது தீயொழுக்கம்
உட்புகவிடாது, அதுபோல வாயிலும் நல்லொழுக்கம் உட்புகவிட்டும்,
அல்லொழுக்கம் உட்புகவிடாமலும் உள்ளது.

     செந்நெறி - செம்மைநெறி. சிவநெறி. திருந்து மார்க்கம் -
சன்மார்க்கம்.

     வளர் ஒளியால் - பெருவாயிலிற் றிகழ்கின்ற ஒளிகளால்
வானமும் விளங்குவதாகும். பெரியோர் உள்ளம் தன்னுள் வளரும்
வாய்மை ஞான ஒளியால் ஞானாகாயம் - சிதாகாசம் என்னும்
இறைவனுலகை அளக்கும் தன்மையுடையதாகும். "சுடர்மனக் குகை"
என்ற காஞ்சிப்புராணங் காண்க. 88