1166.
|
மாறுபெற
லருங்கனக மாட நீடு
மணிமறுகு நெடுந்தெருவும் வளத்தில் வந்த
வாறுபயி லாவணவீ திகளு மற்று
மமைந்தநக ரணிவரைக ணடுவு போக்கிக்
கூறுபடு நவகண்ட மன்றி மல்கக்
கொண்டவநே கங்கண்ட மாகி யன்ன
வேறொருமண் ணுலகுதனி லுளதா மென்ன
விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே. 89 |
(இ-ள்.)
வெளிப்படை. ஈடில்லாத அரிய பொன்மயமாகிய
மாளிகைகள் மிகவுமுள்ள அழகிய வீதிகளும், நீண்ட தெருக்களும்,
பற்பலவாற்றாலும் வந்த வளங்களும் பொருந்தி விற்கப்படும்
அங்காடி வீதிகளும், மற்றுள்ளவைகளும், அமைந்த அந்தநகரமானது,
அழகிய வரைகளை நடுவில் அமைத்து வெவ்வேறாகப் பிரித்திருக்கும் நவகண்டங்களேயன்றி
நெருக்கங்கொண்ட நேகங்கண்டங்களையுடைய வேறொரு பூமண்டலத்தைத்தன்னிடத்திற் கொண்டுள்ளதாம்
என்று
சொல்லும்படி விளங்குகின்ற மாலோகத்தின் தன்மையைப்
பொருந்தியது.
(வி-ரை.)
மணிமறுகு - நெடுந்தெரு - ஆவணவீதி - மற்றும்
என்பன பலவகைப்பட்ட வீதிகளைக் குறித்தன. மறுகு - தெரு -
வீதி என்பன ஒரு பொருள் குறித்த பல சொல்லாயினும் இங்குப்
பலவகை வீதிகளைக் குறிக்க இவ்வாறு பல சொற்களால் கூறினார்.
1177-ம்,முன் இதுபோல் வந்த பிற இடங்களும் காண்க.
மாட நீடு மறுகு - என்றதனால், நெடுந்தெரு
என்பது
பெருமாளிகைகளில்லாத சாதாரண வாழ்க்கையுடைய வீடுகள்
கொண்டதென்பதாம்.
ஆறு
வந்த வளத்திற் பயில் என்க. ஆறு-
வழி. மலைபடு
பண்டம் முதலியனவாகப் பல நிலங்களினின்றும் வரும் வகை.
அணிவரைகள்
- அழகிய வீதிகள் இரேகைகள் போன்று
நகரத்தைப் பல பிரிவுகளாகப் பிரிப்பதனால் இவற்றை வரைகள்
என்றார். வீதிகள் அழகு பொருந்த நீண்டு ஒழுங்குபட
அமைந்திருத்தல் நகர அமைப்பின் சிறப்ாகும்.
வரைகள்
நடுவு போக்கிக் கூறுபடு நவகண்டமன்றி -
வரைகள் - மலைகள்; பெருமலைகளே நிலவுகலத்தைக்
கண்டங்களாகப் பிரிப்பன; அதுபோல் வீதிகள் நகரத்தைப் பல
கண்டங்களாகப் பிரித்தன என்றும், இங்கு வரைகள் என்பது
மலைகளைப்போன்ற மாடங்களை யுணர்த்தின என்றும்
கூறுவாருமுண்டு. கண்டங்களை வகுக்கும் பெருமலைகள் ஏழு
என்ப. அவை - இமயம், ஏமம், நிடதம், நீலம், சுவேதம்,
சிருங்கம், கந்தமாதனம் என்பன.
நவகண்டமன்றி
- அநேகம் கண்டமாகி - ஒன்பது
கண்டங்களேயல்லாமல் அநேகங் கண்டங்களாகப் பிரிந்து
காணப்படுவதால் என்க. நவகண்டங்களாவன - பரதகண்டம்,
கிம்புருகண்டம், அரிவருடகண்டம், இளாவிரதகண்டம்,
இரமியகண்டம், இரணியகண்டம், குருகண்டம்,
கேதுமாலகண்டம், பத்திராசுவகண்டம் என்பன.
மகாலோகம்
- மேலேழுலகங்களுள் ஒன்று. அனேகம்
உலகங்களைக் கொண்டது. மெய்பற்றி எழுந்த உவமம். பூமியில்
பரதகண்டம் முதலிய ஒன்பது கண்டங்கள் உள்ளதேபோல்,
நகரங்களில் ஒன்பது கோள்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
கண்டம் பொருந்துமாறு ஒன்பது கண்டாக அமைக்கப்படுவதும்
ஒரு மரபு.
அன்றே
- ஏ- அசை. 89
|