1167.
பாகமருங் கிருபுடையு முயர்ந்து நீண்ட
     படரொளிமா ளிகைநிரைகள் பயின்மென் கூந்தற் றோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின்
     சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி
மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு
     மருங்குதா ரகையலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை
     மேனதிகள் பலமண்மேல் விளங்கி                                 யொக்கும். 90

     (இ-ள்.) வெளிப்படை. பகுக்கப்பட்ட இருபக்கங்களிலும்
உயர்ந்து நீண்ட பரந்த ஒளியை வீசுகின்ற மாளிகைகளின்
வரிசைகளில் பயிலும் மெல்லிய கூந்தலினையுடைய பெண்களின்
கூட்டங்கள் அலங்காரத்தின்பொருட்டு அசையும்படி தொங்கவிட்ட
குளிர்ந்த தன்மையுடைய முத்துமாலைகளின் ஒளிப்பிழம்பு மிக்கு
வீசும்வீதியானது, ஆகாயத்தில் நெருங்கிய ஒளிதழைக்கும்படி
நிலைத்து விளங்கும் பக்கத்தில் எல்லையில்லாத நிறங்களையுடைய
நட்சத்திரங்கள் அலையும்படி மேகங்களை இடையிற் கிழித்து
ஒழுகி வருகின்ற தெய்வக்கங்கை முதலிய மேல் நதிகள் பலவும்
இந்நிலவுலகத்தில் விளங்குவதனை ஒத்திருக்கும்.

     (வி-ரை.) (1) படரொளி - மாளிகை- விண்ணொளி
தழைப்பன; (2) தோகையர்தம் கூந்தல் அலைதல் - வரம்பில்
வண்ணம் மேகம் காட்டின; (3) அலையத்தூக்கு முத்தின்
சுடர்க்கோவை
- தாரகை அலைதல் போன்றன; (4)
குளிர்நீர்மை துதைந்த
வீதி - மேகங் கிழித்தொழுகும் தெய்வக்
கங்கை மேல் நதிகள் பல மண்மேல் விளங்கியன போன்றன -
என்றிவ்வாறு இந்த உவமையின் பகுதிகளைத் தனித்தனி வைத்துப்
பிரித்துக் கண்டுகொள்க.

     தூக்கு குளிர்நீர்மை முத்தின் கோவைச் சுடர் என்க.
முத்துமாலைகளைத் தூக்குதல் அணிசெய்தற்பொருட்டு. நீர்மை -
மணிகளின் இயற்கை ஒளிப்பிழம்பு. முத்துக்கள் குளிர்ந்த
நீர்மையுடைய ஒளியையுடையன. நீரோட்டம் என்பர். முத்தின்
சுடர்
- குளிர்ச்சியுடையது என்பார் குளிர்நீர்மை என்றார். 492 -
பார்க்க.

     தெய்வக் கங்கை - தேவதேவனது திருமுடியினின்றும் போதருதல் குறித்தது. தன்னுட் படிந்தோர் மலநீங்கி முத்திபெறச்
செய்தலால் தெய்வத்தன்மையுடைய என்று கூறினும் அமையும்.
மேல்நதிகள் - கங்கையிலிருந்து பிரிந்த பல ஆறுகள். இவைபல
வீதிகளுக்கு உவமிக்கப்பட்டன.

     1165-ல் வாயில் வானளப்பன என்றார்; 1166-ல், அவ்வாறு
வாயில் வானளப்பன ஆயின் வானம் முதலிய பல உலகுகளும்
இங்குப் பொருந்துவனவோ? எனின், ஆம்; இந்நகர் அனேகம்
கண்டமாகி மாலோக நிலைமேவிற்று என்றார் 1167-ல், அவ்வாறு
பல உலகங்களும் கூடும் மாலோகநிலை மேவுமாயின், அந்த
மேலுலகத்திலுள்ள ஆறுகள் இங்குக் காணப்படுவனவாமோ?
எனின், ஆம்; தெய்வக்கங்கை மேனதிகள் பல மண்மேல்
விளங்கியொக்கும் என்றார் என இம்மூன்று பாட்டுக்களும்
தொடர்பாகி வரும் தெய்வக்கவி நலமும் காணத்தக்கது.

     விளங்கினால் ஒக்கும் என்பது விளங்கி யொக்கும்
எனத் திரிந்து நின்றது.

     விளங்கி ஓங்கும் - என்பதும் பாடம். 90