1168.
கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு,
     கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக்
கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை
     குலவயிரத்தா லமைத்த கொள்கை யாலே,
யளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி
     யகழ்ந்தேன மானானு, மன்ன மாகி
வளர்விசும்பி, லெழுந்தானும் போல நீடு
     மாளிகையு முளமற்று மறுகு தோறும். 91

     (இ-ள்.) வெளிப்படை. வேறு அந்த வீதிகள்தோறும் சில
மாடங்கள் ஒளிகிளரும் செம்பொன்னின் மயமாய்ச் செய்யப்பட்டுப்
பக்கத்தில் கீழ்நிலையில் நீல மணிகளழுத்திய படிகளையுடையனவாய்,
மேல் நிலையில் ஓர் பக்கத்தில் சிறந்த வயிரமணி வகையால்
அமைத்த சாளரத்தைக் கொண்டிருக்கின்றமையாலே, அளவில்லாத
ஒளிப்பிழம்பாகி நின்ற சிவபெருமானுடைய அடியினையும்
முடியினையும் தேடிக் காணும்பொருட்டு வராக வடிவங்கொண்டு
நிலந்தோண்டிச் சென்ற விட்டுணுவும், அன்னவுருக்கொண்டு பறந்து
சென்ற பிரமனும்போல நீடியுள்ளன.

     (வி-ரை.) (முன்பாட்டிற் கூறியபடி) கங்கையின் கிளைநதிகள்
போன்று விளங்கிய பல வீதிகளில் பல மாளிகைகள் விளங்கின;
அவை தூய செம்பொன் மயமான ஒளி வீசும்படி அமைந்திருந்தன;
அவற்றின் கீழ்நிலையில் ஓர் பக்கம் நீலநிறமமைந்த படிகளும்.
மேல்நிலையில் வயிர ஒளி வீசும்படி அமைந்த சாளரமும் விளங்கின;
கீழேயுள்ள நீலப் படிகள்கரிய திருமாலைப்போலவும்,
மேல்விளங்கிய வயிரவொளிச் சாளரம் வெள்ளையன்னமாகிய
பிரமதேவனைப்போலவும் தோன்றின; இத் தோற்றம் ஆயிரத்தெட்டு
மாற்றாகி ஒளிவிடும் செம்பொன்போல விளங்கிய சிவபெருமானை
மாலும் பிரமனும் முறையே கீழும் மேலும் தேடிச்செல்வதுபோல
விளங்கிற்று என்பதாம்.

     ஒளிச் செங்கனக மயம் - செம்மேனியம்மானுடைய ஒளி.
"ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்" என்பர் தாயுமானார்.
தூய பசும்பொன் செம்மை நிறம் மிக்கிருக்கு மென்ப.

     சோபானம் - படிகள். கன்னசாலை - உயர்நிலையில்
அமைக்கும் சாளர வாயில். மேன்மாடத்தில் முன்புறம் காதுபோல
நீண்டிருக்கும் பரண்கூடு. கன்னம் - காது. இது மேனிலையிலும்,
சோபானம் கீழ்நிலையிலும் அமைக்கப்படுவன.

     கொள்கை- கொண்டிருத்தல். கை - தொழிற்பெயர் விகுதி.

     ஏனம் ஆனானும் - அன்னமாகி எழுந்தானும் போல,
நீலச் சோபானமும் வயிரக்கன்ன சாலையும் தோன்றின என்று
முறையே நிரனிறையாக உவமைகளைக் கூட்டுக.

     நீலச் சோபானமும் வயிரக் கன்னசாலையும்
மாலுமயனும்போல் வன என்ற ஆற்றலினால் ஒளிச்செங்கனக
மயமாடங்கள்
பொன்னொளிப் பிழம்பாகிய சிவபெருமானை
நினைவூட்டின என்பது கருதப்படும். முன்னவற்றை வெளிப்பட
உவமை முகத்தாற் கூறிய ஆசிரியர், பின்னதனைக் கருதலனளவயாற்
பெறவைத்தது அவரது தெய்வக் கவிநல மாண்பாகும். என்னை?
இறைவன் "தனக்குவமையில்லாதான்" ஆதலின் உவமை கூறுதல்
அமையாது என்பதும், இறைவருண்மை (இருப்பு)
காட்சியளவையாலன்றிக் கருதல் - உரை என்கின்ற அளவைகளாலே
பெறப்படும் என்பதும் ஞானசாத்திர முடிபாதலானும், மாலும் அயனும்
தேடியபோது இறைவர் வெளிப்பட்டும் அறியவாராது மறைந்து
நின்றாராதலானும் இவ்வாறு உவமையால் உய்த்துணரவைத்துக்
கூறினாரென்க. காவிரியைப் பிரமனுக்கும் அடியவர்க்கும் உவமித்த
ஆசிரியர் அதனை இறைவரது முடியினின்று வரும் கங்கைக்கும்
அம்மையாரது கருணையினொழுக்கத்துக்கும் உவமித்ததன்
உள்ளுறையினையும் இங்கு நினைவு கூர்க. 54 - 57 பாட்டுக்கள்
பார்க்க. அவ்வாறே இங்குக் கங்கையும் பிரமனும் மாலும் (வரும்
பாட்டில்) அடியவருமேஉவமிக்கப்பட்ட தெய்வக்கவி மாண்பும்,
வேறு பதார்த்தங்கள் பாராது பரமே பார்த்திருக்கும் ஆசிரியரது
திருவுள்ளத்தின் மாண்பும் குறிக்கொள்க.

     கனகமயம் - நீலம் - வயிரம் - செம்பொன் ஒளி வீசுமாறு
மாடங்களைச் சுதை போக்கி அமைப்பதும், நீலம் கருமை நிறம்
வீசப் படிகளமைப்பதும், சாளரம் வெண்ணிற ஒளி பொருந்த
அமைப்பதும் இந்நாளிலும் இயல்பிற்காணும் காட்சியாகும்.

     முன்பாட்டிற் கங்கையினை உவமித்தாராதலின், அக்கங்கை
சூடிய பெருமானது தோற்றமும் இங்குக் காணப்படுமோ? எனின்
ஆம் என்று கூறுவார் போன்று, அது அவரைத் தேடிய அயன்
மால் என்ற இவர்களின் தோற்றத்தால் அறியக்கிடக்குமென
இப்பாட்டினாற் கூறினார். அவ்வாறு பெருமானது தோற்றம்
காணப்பெறுமாயின் அதனைக்கண்டு போற்றி நிற்கும்
அடியார்களது காட்சிகளும் உளவாமோ? எனின், அவையும் உள
என்ற கருத்து மேல்வரும் (1169) பாட்டால் கூறிய உவமத்தொடர்
கருத்தும் காணத்தக்கது.

     மாளிகைகள் உள மற்ற - என்பதும் பாடம். 91