(இ-ள்.)
வெளிப்படை. ஒளி வீசுகின்ற பல மணிகள்நெருங்கிய
வெள்ளிய மாடங்களின்மீது மேற்பதித்த சந்திரகாந்தக் கற்கள்
ஆகாயத்தில் பொன்னைப் போன்ற செக்கர் நிறமுடைய
அந்திமாலையில் தோன்றும் பிள்ளை மதியாகிய மூன்றாம்
பிறைச்சந்திரனைக் கண்டு உருகிச்சொரிந்த நீரினால், வலிய
புலித்தோலாடையினை உடுத்த
திருவேகம்பருடைய வளர்ந்து நீண்ட
சடையினையும் அவர் அச்சடைமேற் சூடிய இளம்பிறையினையும்
கண்டு கும்பிட்டு அன்பினால் உருகி உடம்பெல்லாம் கண்ணீர்
வழியநிற்கும் அடியவர்களையும் ஒத்திருக்கும் மாடங்கள்
அளவில்லாதன உள்ளன.
(வி-ரை.)
தவளமாடம் - நீறுபூசிய அடியாரையும்,
மிசைப்பயில் சந்திரகாந்தம் - செக்கரையும்
பிறையையும் காணும்
கண்களையும், (சந்திரகாந்தம்) மதிகண்டு நீர் பொழிதல் -
சிவன்றிருக் கோலங்கண்டு அவ்வடியார் உருகிக்
கண்ணீர்பொழிதலையும், செக்கரும் பிறையும் சிவபெருமானுடைய
செஞ்சடையையும்அதன்மேற் சூடும் பிறையையும் போல்வன என்று
உவமை கண்டு கொள்க.
தவள
மாடம் - இவை வேறு; முன்பாட்டிற் கூறிய
செங்கனகமய மாடங்கள் வேறு.
சந்திரகாந்தம்
- சந்திரனது கதிர்கள்மேற் றாக்கும்போது
நீர்கசியும் இயல்புடைய ஓர் வகைக் கல்.
செக்கர்நிறப்
பொழுதுதோன்றும் புனிற்றுமதி - புனிறு-
ஈன்றணிமையானது. மறைமதிக்கு மூன்றாம்நாள் மேற்றிசையில்
தோன்றத் தொடங்கும் மதிக் கீறு குறித்தது. செக்கர்நிறப்பொழுது
- செந்நிறமுள்ள அந்திமாலைப் பொழுது. "குடதிசை மதியது சூடு
சென்னி" (வியாழக்குறி - கடைமுடி - 6) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரங் காண்க.
செக்கர்மாலையிற்
பிறையினைக்கண்டு நீர் கசியப்பெறும்
சந்திரகாந்தத்தினை மேற்பதித்த மாடங்கள், செக்கர்போன்ற
சடையினையும் அதிற் சூடும் பிறையினையும் கண்டு அவற்றால்
இறைவருடைய கோலத்தினை உள்ளே கண்டு கொண்டு கண்ணீர்
பொழியும் அடியார் போல உள்ளன என்க.
செக்கர்
- சிவபெருமானது சடைக்கற்றை போன்றது என்பது
மாலையின், றாங்குருவே போலும் சடைக்கற்றை" என்ற (அற்புதத்
திருவந்தாதி) அம்மையார் திருவாக்கானு முணர்க.
மாடங்கள்
அடியவரும் போல்வன - என்றது மெய்யும்
வினையும்பற்றி வந்த உவமம். அடியவரும் -
உம்மை உயர்வு
சிறப்பு. முன்பாட்டிற்கூறிய தன்மையல்லாமல் இதுவும் என இறந்தது
தழுவிய எச்சவும்மை என்றலும் பொருந்தும். 92