820.
நினைத்தார் வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கு
மினத்திடைப் பிரிந்த செங்க ணேறென
                       வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநா யகன்பால்                                    வைத்த
மனத்தினுங் கடிது வந்தம் மருந்துகள் பிழிந்து
                               வார்த்தார்.
171

     (இ-ள்.) வெளிப்படை. (திண்ணனார் மருந்து
மூலிகைகளையும் அவையிருக்குமிடங்களையும்) எண்ணியவராய்
வேறுவேறு நெருங்கிய காடுகளில் எங்கும், தன்னினத்தினின்றும்
பிரிந்த செங்கண்ணுடைய இடபத்தினைப்போல, வெருட்சியுடன்
போய்ப் புனங்களில் மருந்து மூலிகைகளைப் பறித்துக்கொண்டு,
பூதநாதனாகிய காளத்தியப்பரிடம் தாம்வைத்த மனத்தின்
வேகத்தினும் மிக்க விரைவாகத் திரும்பிவந்து அந்த மருந்துகளைப்
பிழிந்து அவருடைய கண்ணில் வார்த்தனர்.

     (வி-ரை.) நினைத்தனர் - நினைத்தனராகி. முற்றெச்சம்.
நினைத்தனர் பறித்து எனக்கூட்டுக.

     வேறுவேறு வனங்கள் - வெவ்வேறாகிய - வெவ்வேறு
வகைப்பட்ட காடுகள். நெருங்கிய - மரஞ் செடி கொடிகளடர்ந்த;
எங்கும் - எங்கெங்கும் - முழுதும்.

     இனத்திடைப் பிரிந்த செங்கண்ஏறு என - செங்கண்
ஏறு
- இங்கு இடபஏற்றினைக் குறித்தது. வெருக் கொள்ளுதல் -
எதிர்பாராது சடுதியில் நேர்ந்த பயத்தால் வெருண்டு
மருட்சியடைதல். வெருவுதல் - பயப்படுதல். உலகவழக்கில் இதனை
விருக்கென்று பயந்து என மருவி வழங்குவர். தன் இனத்தினின்று
பிரிந்த இடபம் இவ்வாறு வெருண்டு கண் சிவந்தும் காது கூப்பியும்
இனம் இருந்த திசை நோக்கித் தேடியும் அலறியும் ஓடுதல்
கண்கூடாதலின் அதனை உவமித்தார். ஏறு - வீரத்தினைவிடாத
தன்மையும் குறிப்பதாம். இது மெய்யும் தொழிலும் பற்றிய உவமை.

     இனத்தினைப் பிரிந்த - என்ற உவமைமுகத்தாற்
காளத்தியப்பரைத் திண்ணனாருக்கு இனம் என்பதும், ஏறு -
பக்குவான்மா என்பதும் குறிப்பாம். இனம் - அவ்வர்க்கம் கூடி
அமைதி பெறுதற்குரியதாய், அதற்குச் சுகந்தருவதாய், அதன்
தலைமையதாய்ச், சித்தாயுள்ள பசுபதியைக் குறிக்கும். பக்குவப்பட்ட
ஆன்மாக்கள் தாம் சேர்ந்திருந்த பதியினைப் பிரிந்தால் இவ்வாறு
வெருக்கொண்டு அலைவர் என்ற உண்மை நூற்கருத்தும் இங்குப்
புலப்படுதல் காண்க. செங்கண் என்பதும் உயிரின் செம்மையாகிய
பக்குவக் குறிப்பு. இதன் விரிவு சிவஞானபோதம் 8 - ம்
சூத்திரத்துள்ளும், பிறாண்டும் கண்டுகொள்க. மாணிக்கவாசக
சுவாமிகள் "ஐயனே நினைப்பிரிந்து மாற்றகில்லேன்" (வாத - உப -
பட, 55), என்று அலறியசரிதம் காண்க. ஆளுடைய பிள்ளையார்
புராணத்தினுள் "தொடர்ந்தபிரி வுணர் வொருகாற்,
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போலழுவர் குறிப்பயலாய்"
(55) என இவ்வாறே கூறுதல் காண்க. "எத்தனைநாள் பிரிந்திருக்கே
னென்னாருர் இறைவனையே", "எவ்வண நான் பிரிந்திருக்கேன்",
"எங்குலக்கப் பிரிந்திருக்கேன்", "எங்ஙன நான் பிரிந்திருக்கேன்",
"எப்பரிசு பிரிந்திருக்கேன்", "என்னாகப் பிரிந்திருக்கேன்",
"எற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்", என்று ஆளுடைய நம்பிகள்
(திருவாரூர் - பழம்பஞ்சுரம்) பாசுரந்தோறும் பலப்பலவாறு பரிந்து
இரங்கியதும் காண்க.

     நினைத்தனர் - பறித்து - இவையிரண்டற்கும்
செயப்படுபொருள் வருவிக்க.

     பூதநாயகன் - சிவபூதங்கள் முதலிய கணங்களுக்கெல்லாம்
தலைவன். கோடி கோடி குறட்சிறு பூதங்கள் (16) சுற்றி ஆடவும்,
பாடவும், ஏவல் செய்யவும் அவைகட்கெல்லாம் தலைவராய்ச்
சிவபெருமான் வீற்றிருப்பர் என்பது வேத சிவாகமங்களா
னறியப்படும் உண்மை. "பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்ற",
"பாரிடங்கள் பணிசெய்ய" (தேவாரம்), "ஓவா வணுக்கச் சேவகத்தி
லுள்ளோர் பூத கணநாதர்..." (ஏயர்கோன் - புரா - 332) முதலிய
எண்ணிறந்த திருவாக்குக்களும், "பூதபதயேநம" என்ற
சிவாஷ்டோத்தரமும் காண்க. பூதம் - உயிர்கள் என்று கொண்டு
உயிர்க்குயிராய் நின்று இயக்கும் தலைவன் என்றலுமாம்.
"பூதம்யாவையி னுள்ளவர் போதென", "பூதபரம்பரை" என்பன
காண்க.

     பூதநாயகன்பால் வைத்த மனத்தினும் கடிது - மனவேகம்
மிகக் கடிதிற் செல்வது. "வாயுவேகம் மனோவேகம்" என்ற வழக்கும்
காண்க. திண்ணனாரது மனம் வேறெங்கும் செல்லாது
பூதநாயகனிடமே செல்லுதலால் அவர் பால் வைத்த என்றார்.
மருந்து தேடிப் பறித்தபின் மிக வேகமாய் நாயகனிடம் சென்ற
குறிப்புப் பெற மனத்தினும் கடிது என்றார். முன்னே "நாணனு மன்பு
முன்பு நளிர்வரை யேற" (752) என்றபடி அன்பு முன்போய்த்
திண்ணனாரை இழுத்துச் செல்ல அவர் அதனைப் பின்பற்றிப்
போயினர். இங்கு அந்த மனத்தினும் மருந்து பிழிந்துவார்த்துப்
புண்தீர்க்கும் ஆர்வம் மிக்கதால் அவர் சென்ற செல்கையின் வேகம்
மிக்கது. மனம் வருதற்குமுன் இவர் வந்தனர் என்பது. எண்ணம்
முற்றுவதற்கு முன் அதனாற் றூண்டப்பட்ட செயல் முற்றியதெனச்
செயலின் விரைவு குறித்தபடியாம்.

     மனத்தினும் - இன் - உறழ்பொருளில் வந்த ஐந்தனுருபு.
உம்மை உயர்வு சிறப்பு.

     அம்மருந்துகள் பிழிந்து வார்த்தார் - தேடி - நினைத்து -
பறித்து - கொண்டு - கடிது வந்த - அந்த என அகரம் முன்னறி
சுட்டு. பிழிதல் - வார்த்தல் - மருந்து மூலிகைகளாகிய
பச்சிலைகளை ஏற்றவாறு பிழிதலும் குருதிபொங்கும் புண் உள்ள
இடம் தெரிந்து வார்த்தலும் மருத்துவம் செய்யும் முறைகள்
குறித்தன. "நோய்நாடி நோய் முதனாடி யதுதணிக்கும், வாய்நாடி
வாயப்பச் செயல்" என்ற திருக்குறளும் அதன் கீழ் ஆசிரியர்
பரிமேலழகருரைத்தனவும் இங்கு நினைவு கூர்க. இம்மருத்துவ முறை
திண்ணனார்க்கு முன் அனுபவ வாசனையால் நேர்ந்த அறிவு.
இம்மருந்து இலைகளைச் சல்லியகரணி என்பர் வடநூலார்.
(சல்லியம் - அம்பு, ஈட்டி). இத்தகைய சல்லியகரணி முதலிய பல
மூலிகைகள் மலைகளில் உள்ளன என்று இராமாயணம் கூறும்.

     பிசைந்து வார்த்தார் - என்பதும் பாடம். 171