1170.
முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகு
     முழுப்பளிங்கின் மாளிகைகண் முற்றுஞ் சுற்று
நிகரில்சரா சரங்களெல்லா நிழலி னாலே
     நிறைதலினா னிறைதவஞ்செ யிமயப் பாவை
நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட
     நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கு
மகிலயோ னிகளெல்லா மமைத்து வைத்த
     வரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும். 93

     (இ-ள்.) வெளிப்படை. மேகங்கள் உராய்கின்ற கொடிகள்
கட்டிய சிகரங்களையுடைய முழுதும் பளிங்குக் கற்களாலமைந்த
மாளிகைகளைச் (வெளிப்பக்கம்) சுற்றுகின்ற சரங்களும் அசரங்களும்
ஆகிய எல்லாம், நிழல்படுதலினால் உண்டாகிய பிரதிபிம்பங்கள்
மூலமாக நிறைதலினால், நிறைதவத்தைச் செய்யும்
பார்வதியம்மையாரது முலைச்சுவடும் வளைத்தழும்பும்
அணிந்துகொண்ட திருவேகாம்பரநாதர் பிரமதேவனுக்குப் படைப்புத்
தொழிலுக்காகக் கொடுக்கும் படியான எல்லாச் சீவராசிகளையும்
ஒருங்கே சேர்த்துவைத்த அரிய பெரிய கருவூலத்தின்
நிலைகொண்டன போன்றனவாகும்.

     (வி-ரை.) நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும் -
சிவபெருமான் பிரமதேவனுக்கு வேதமோதுவித்து இக்காஞ்சியைப்
பார்த்துப் படைப்புத்தொழில் செய்வாயென்று காட்டினர் என்றஇத்தல
வரலாற்றினை இங்கு நினைவு கூர்க.

     இவ்வரலாறுபற்றி முன் உரைத்தவை பார்க்க. படைப்புத்
தொழிலினுள்ளே படும் சீவராசிகளையெல்லாம் பிரமதேவனிடம்
நல்குவதற்கு இங்கு அமைத்துவைத்தது போலும் என்பதாம்.

     1167-ல் முத்துமாலைகள் தூக்கிய மாடங்களும், 1168-ல்
செம்பொன் ஒளிவீசும் மாடங்களும், 1169-ல் தவள மாளிகைகளும்,
கூறி, இப்பாட்டில் முழுப் பளிங்கின் சுடர் மாளிகைகளைக்
கூறும் பொருத்தமும் கண்டுகொள்க.

     மாளிகைகள் முற்றும் சுற்றும் - பளிங்கு மாளிகைகளின்
புறத்திற் சுற்றும் சராசர அண்டங்களின் நிழல் பிரதிவிம்பமாகக்
காணப்பட்டன; ஆதலின் அவை (மாளிகைகள்) யோனிகள் எல்லாம்
பொருந்தும் கருவூலம்போல விளங்கின; அக்காட்சி பிரமதேவனுக்குப்
படைக்க நல்கும் பண்டாரம்போன்றது என்றதாம். மாடங்கள்
பண்டாரநிலை மேவின
என்பது மெய்பற்றிவந்த உவமம்.

     சுற்றும் சராசரங்கள் - உலகமும் அண்டங்களும் சுற்றிச்
சுழன்று சூழ்வருவன என்னும் வானசாஸ்திர உண்மையினை
நினைவுகூர்க.

     நிழல் - பிரதிவிம்பம். நகில் - முலை. பண்டாரம் -
கருவூலம்.

     நிறைதவம் செய் - அம்மையாரது செய்தவமே
நிறைவுடையது; என்றைக்கும் நித்தியமாகிய சிவபூசையைச்
செய்துகொண்டேயிருக்கும் பயன்றருதலால் என்க.

     நகிலுழுத சுவடும் வளைத்தழும்பும் பூண்ட நாயகனார் -
1143 - 1145 பார்க்க. 93