1171.
| பொற்களப
மாளிகைமேன் முன்றி னின்று
பூங்கழங்கு மணிப்பந்தும் போற்றி யாடும்
விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி
விழுவனவுங், கெழுவுதுணை மேவு மாதர்
அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்து
மணிமணிச்சே டியர்தொகுக்கு மவையு, மாகி
நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை
நவமணிமா ரியும்பொழியு நாளு நாளும். 94 |
(இ-ள்.)
வெளிப்படை. பொன்மயமாகிய களபச்சாந்துடைய
மாளிகைகளின் மேல் முன்றிலில் நின்று மெல்லிய கழங்குகளையும்,
அழகிய பந்துகளையும் இறைவரது புகழ்களைப் போற்றிக்கொண்டு
ஆடுகின்ற விற்போன்ற புருவமுடைய கொடிபோன்ற
மடவார்களுடைய அணிகலன்களிற் சிதறி விழுகின்ற
பொற்பணிகளும், தழுவும் நாயகர்களுடன் கூடிய பெண்கள்
அன்பு முதிரும் கலவியில் அன்பு மிகுதியாகிய செயல்களினாற்
சிந்தும் அணிகளினின்றும் வீழ்ந்து சேடிமார்களாற் கூட்டிச் சேர்த்த
மணிகளும் ஆகி இவ்வகையில் நல்ல பொன் மழையேயில்லாமல்
நவமணிமாரியும் பலநாளும் பொழியும் (அந்நகரில்).
(வி-ரை.)
பொற்களபம் - மாளிகைகளுக்குப் பூசும்
பொற்களபச் சாந்து. பொன் - பொற்றூளும் நிறமும் குறித்தது.
பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி ஆடும் விற்புருவக்
கொடி மடவார் - போற்றி - இறைவர் தன்மையை என்று
செயப்படுபொருள் வருவிக்க. "நொம்
பைந்து புடைத்தொல்கு
நூபுரஞ்சேர் மெல்லடியார், அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய்
பூங்காழி" (சீகாமரம் - சாய்க்காடு - 11) என்றும், "இறைவனது
தன்மைபாடிக், கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே" (மேகரா - 2) என்றும் வரும் ஆளுடைய
பிள்ளையார் தேவாரங்கள் காண்க. மனை முன்றில்களில் வியர்வை
எழப் பந்தாடுதல் முன்னாளில் மகளிர்கள் தமது உடல் நலத்திற்கும்
உடல் மென்மைக்கும் ஏற்ப விளையாடும் விளையாட்டுக்களுள்
ஒன்றாயிருந்தது. கழல் ஆடுதலும் இந்நாளில் வழக்கொழிந்து
வருகின்றது. கழல் - கழற்சிக்காய். விற்புருவம் -
வில்போன்ற
புருவம் மெய்பற்றி எழுந்த உவமம். போற்றி -
விளையாட்டுக்களைப் பாராட்டி என்பாருமுண்டு.
கொடி
மடவார் - கொடிபோன்ற இடையையுடைய மடவார்
என்றலுமாம். கொடி, மடவார்க்கும் இடைக்கும் மெய்பற்றி
உவமிக்கப்படும்.
கெழுவுதுணை.......கலவி
- தமது துணைவர்களுடன் -
கணவர்களுடன் - அன்பு மிகுதியினாற் கூடிய கலவித்துறைகளில்
ஊடலும் - பின்னர்க் கூடலும் - என்ற இவை முதலியவற்றால்
மகளிர்களின் அணிகளினின்று மணிகள் சிந்துவன என்க.
அன்புமுதிர்ந்த காமவிகாரத்துட்பட்ட செயல்களானமையின் அன்பு
எனப்பாலது அற்பு என்று வலித்தல் விகாரமாயிற்று.
நற்கனக
மழையன்றி - காஞ்சியில் முன்னொரு காலத்தில்
முகல்கள் பொன்மாரி பெய்தன என்றதொரு வரலாறுமுண்டு.
அந்தப் பொன்மழையே யன்றி என்ற குறிப்புமாம். அன்றியும்
மேகங்கள் நீர் - பொன் - மணி -முத்து - தீ - மண்
முதலியவற்றைப் பெய்யுமென்பதும் நூல்களால் அறியப்படும்.
நாளும்
நாளும் - மேல் இருவகைகளைப் புகுத்தாராதலின்
நாணாளும் என்னாது நாளு நாளும் என்று பிரித்துக் கூறினார்.
அந்நகரில் பொழியும் என வருவித்துக் கொள்க.
சிந்தி விழுவனவும்
- தொகுக்கும் அவையும் ஆகிக்
கனகமழையன்றி- நவமணிமாரியும் பொழியும் (அந்நகரில்) என்க.
94
|