(இ-ள்.)
வெளிப்படை. திருமகளுக்கு இருப்பிடமாகும் என்று
சொல்லப்படும் தகுதியினையுடைய பொன் மாடங்களின் மேல் நிலா
முற்றங்கள் அழகு பொருந்தி விளங்க நின்று பெரிய
மகரகுண்டலங்களை அணிந்த பெண்கள், தங்களுடைய நாயகர்கள்
அங்கு வந்து ஏறு முன்னர் நறியவாசனையுடைய நீரினால்
வண்டலாட்டயர்ந்து விளையாடுதற்காகத், தூயமணிகளிழைத்த
அழகாகச் செய்யப்பட்ட உள்துளைகளையுடைய நீர்தூவும்
துருத்தியினின்றும் வீசும், ஒளி விடுகின்ற செங்குங்குமம்பூக் கலந்த
பனிநீர்த் துளிகள் தோய்ந்துள்ள, அழகிய மணிகள் கட்டிய போபுர
நாசிகையின் பக்கத்தில் தங்கும் கருமுகில்கள் செந்நிற
மேகங்களாகித் தோன்றுவன.
(வி-ரை.)
பூமகள் - செந்தாமரைப் பூவில் இருக்கும்
திருமகள்.இலக்குமி. "பூவி னாளென வருதலிற் பூம்பாவை
யென்றே, மேவு நாமம்" (திருஞான புராண - 1044) என்றது
காண்க.
பூமகளுக்கு
உறையுள் என- இலக்குமியின் இருப்பிடம் இது
என்றது மிக்க செல்வத்தின் நிறைவு குறித்தது. பின் சொல்லும்உவமப்
பொருள்களின் தகுதி காட்டுதற்கு இவ்வாறு கூறினார். உறையுள்
-
தங்கும் இடம்.
அரமியம்
- நிலாமணி முற்றம். "மாளிகையின் மேலால், ஏறி ... மணி நிலா முன்றின்
மருங்கு" (316) என்றது பார்க்க.
மைந்தர்
வந்தேறுமுன் துருத்தி வீசும் குங்குமநீர்த்
துவலை தோய்ந்த நாசிகை - என்றது மாதர்கள், மாடங்களின்
மேனிலையில் நிலாமணி முற்றத்தில் எங்கும், துளையுடைய
பொன்துருத்திகளாற் செங்குங்கும நீர்த்துவலைகள் வீசி வைத்தனர்;
அதனை அவர்கள் தமது நாயகர் அங்கு ஏறி வருமுன்னர்ச்
செய்தனர்; அவ்வாறு முன்னர்ச் செய்தது அவர் வரும் போது
வண்டல் ஆடுதற்கு ஆயத்தமாயிருக்கும் பொருட்டாம்;
அப்படி வீசப்பட்டு மாடத்தின் நாசிகையில் தோய்ந்திருந்த
செங்குங்கும நீர்த்துளிகளை அங்குத் தங்கிய கருமுகில்கள்
தோய்ந்ததனால் செந்நிற முகில்களாகிக் காட்டின என்பதாம்.
பொன்புனை நாளத்துருத்தி - நாளம் - நீண்ட தண்டு.
பொன் - செல்வ நிறைவு குறித்தது. பொன்னாற்
செய்யப்பட்ட
உள் துளைகளையுடைய நீர்வீசும் துருத்தி. water spray -
sproutஎன்பர் நவீனர். நீரை அதிகமாக வீழ்த்தாமல் மூக்கின்
சிறு துளைகளால் நீர்தெளிக்கும் ஒருவகை அமைப்புடைய கருவி.
துருத்தி - காற்றின் உதவியால் வீசுவது.
நாசிகை-
மாளிகையின் சிகரத்துக்குக் கீழே, நாசி (மூக்கு)
போல நீண்டிருக்கும் பகுதி. மாடங்களை ஒரு மனித உடலாகக்
கொண்டால் அதன் நாசிபோல்வதனால் நாசிகை எனப்படும்.
மூக்குப்போலக் காற்று உள் வீசுதற்கும் இவை பயன்படும்.
நாசிகையின்
மருங்கு தங்கும் கரு முகில்கள் -மாடங்களின்
உயர்ச்சி குறித்தது. "செல்வ நெடுமாடஞ் சென்று, சேணோங்கிச்,
செல்வ மதிதோய" (கோயில் - குறிஞ்சி) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவராங் காண்க. இதனால் மாடங்களின் செல்வ
நிலையும், மகளிர் விளையாட்டும், வாழ்க்கை நலனும் கூறிய
வகையால் நகரச்சிறப்பும், குடிச்சிறப்பும் உடன் கூறப்பட்டன என்க.
95