1173.
இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல
     விலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச்
சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணுந்
     தெரிவரிய தூய்மையினா, லவற்றுட் சேர்ந்து
தமர்களுட னிழிந்தேறு மைந்தர் மாதர்
     தங்களையும், விசும்பிடைநின் றிழியா நிற்கு
மமரரையு மரமகளிர் தமையும், வெவ்வே
     றறிவரிதாந் தகைwமையன வனேக மங்கண்.
96

     (இ-ள்.) வெளிப்படை. பனிமூடுமாறு உயர்ந்த நீண்ட
மலைகளைப்போல விளங்குகின்ற சுண்ணச்சாந்து பூசிய வெள்ளிய
மாளிகைகளுடைய நீண்ட சிகரங்களின் உச்சியைச் நேர்வதற்காக
அமைக்கப்பட்ட படிகளின் வரிசையையும், மேலேயுள்ள
வானுலகத்தினையும் பிரித்து அறியக்கூடாதபடி உள்ள
தூய்மையினாலே, அந்தப் படி வரிசைகளுட் சேர்ந்து தமர்களுடன்
இறங்கியும் ஏறியும் வரும் மைந்தர்களும் பெண்களும்
என்னுமிவர்களையும், விண்ணுலகத்தினின்றும் இறங்கிவரும்
தேவர்களும் அரமகளிர் என்ற இவர்களையும் வெவ்வேறாகப்
பிரித்து அறிவதற்கு அரிதாகிய தன்மையுடையனவாகிய மாளிகைகள்
அனேகம் அங்கு உள்ளன.

     (வி-ரை.) இமம் - பனி. பனி மூடியிருத்தலால் இமயமலை
என்றும், பனிமலை என்றும் பெயர் வழங்குதல் காண்க.

     கோட்டுச்சிமை - சிகரத்தின் உச்சி. சிமை- சிகரம். உயர்ந்த
நிலையின் உயர்ந்த இடம். மாடங்களிற் கோபுரங்கள் போலவும்
சிகரங்கள் போலவும் உயர்ச்சிபெற அமைக்கும் அமைப்புக்கள்
காண்க. high towers - minarets என்பர் நவீனர்.

     சோபான நிரையும் விண்ணும் அரிவரிது என்றது
படிவரிசை எங்கு முடிகின்றது, அதற்குமேல் விண்
எங்குத்தொடங்குகின்றது, எனப் பிரித்துக் காணமுடியாதவாறு
படிவரிசைகள், கீழிருந்து காண்பவர்க்கு விண்ணிற்போய் மறைந்து
படுவனவாகக் காணப்படுதல்.

     மைந்தர் மாதர் தங்களையும் - அமரரையும் அரமகளிர்
தமையும் - வெவ்வேறு அறிவரிதாம் தகைமை
- மிக உயர்ந்த
படி வரிசைகளில் ஏறியும் இறங்கியும் செல்வோராதலின் அவர்கள்
மனிதரோ அன்றித் தேவர்கள்தாமோ என்று துணிந்து சொல்ல
முடியாதபடி உயர்ச்சியுள்ளது என்க. அந்நாட்டு மைந்தர் மாதர்கள்
தேவர்கள் தேவர்களைப்போன்ற ஒளியும் அழகும் உடையவர்கள்
என்ற குறிப்பும்பட நிற்பது காண்க. தேவர்கள்
பூவுலகத்திற்கணித்தாக வரும்போது கால்நிலந் தோய்வதுபோல
வருவர் என்ற கொள்கையும் கருதுக. சோபானமும் விண்ணும்
பிரித்துக் காணவரிதாதல் போல அவற்றுட் சேர்வோரும் பிரித்துக்
காணவரியர் என்றதாம்.

     அமரர் அரமகளிர் விண்ணிடை நின்றிழிதல் - இங்குக்
காஞ்சியை அடைந்து ஏகாம்பரநாதரை வணங்கி உய்யும்பொருட்டு
என்பது குறிப்பு. தேவர் - தேவமாதர் பலரும் இங்கு வழிபட்ட
வரலாறுகள் காஞ்சிப்புராணத்தினுட் காண்க. "விண்ணிடை
விண்ணவர்கள் விரும்பிவந் திறைஞ்சி யேத்த" (மேற்றளி -
திருநேரிசை) 1155-ல் உரைத்தவை பார்க்க. அரமகளிர்- ஒருவகைத்
தேவசாதிப் பெண்கள்.

     வரையே - இசைந்தந்தத்தவள - நீர்மையினாலவற்றுள் -
என்பனவும் பாடங்கள். 96