1174.
அரவநெடுந் தேர்வீதி யருகு மாடத்
     தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட
விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை
     விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங்
குரவமருங் குழன்மடவா ரடியி லூட்டுங்
     குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும்
     பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.
  97

     (இ-ள்.) வெளிப்படை. ஒலியையுடைய நீண்ட தேர்வீதியின்
அருகில் உள்ள மாடத்தின் அழகிய மணிகள் பதித்த கோபுரத்தின்
பக்கத்தில் உள்ள விசாலமாய் நீண்ட மரகத மணிகளின்
ஒளிபொருந்திய திண்ணைகளின் விளிம்பின் ஒளி ததும்பும்படி
முறைமையின் அந்தப் படிகளின்மேல் ஏறுகின்ற, குராமலர்களைச்
சூடிய கூந்தலையுடைய பெண்களின் பாதங்களில் ஊட்டிய
செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் பதிந்த கோலமானது, கருங்கடலின்
நீண்ட அலைகளின்மேல் விளங்கித் தோன்றும் பவளத்தின் நறிய
தளிர்களைப் போன்று விளங்குதற்கிடமாகிய பல மாளிகைகளும்
உள்ளன.


     (வி-ரை.) வியல் - அகன்ற. மரகதச் சோதி விரவு - என்க. மரகதச் சோதி என்றது மரகதமணியின் ஒளி வீசும்படி செய்கின்ற
என்றதாம்.

     வேதித்திண்ணை விளம்பின் ... கோலம் - திண்ணையின்
விளிம்பானது மரகத ஒளி வீச, அதன் ஓரத்தில் உள்ள படிகளில்
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய பாதமுடைய பெண்கள் ஏறிச் செல்ல,
அவர்களது செம்பஞ்சூட்டிய பாதச் சுவடுகள் அந்தப் படிகளிற்
பதிகின்றன; அத்தோற்றம் மரகதம்போன்ற கருநிறக் கடலின்
அலைவிளிம்பில் காணும் பவளக்கொடியின் தளிர்போன்றது
என்பதாம். "துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை" (திருத்தொண்டத்தொகை - 8) என்று இத்தொண்டை
நன்னாட்டுக் கடற்கரையினைக் கூறிய திருவாக்கு இங்கு
நினைவுகூர்தற்பாலது.

     ஒளி துளும்பு முறை என்றதனால் அவ்வொளி வீச, அதனால்
மைந்தர் மாதர்களும் ஒளி பெற்று, இயல்பின் ஒளியுள்ள
தேவர்போல விளங்கினர் என்பதாம். இந்நாட்டுப் பெண்களின்
அடிகள் பவளம்போல் விளங்கிற்று என்ற குறிப்புமாம். மேற்பாட்டிற்
கூறிய சோபான நிரைகளின் சிறப்பைத் தொடர்ந்து கூறியபடியும்
காண்க.

     இயல்பாய் நீண்ட - என்பதும் பாடம். 97