1175.
வெம்புசினக் களிற்றதிர்வு மாவி னார்ப்பும்
     வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத
வம்பொன்மணி வீதிகளி லரங்கி லாடு
     மரிவையர்நூ புரவொலியோ டமையு மிம்ப;
ரும்பரினிந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ
     வுயரிரவி மாக்கலிப்பு மயனூர் தித்தேர்
பம்பிசையும் விமானத்து ளாடுந் தெய்வப்
     பாவையர்நூ புரவரவத் துடனே பல்கும்.
98

     (இ-ள்.) வெளிப்படை. மிகுந்த கோபத்தையுடைய யானைகளின்
அதிர்வும், குதிரைகளின் ஆர்ப்பும், அகலமாகிய நீண்ட தேர்களின்
சக்கரங்கள் செல்கின்ற இசைப்பும், (விழவறாத காரணத்தால்) அழகிய
பொன்னணிந்த வீதிகளில் உள்ள ஆடரங்குகளில் ஆடுகின்ற
ஆடற்பெண்களின் காற்சிலம்புகளின் ஒலியோடு (அந்நகரம்) இங்கே
அமையும்; தேவேந்திரனது ஐராவதமென்னும் யானையின் முழக்கமும்,
தெய்வத் தன்மையுடைய சூரியனுடைய தேரிற்பூட்டிய குதிரையின்
கலிப்பும் பிரமதேவனுடைய ஊர்தியாகிய தேரினது பரவிய
முழக்கமும், தேவ விமானங்களினிடத்து ஆடும் தெய்வப்
பெண்களின் காற்சிலம்புகளின் அரவத்துடனே (அந்நகரின்) உம்பர்
நிறைவு பெற்றிருக்கும்.

     (வி-ரை.) அந்நகரம் என வருவித்துக்கொள்க. அந்நகரத்தின்,
இம்பர், அதிர்வும், ஆர்ப்பும், இசைப்பும், ஒலியோடு அமையும்;
உம்பர், முழக்கும் - கலிப்பும் - இசையும் - அரவத்துடனே பல்கும்
என்று முடிக்க.

     1173-ல் கூறிய கருத்தினைத் தொடர்ந்து மைந்தர் மாதர்களும்,
அமரர் அரமகளிரும் இந்நகரில் நிறையும் சிறப்புனை இப்பாட்டினாற்
கூறினார்.

     இம்பரில் மக்கள், யானை, குதிரை, தேர், காலாள், (பெண்கள்) என்ற நால் வகையாலும் நால்வகை ஓசைகளைச் செய்ய, உம்பரில்
தேவர்களும், அவ்வாறே, யானை - குதிரை - தேர் - காலாள்
(பெண்கள்) என்ற நால்வகையாலும் நால்வகை ஓசைகளைச்
சய்கின்றனர் என்பதாம்.

     இம்பர் - உம்பர் என்ற சொல்லாற்றலால் இவ்வுலகமும்
மேலுலகமும் வெவ்வேறாகப் பிரிந்த நிலையும், இரண்டு சொற்களும்
அடுத்து வைக்கப்பட்டதனால் இவ்விரண்டுலகமும் ஒன்று கூடிய
நிலையும் காட்டிய கவிநயமும் காண்க. இரண்டுலகமும் வேறு
பிரிந்தனவாயினும் ஒன்றுகூடி விரவியும் நின்றன என்பது.

     இங்குக்கூறிய ஓசைகள் பலவும் வெவ்வேறு திறத்தன என்று காட்டத் தனித்தனி ஓசை என்ற ஒருபொருள் குறித்த பல
சொற்களால் கூறிய திறமும் காண்க. தேவர் செய்யும் ஓசைகள்
மண்ணுலக ஓசைகளினும் சிறந்தன என்பதனை அவ்வச்சொற்களாலும்,
அவற்றை மேல் வைத்த முறையானும், அமையும் இம்பர் - உடனே பல்கும் என்ற வினைமுடிபுகளின் ஆற்றலானும் உணர்த்தினார்.

     இங்குக் கூறிய இம்பர் யானை, குதிரை, தேர் என்பன இந்நகர
மைந்தர் மாதர்களுடையன போலும். அரசர்களுடைய
போர்க்கருவிகளல்ல என்றமைத்துக் கொள்ளுதல்வேண்டும்; அவற்றை
1177-ல் வேறு கூறுதலுடன் பொருத்த வேண்டில்.

     விழவறாத அம்பொன் மணிவீதி - காஞ்சி நகரத்தில்,
ஆண்டின் ஒவ்வோர் மாதமும் பல விழாக்கள் நிகழ்வது இன்றும்
காணப்படும் சிறப்பாகும். "கொடிகொள் செல்வ விழாக்குணலையறாக்,
கடிகொள் பூம்பொழிற் கச்சி" (குறுந்தொகை) என்பது தேவாரம்.
"வீதிநாளும் ஒழியா விழாவணி" (1181) "விழவுமலி திருக்காஞ்சி
வரைப்பு" (1179) என்று பின்னரும் இதனைவற்புறுத்துதல்காண்க.
விழாக்கள் வீதிக்கும் சிறப்புத் தருவன. "விழவறாதன விளங்கொளி
மணிநெடுவீதி" (ஏயர்கோன் புரா - 3), "விழவுநின்ற வியன்மறுகு"
(மதுரைக்காஞ்சி - 328).

     அரங்கு - ஆடரங்குகள். இவைகள் பெருநகரங்களில்
அமைவன. "வீதித் தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந்
திருவையாறே" முதலியவை காண்க.

     தெய்வ உயர் இரவி மா - சூரியனது குதிரை - ஏழு
நிறமுடையதென்றும் அதனால் சப்தாசுவம் என்று பெயர்
பெறுவதென்றும் கூறுதல் மரபு.

     விமானத்துள் ஆடுந் தெய்வப் பாவையர் - தேவ
விமானங்களில் விண்ணினின்றும் இறங்கும்போது தேவ அரம்பையர்
ஆடல் செய்துகொண்டு வருகின்றனர். மண்ணோர் அரங்கிலும்,
அரம்பையர் விமானங்களிலும் ஆடுகின்றனர் என்பதாம்.

     அலையுமிம்பர் - அணையும் இம்பர் - என்பதும்,
அவனூர்தித் தேர் - என்பதும் பாடங்கள். 98