1176.
|
அருமறையந் தணர்மன்னு மிருக்கை யான
வாகுதியின் புகையடுத்த வம்பொன் மாடப்
பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும்
பெறுமவிப்பா கங்கொடும் பெற்றி மேலோர்
வருமுறைமை யழைக்கவிடு மந்திரமெம் மருங்கும்
வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றிற்
றிருமலிபொற் கோபுரத்து நெருங்கு மெல்லாத்
தேவரையு மணித்தாகக் கொண்டு செல்லும். 99 |
(இ-ள்.) வெளிப்படை.
அருமறைவல்ல அந்தனர்கள் வாழும்
இருக்கைகளாகிய, ஆகுதிப்புகை நிரம்பிய அழகிய பொன்மயமான
மாளிகைகள் நிறைந்தபெரிய வீதிகள்தோறும் ஆகுதியின் புகை
அடுத்த வேள்வி செய்யுமிடங்களில் எங்கும், அவ்வத்
தேவர்கள்
பெறுகின்ற அவிப்பாகங்களைக் கொடுக்கும் தன்மையுடைய
மேலோர்கள் கூறும், அத்தேவர்களை வரும்முறையில்
அழைப்பதற்கு உரிய மந்திரங்கள், தேவர்களின் நாயகராகிய
திருவேகம்பர் திருமுன்றினில் திருமலிதற்கிடமாகிய பொற்கோபுர
வாயிலில் நெருங்கியிருக்கும் எல்லாத் தேவர்களையும்
தம்பக்கத்தில் (வேள்விச்சாலைகளுக்கு) அழைத்துக்கொண்டு
போகும்.
(வி-ரை.)
இதுவரை வீதிகளின் சிறப்புக்களைப் பொதுவகையாற் கூறினார். இனி, நாற்குலத்தாரும்,
குலபேதத்தாரும் முறையே வாழும்
வீதிகளைத் தனித்தனி கூறுகின்றார்.
அருமறை
அந்தணர் - வேதவேதியர். சிவவேதியர்களாகிய
அந்தணர்களினின்றும் வேறு பிரித்துணர்த்துதற்கு மறை அந்தணர்
என்றார்.
மறுகுதொறும்
வேள்விச்சாலை - அந்தணர் தினமும்
வேள்வி வளர்க்கும் இடங்கள் 1063 - 1064ல் உரைத்தவை பார்க்க.
அவிப்பாகம்
- வேள்விகளில் தீக்கடவுளின் வாயிலாகத்
தேவர்களுக்கு இடும் உணவு அவி எனப்படும். பாகம் -"எண்ணிறந்த
கடவுளருக்" கிடுமுணவு கொண்டூட்டும், வண்ணவெரி வாயின்கண்
வைத்ததென" (796) என்றது காண்க. பாகம் -
பகுதி - அவியின்
பகுதி. அவியானது பற்பல தேவர்க்கும் தனித்தனி பிரித்துக்
கொடுக்கப்படுமானதால் அவிப்பாகம் எனப்படும்.
அழைக்கவிடும்
மந்திரங்கள் - அழைத்ததற்காகச்
சொல்லப்படும் மந்திரங்கள்.
மந்திரங்கள்
- தேவரை - அணித்தாகக் - கொண்டுசெல்லும்
என்று கூட்டுக. எல்லாத் தேவர்களும் திருவேகம்பரது திருவாயிலில்
முன்னரே வந்துகூடி நெருங்கியுள்ளார்கள் என்பதும்,
வேள்விச்சாலையில் அவ்வவர்களுக்குரிய அவிப்பாகம்
கொடுத்தற்காக அவர்களைக் கூப்பிடும் மந்திரங்கள், கோயில்
வாயிலினின்றும் அவர்களை வேள்விச்சாலைக் கணிமையில்
கொண்டு செலுத்தும் என்பதும் கருத்து.
பெற்றி
மேலோர் - பெற்றி - தன்மை. பெற்றியை உடைய
பெரியோர்கள்.
அழைக்கவிடும்
மந்திரங்கள் - அழைத்தற்காக
உச்சரிக்கப்படும் உரிய மந்திரங்கள். விடும் - பிரயோகிக்கப்படும் -
சொல்லப்படும் - என்ற பொருளில் வந்தது. அழைக்கத்
தூதுவிடுதல்போல இந்த மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டபோது அவை
தூது சென்று உரியதேவரை அழைத்துக் கொணர்ந்து விடுத்தலினால்
அழைக்க விடும் என்றார். விடும்
என்பதனைப் பகுதிப் பொருள்
விகுதியாகக் கொண்டு அழைக்கும் எனப் பொருள் கொள்வதும்
பொருந்தும். அழைத்துவிடும் என்பது பாடமாயின்
அழைத்தற்கும்,
பின்னர் முடிவில் போக விடுத்தற்கும், உரிய மந்திரங்கள் என்க.
வானவர்
நாயகர் ... எல்லாத் தேவரையும் - வானவர்
நாயகராதலின் அவரது திருவாயிலில் தங்கள் தங்கள் குறைதீரும்படி
வரம்பெறுதற்கும், பணி யறிந்து புரிவதற்குமாகத் திருமுன்பு காத்து
கொண்டிருக்கின்றனர் எல்லாத் தேவர்களும் என்பார் வானவர்
நாயகர் என உடம்பொடு புணர்த்தி ஓதினார். "வாய்தல்பற்றித்
துன்றிநின்றார் தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான், வந்துநின்
றாரய னுந்திரு மாலும் மதிட்கட்சியாய்" (கச்சி - திருவிருத்தம்)
என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும், "வாழ்ந்திமையோர்
குழாநெருங்கு மணிநீள் வாயில்" (திருஞான - புரா - 1022),
"மால யன்சத மகன்பெருந் தேவர் மற்று முள்ளவர்கள் முற்று
நெருங்கிச், சீல மாமுனிவர் சென்றுமுன் றுன்னி... நிற்ப... திருவாயில்"
(249) என்ற திருவாக்குக்களும் காண்க. எல்லாத் தேவரையும்
-
உம்மை முற்றும்மை. அங்கு வந்து நெருங்கிக் காத்து
வாழ்வடைகின்றார்கள் தேவர்கள் கூட்டம் முழுவதும்
என்பது குறிப்பு.
நெருங்கும் -காலம் பெற்றுத் திருவாயிலினுள்ளே
புகுதற்கு
முந்திக்கொள்வதற்காகப் புடைபட்டு முந்தி நெருங்குகின்றனர்.
"கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த
வென்னா ரமுதைப், புடைபட் டிருப்பதென்று கொல்லோ"
(புணர்ச்சிப்பத்து - 1) திருவாசகம்.1 99
1. இது முதல்
3 பாட்டுக்களும் சிறிது ஐயப்பாடுடையன
என்பது பற்றி எனது "சேக்கிழார்" 215 - 217 பக்கங்கள் பார்க்க.
|