1177.
அரசர்குலப் பெருந்தெருவுந் தெற்றி முற்றத்
     தாயுதங்கள் பயிலும்விய லிடமு மங்கட்
புரசைமதக் கரிகளொடு புரவி யேறும்
     பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும்
விரைசெய்நறுந் தொடையலங்கற் குமரர் செய்யும்
     வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை
                              விண்ணோர்
நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலு
     நிலமிசையும் பலமுறையு நிரந்து
                             நீங்கார். 100

     (இ-ள்.) வெளிப்படை. அரசமரபினர் வாழும் பெரிய
வீதிகளிலும், தெற்றியினையுடைய முற்றங்களில்
ஆயுதங்களைப்பயிலும் அகலமான இடங்களிலும், அவ்விடத்துக்
கயிற்றையுடைய யானைகளையும் குதிரைகளையும் ஏறிநடத்தும்
அழகிய வீதிகளிலும், எவ்விடத்தும், பொலிவடையும்படி, வாசனை
வீசுகின்ற நல்ல மலர்களையும் மணிமாலைகளையும் அணிந்த
அரசகுமாரர்கள் செய்யும் அதிசயிக்கத்தகுந்த வில் - வாள் -
முதலிய வித்தைகளைக் கண்டு, வித்தியாதரர்களாகிய
தேவகூட்டத்தார் வரிசையான நெருங்கிய தேவவிமானங்களின்
மேலும் நிலத்தின் மேலும் பலமுறையும் கூடி நீங்காதிருப்பர்.

     (வி-ரை.) தெருவும் - இடமும் - வீதிகளும் - எங்கும் பொலிய
- கண்டு - விஞ்சை விண்ணோர் - நிரந்து நீங்கார் என்க.

     குலப்பெருந்தெரு - குலம்- கூட்டமும் தன்மையும் குறித்த
தெனினுமாம்.

     தெற்றி - சித்திர கூடங்கள். வியல் இடம் - வில் - வேல் -
வாள் - முதலிய ஆயுதங்களை அரசிளங்குமரர் பயிலும் இடமாதலின்
அகலமான முற்றங்களை உடையன என்பது.

     அங்கண் - அதற்குப் பக்கமான இடங்களில். யானை -குதிரை
ஏற்றம் பயிலும் இடங்கள் ஆயுதம் பயில் இடங்களுக்கு அணிமையில்
அமைதல் மரபும் இயல்புமாம்.

     தொடை - பூமாலை. தொடுக்கப்படுவதால் தொடைஎனப்படும்.
அலங்கல் - மணிமாலை.

     தொடை அலங்கற் குமரர் - தத்தமக்குரிய அடையாள
மாலைகளையும், (அவை பெரும்பாலும் மனமும் அழகும்
பெறாவாகலான்) அழகும் மணமுடைய வேறு மலர்மாலைகளையும்
அணிந்த அரசகுமாரர்கள் என்றலுமாம்.

     புரசை - யானைக் கழுத்துக்கயிறு. புரோசை என்ப.
செய்தொழில் கண்டு வியப்புறு விஞ்சை விண்ணோர் - என்று
கூட்டி உரைத்தலுமாம். செய்தொழில் - வில் - வாள் முதலிய
வித்தைகளின் தொழில். வித்தை வல்லவர்களாதலின் இத்தேவர்கள்
விஞ்சையர்கள் எனப்படுவர். விஞ்சை - வித்தை என்பதன்
மரூஉ.
    

     விமான வூர்திகளின் மேலும் நிலமிசையும் என்றது
மேலிருந்து கண்டு வியப்பதும், கீழ் நிலமிசை வந்து உடனிருந்து
பழகிக்கொள்வதும் செய்வர் என்ற குறிப்புப்படக் கூறியதாம்.

     விருப்புறுசெய் - என்பதும் பாடம். 100