1178.
வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
     விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க
வயினிலவு மணிக்கடைமா நகர்க ளெல்லாம்
     வனப்புடைய பொருட்குலங்கண் மலித லாலே
கயிலைமலை யார்கச்சி யால யங்கள்
     கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப்
பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் றங்கப்
     பயிலளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
   101

     (இ-ள்.) வெளிப்படை. ஒளி வீசும் பல மணிகளையுடைய
அணிகலன்களை அணிந்த வணிகர்கள் பொருந்திய நிதிகளின்
வளங்களைப் பெருகச் செய்யும் செல்வங்கள் மிகுந்த இடத்தால
்மிக்க, மணிகள் அழுத்திய முதல் வாயிலையுடைய பெரிய
மாளிகைகள் எல்லாம், அழகுடைய பொன்னும் நவமணிகளும
்முதலிய செல்வக் கூட்டங்கள் நிறைதலால் கயிலாயபதியாகிய
சிவபெருமான் கச்சியிலிருக்கும் பல தளிகளிலும் திருஏகாம்பரத்திலும்
எழுந்தருளியிருக்கும் சிறப்பையறிந்து குபேரன் வந்து, தரிசித்துத்
துதிப்பதற்குத் தங்குவதற்காக அளகாபுரியைப் பயில்கின்ற பல
உருவங்களுடன் வகுத்த தன்மையினைக் காட்டுவன.

     (வி-ரை.) வெறுக்கை - செல்வம். வளம் பெருக்கும்
வெறுக்கை
என்றது பல வகை வளங்களையும் பெருக்கிநின்ற
நிலை குறித்தது.

     பொருட்குலங்கள் - பொருள்களின் பலவகைத் தொகுதிகள்.
ஆலயங்கள் கம்பமும் - ஆலயங்களிடத்தும் ஏகம்பத்தின்
கண்ணும். ஆலயங்கள் என்றவிடத்து உம்மை தொக்கது. ஈரிடத்தும்
ஏழனுருபுகள் தொக்கன. 1153 பார்க்க.

     நிதிக்கோன் - குபேரன். பயில் அளகாபுரி - குபேரன்
வசிக்கும் அளகை. அளகாபுரியைப் பல உருக்கொண்டு வகுத்த
பரிசு
என்க.

     மாநகர்கள் என்றது இங்கு மாளிகைகளையும் மாளிகைகளின்
தொகுதிகளையும் குறித்தது. மாநகர்கள் - மலிதலாலே பரிசு
காட்டும்என்க. நகர் - மாடங்கள் எனப் பொருள் கொள்வர்
நச்சினார்க்கினியர் (சிந்தா - நாம - 297).

     மாநகர்கள் - வணிகர் தெருக்கள் தனித்துப் பல செல்வ
மாளிகைகளுடன் விளங்குவதால் அவையே தனி நகரங்கள்
போன்றன என்பது கருத்து. இவ்வாறுள்ள இடங்கள்தனிநகரங்களாகப் பெயர் வழங்குதலும் காண்க.

     பயிலும்உரு- அளகாபுரியைப் பழகியவர்கள் இதுவே அது
என்று காணத்தக்க உருவம். பயில் அளகாபுரி - குபேரன்
வாழும் அளகை. 101