1179.
விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
     விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும்
                                    வேணி
மழவிளவெண் டிங்கள்புனை கம்பர் செம்பொன்
     மலைவல்லிக் களித்தவரு ளுணவின் மூலந்

தொழவுலகு பெறுமவடா னருளப் பெற்றுத்
     தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை
யுழவுதொழி லாற்பெருக்கி யுயிர்க ளெல்லா
     மோங்கவருந் தருமவினைக் குளரா லென்றும்.

                                        102

     (இ-ள்.) வெளிப்படை. விழாக்கள் மிகுகின்ற திருக்காஞ்சியின்
எல்லையில் வேளாளராகிய தூயகுடியில் வந்த பெருஞ்செல்வர்கள்,
ஒளி விளங்குகின்ற சடையில் மிக இளைய வெள்ளிய பிறையினைச்
சூடிய திருவேகம்பர், செம்பொன்மலை வல்லியாகிய
காமாட்சியம்மையாருக்குக் கொடுத்து அருளுருப்பெற்ற உணவின்
மூலம் என்னும் இருநாழி நெல்லையும், தம்மைத் தொழுதமையால்,
உலகங்களையெல்லாம் பெற்ற தாயாராகிய அவ்வம்மையார்
கொடுத்தருள, அதனைப் பெற்றுப், பழமையாகிய இவ்வுலகத்தில்
நிலைத்த பயிர்களை வேத வாய்மையிற் பேசப்படும் உழவு
தொழிலாற் பெருகச்செய்து, எல்லா உயிர்களும் தழைக்கும்படி
வருகின்ற தருமச் செய்கைகளுக்கு உரியவர்களாய் எந்நாளும்
தழைத்துள்ளார்கள்.

     (வி-ரை.) விழுக்குடி - விழுப்பம் - உயர்வு -
மேன்மைதங்கிய குடிப்பிறப்பு.

     பெருஞ்செல்வம்- "மேழிச் செல்வங் கோழைபடாது","பலகுடை
நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்" என்பனவாதி முதுமொழிகள்
வேளாளருடைய செல்வத்தின் பெருமையை விளக்குவன. முன்
பாட்டில் "விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை", மணிக்கடை",
"வனப்புடைய பொருட்குலங்கள்","பயில் அளகாபுரி" என்று பலவாறும்
வணிகரது பொருட்சிறப்பினைப் பேசிய ஆசிரியர், இங்கு வேளாளரை
(அதனினும்) பெரும் செல்வர் என்ற குறிப்பும், உணவின் மூலம் -
உயிர்களெலாம் ஓங்கவரும் தருமவினை
என்ற குறிப்புக்களும்
காண்க.

     மழ இள - ஒருபொருட் பன்மொழி மிக்க இளமை குறித்தது.

     அருள் உணவின் மூலம் - அருள் - அருளுருவாகிய.
உயிர்கள் ஓங்க அறங்கள் எல்லாமும் செய்தற்பொருட்டுத்
தரப்படுதலின் அருளுருவாயிற்று. உணவின் மூலம் - நெல். பெருகி
உணவுக்கு உதவுதலால் மூலம் என்றார். வளர் உணவின் மூலம்
என்பது பாடமாயின், மேன்மேல் ஒன்று ஆயிரமாக இலக்கமாகப்
பெருகுந்தன்மையுடைய விதைமுதல் என்க. விதை முன்னதோ மரம்
முன்னதோ என்னும் பீசாங்குர நியாயம் என்றதொரு முறைக்கு
விடையிறுப்பார் போன்று விதைதான் முதலாகிய மூலமாகும் - அது
இறைவன் இறைவிக்களித்தது என்று கூறும் குறிப்பும் காண்க.

     உலகு தொழப் பெறும் அவள் - உலகத்துயிர்கள் எல்லாம்
தொழுதேத்தி உய்யுமாறு உணவின் மூலத்தைப் பெறுகின்ற
அம்மையார் என்றலுமாம்.

     வேத வாய்மை உழவு தொழில் - வேதங்களுள்ளே
விதிக்கப்பட்ட தருமங்களுட் சிறந்த உழவுதொழில் என்றலுமாம்.
வாய்மை ஒழுக்கத்துநின்று பெருக்கி என்று கூட்டி
யுரைத்தலுமொன்று. உயிர்களெல்லாம் ஓங்கவரும் தொழிலாதலின்
தருமவினை என்றும் உடன் கூறினார்.

     தருமவினை - வேளாண்மை. ஏனைய தொழில்கள்போலன்றி
இத்தொழிலின் கண், சீவகாருண்யமாகிய அறம் நிகழ்ந்து
வருதற்கேதுவாதல் குறிக்கப்பட்டது. தருமவினைக்கு என்றும்
உளரால்
என்க. தருமஞ் செய்வதற்கென்றே அமைந்து என்றும்
வாழ்பவர் வேளாளர்கள் என்பது. ஆல் - அசை.

     ஓங்கவரும் - என்பதும் பாடம். 102