1180.
ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்விற் றம்மி
     லுயர்ந்தனவு மிழிந்தனவு மான சாதி
தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாந்
     தந்தகைமைக் கேற்றதனி யிடங்கண் மேவி
யாங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற
     வடுத்தவினைத் தொழின்முறைமை வழாமை நீடு
பாங்குவள ரிருக்கைநிலை பலவு மெல்லாம்
     பண்புநீ டியவுரிமைப் பால வன்றே.
103

     (இ-ள்.) உயர்வுடைய நாற்குலங்களிலும்
ஒவ்வாப்புணர்ச்சியினால், அவற்றுள் உயர்ந்தனவும் இழிந்தனவும்
ஆன சாதிகள் தம்முட்கூடுதலாற் குலபேதங்கள் எல்லாம் தங்கள்
தங்களுடைய தகுதிக்கேற்றவாறு அமைந்த தனியிடங்களிற்பொருந்தி,
அங்கு நிறைந்த தம்கிளைஞர்களுடன் கலந்து தங்கள் தங்கள்
மரபினுக்கு ஏற்ற தொழில் முறைமையில் தவறாமல் நீடும்படியான
குணத்துடன் பெருக வாழ்ந்திருக்கும் பலவாகிய இருக்கை நிலைகள்
எல்லாம் நற்பண்புநீடிய உரிமையுடயனவாயுள்ளன.

     (வி-ரை.) ஓங்கிய நாற்குலம் - அந்தணர் - அரசர் -வணிகர் - வேளாளர் என்பன. இவை தொல்காப்பிய முதலிய பழந்தமிழ்
நூல்களுட் கூறப்பட்டுள்ளன. "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபி னரசர் பக்கமும், இரு மூன்று மரபி னேனோர்
பக்கமும்" (தொல் - புறத்திணை - 20) என்றஇடத்து வேளாளர்க்கும்
அறுதொழில் கூறினர் தொல்காப்பியனார்.1

     ஒவ்வாப்புணர்வில் - அவ்வக்குலத்தோர் அவ்வக்குலத்தில்
மணஞ்செய்து கொள்ளுதல் நூல்களானும் ஆன்றோராசாரத்தானும்
ஒப்பப்படுவதென்பதும், அவ்வாறன்றிக், குலம் பிறழ்ந்து புணர்ந்து
கொள்ளுதல் ஒவ்வாதென்பதும், ஆம். ஆனால், பல்லாற்றானும்
விதிபிறழ்ந்து ஒழுகும் மக்கட்பண்பில், இவையும் உலக வழக்கினுள்
வருவனவாதலின், நகர அமைப்பினுள் இவர்களும் இடம்பெற்
றமைவாராயினர். மேற்காட்டிய தொல்காப்பியச்சூத்திரத்தினுள்
பக்கமும்
என்றதற்கு "அவ்வருணத்தார் ஏனைய
வருணத்தார்கட்கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணப்
பகுதியோரும்" என்று நச்சினார்க்கினியர் உரைத்துப் போந்தனர்.

     தம்மில்...பேதமெல்லாம் - நாற்குலத்தினுள், உயர்சாதி
ஆணும், தாழ்ந்த சாதிப் பெண்ணும் கூடிப் பிறந்த மூவகையான
அநுலோமரும், அதுபோலத் தாழ்ந்த சாதி ஆண் உயர்சாதிப்
பெண்ணுடன் சேர்ந்து பிறந்த அறுவகையான பிரதிலோமரும்,
இவ்விருவகையினர் தம்முட்கலப்பால் பிறந்த சங்கரரும் என
இவை குலபேதமாகும் என்று மனு முதலிய தருமநூல்கள் வகுக்கும்.
அநுலோமர் மூவர் பிரதிலோமர் மூவர் ஆக அறுவர் என்பதும்,
இவ்வறுவரும் ஒளத்திரிதீக் கைக்குரியர் என்பதும் சிவாகமங்களின் கொள்கையுமாம். விரிவுகள் ஆண்டுக் கண்டுகொள்க. இவை
விரிந்து பரத்தலின் பேதமெல்லாம் என்றார். 1124 - ல்
உரைத்தவையும் பார்க்க.

     தம் தகைமைக்கேற்ற தனி இடங்கள் மேவி - எனவும்,
மரபின் ஆற்ற அடுத்த வினைத்தொழின் முறைமை வழாமை
எனவும், கூறியவாற்றால் நகர அமைப்பிலும், மக்கட் கூட்ட ஒழுங்கு அமைப்பிலும் இக்குலத்தவர் யாவரும் அவ்வவர்க்குக் குறித்த
ஒவ்வோர் தனியிடத்தின் குடிவாழ்க்கைக்கும், அவ்வவர் மரபுக்கேற்ற
தனித்தொழில் வாழ்க்கைக்கும் உரியவர் என்பது பெறப்படும்.

     உரிமைப்பால - என்பதும் கருதுக. இதனால் அவ்வவர் சமூக
உரிமைகளும் கடமைகளும், நூல்களாலும் ஆன்றோர் ஆசார
வழக்காலும் வரையறுக்கப்பட்டுள்ளன என்பது விளங்கும். இதுபற்றி
முன் உரைத்தவையும் நினைவு கூர்க. எவரும் ஒன்று போலவே
எத்தொழிலும் செய்வதற்கும் எங்கும் உறைவதற்கும் உரியவர்என்னும்
புதுக்கொள்கை முந்து நூல்களாலும்
ஆன்றோராலும்ஆதரவுபெறாததென்பதுவும் இதனால் விளங்குவதாம்.
103


     1 இந்த அறுதொழிலாவன எவை என்பதுபற்றிஉரையாசிரியர்கள்
வெவ்வேறு திறம்பட உரைத்தனர். அவை எவ்வாறாயினும்,
அறுதொழிலுரிமையுடைய தமிழருள் வேளாளர் என்பது வேறு,
நால்வகைச் சாதியுள் ஏவல் மாக்களாகிய சூத்திரர் என்பார் வேறு,
என்பதறிவோர் துணிபு. குலங்களின் நலங்களையும் உயர்வு
தாழ்வுகளையும் பற்றிப் பூசலிடுவோர் இத்திருப்பாட்டிலும்
தொல்காப்பிய முதலிய பழந்தமிழ் நூல்களினும் கூறிய வகைகளைச்
சிந்தித்து அமைந்து ஒழுகுதல் நலம்தரும்.