1181.
ஆதி மூதெயி லந்நகர் மன்னிய
சோதி நீண்மணித் தூபமுந் தீபமுங்
கோதில் பல்லிய முங்கொடி யும்பயில்
வீதி நாளு மொழியா விழாவணி.
104

     (இ-ள்.) வெளிப்படை. ஆதிதேவரது பழைமையாகிய
மதில்சூழ்ந்த அந்தக் காஞ்சி மாநகரத்தில் உள்ள வீதிகள், நீளும்
சோதியுடைய மணிகளிழைத்த தூப தீபங்களையும், குற்றம்போக்கும்
பல இயங்களையும், கொடிகளையும் உடையனவாகிய விழாக்களின்
சிறப்புக்களை, என்றும் நீங்காதிருக்கின்றன.

     (வி-ரை.) ஆதி - முதல்வர். ஆதியின் - நகர் என்று
கூட்டுக. ஆதிநகர் - முதன்மையான நகர் என்றுரைப்பினும்
அமையும்.

     சோதி நீள் மணி - தூபகலசங்களுக்கும் தீபகலசங்களுக்கும்
மணிகளிழைத்துள்ளன என்பதாம்.

     கோதில் இயமும் - கோதில் கொடியும் - என்று தனித்தனி
கூட்டுக. சிவ பெருமான்றிருவிழாக்களில் முழக்கப்படும் பேரி முதலிய
பலவகை இயங்களும், பூதபைசாச முதலியவற்றால் வரும் குற்றங்கள்
சாராமல் மக்களைக்காக்குந் தன்மையுடையன என்பதும், அவ்வாறே
சிவனது இடபக் கொடியும் உயிர்களின் பாசமாகிய தீமை போக்கும்
தன்மையுடையது என்பதும் சிவாகமங்களின் துணிபு. "கோதிலா
வேறாங் கொடி" என்ற திருவாசகமும் காண்க. கோது இல் -
கோதினை இல்லையாகச் செய்யும் என்க. கோதில் பல் இயம் -
குற்றமில்லாத பல இயங்கள் என்றும், கொடி விழாக்களின்
சிறப்புக்களுள் ஒன்றாகிய கொடியாடைகள் என்றும் உரைப்பாரும்
உண்டு. வீதி - சாதியொருமையாதலின் ஒழியா என்ற பன்மைவினை
கொண்டது.

     ஆதிநகர் - மன்னியவீதி - தூபமும் - தீபமும் - கொடியும்
- பயில் - விழா வணி - நாளும் - ஒழியா என்று கூட்டி முடிக்க.

     விழா அணிகளை வரும்பாட்டில் விரித்துக்கூறுகின்றார்.
104