1182.
வாயி லெங்கணுந் தோரண, மாமதில்
ஞாயி லெங்கணுஞ் சூழ்முகி, னாண்
மதிதோயி லெங்கணு மங்கலந், தொண்டர்சூழ்
கோயி லெங்கணு மும்பர் குலக்குழாம்.
      105

     (இ-ள்.) வெளிப்படை. (விழா அணி ஆவன) அந்நகரின்
மாளிகை வாயில்கள் தோறும் தோரணங்கள் உள்ளன; பெரிய
மதிலின் உறுப்புக்களின் மேல் எல்லாம் மேகங்கள் சூழ்கின்றன;
விளங்கும் சந்திரன் தோயும்படி உயர்ந்த வீடுகளில் எங்கும்
மங்கலங்கள் நிகழ்கின்றன. தொண்டர்கள் சூழ்ந்து வலம் வரும்
கோயில்களிலெல்லாம் தேவர்களின் மிகுந்த கூட்டங்கள் உள்ளன.

     (வி-ரை.) வாயில் தோரணம்- அந்நகர மாந்தர் தங்கள்
தங்களுடைய மாளிகை வாயில்களில் எங்கும் தோரண
முதலியவற்றால் அலங்கரித்தல் சிவபெருமானது திருவிழாக்களின்
சிறப்பினை நோக்கி என்க.

     மதிதோய் இல் எங்கணும் மங்கலம் என்றதும்
அக்கருத்துப்பற்றியேயாம். மங்கலம் - திருவிழாவின் பொருட்டு
நகரமாந்தர் தங்கள் மனைகளில் இயங்கள் முழக்குதல், ஆடல்
பாடல் இயற்றுதல், முதலாயின நிகழ்ச்சிகள் செய்வித்தல் இன்றும்
திருத்தில்லை - திருவாலவாய் முதலாயின பெருந்தலங்களிற்
காணத்தக்கன.

     ஞாயில் - மதிலுறுப்புக்கள். ஞாயிலில் முகில் சூழ்தல்
என்றது திருவிழாவின் வேள்விகளின் பயனாய் முகில்கள்
உண்டாகிச் சூழ்தல் குறித்தது

     தொண்டர்சூழ் - சூழ்தல் - வலம் வருதல் - நிறைதல்
என்றலுமாம். உம்பர் குலக் குழாம் - தொண்டர்கள் சென்று
சூழ்வந்து செல்லத், தேவர்கள் காலமும் இடமும் பெறாது
காத்திருக்கின்றனர் என்பது குறிப்பு. 1176 - ல் உரைத்தவையும்,
17-18-ம் இவ்வாறு முன் வந்தவையும் பார்க்க.

     குலக்குழாம் - குலம். இங்கு பலவகைத் தேவகணங்களைக்
குறித்தது. 105