1183.
வேத வேதியர் வேள்வியே தீயன:
மாத ரோதி மலரே பிணியன;
காதல் வீதி விலக்கே கவலைய;
சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.  106

     (இ-ள்.) வெளிப்படை. வேத வேதியர்கள் இயற்றும்
வேள்விகளே தீயினைக் கொண்டன; பெண்களின் கூந்தல்களில்
உள்ள மலர்களே பிணிப்புடையன; விருப்பந்தரும் வீதிகளில்
விலக்குக்களாகிய வழிகளே கவலையுடையன; மாமரங்களும்
குருக்கத்தி மரங்களுமே புறஞ்சூழ்வன.

     (வி-ரை.) காஞ்சி நகரத்தில் அரன்றிருவிழாவும் அடிமைத்
திறமும் செவ்வனே நிகழ்வனவாதலானும், மாந்தர் கனவிலும்
தீமைநினையாத தூய சிந்தையராயுள்ளமையானும், பிற ஊர்களினும்
நாடுகளினும் அண்டங்களினும் காணப்படும் பிணி, கவலை,
புறஞ்சூழ்தல்
முதலிய குற்றங்களை இங்குக் காணமுடியாது.
கோதுகளை அரன் திருவிழாக்கள் போக்குவன என்பது
முன்பாட்டில் உரைக்கப்பட்டது இவற்றைக் காணவேண்டுமானால்
சொற்சிலேடை நயம்பற்றியும், சொல்லாற்றலானும், கூறலாமேயன்றி
உண்மையிற் காணமுடியாது என்பது இப்பாட்டின் கருத்து.
இவ்வாறே மேல் வரும் இரண்டு பாட்டுக்களினும் கொள்க.

     வேள்வியே தீயன - தீயன - என்பது தீயை உடையன -
தீமையுடையன - என இருபொருளும்பட வழங்கும்.
தீயையுடைமையால் தீயன என்னலாமன்றித் தீமையுடைமையால்
அவ்வாறு சொல்லத்தக்க பொருள் வறொன்றுமில்லை என்பார்
வேள்வியே என்று பிரிநிலையேகாரந் தந்து கூறினார். மலரே -
விளக்கே - மாதவியே
என்ற இடங்களினும் இவ்வாறே கொள்க.

     மலரே பிணியன - பிணியன - பிணிக்கப்படுவன -
பிணியுடையன என்பது சிலேடை. ஓதி - கூந்தல்.

     வீதி விலக்கே கவலைய - விலக்கு - பெருவீதிகளினின்றும்
விலகிச் செல்லும் சிறு வீதிகள். கவலை - சந்து முடுக்கு. கவலைய
- சந்து முடுக்குகளை உடையன - கவலையினையுடையன என்பது
சிலேடை.

     சூத மாதவியே புறஞ்சூழ்வன - புறஞ்சூழ்தல் - புறத்திற்
சூழ்தல் - புறங்கூறிக் கேடுநினைத்தல் (கோட்சொல்லுதல்) என்பது
சிலேடை.

     "துன்பே கவலை பிணியென் றிவற்றை நணுகாமற் றுரந்து
கரந்து மிடீர்" (அதிகை - கொல்லி) என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரமும் இங்கு நினைவு கூரத்தக்கது.

     இத்திருப்பாட்டும் மேல்வரும் இரண்டு பாட்டுக்களும்
ஒழித்துக்காட்டணி என்னும் அணியின் பாற்படும். 106