1184.
சாய லார்க ணுசுப்பே தளர்வன;
வாய மாடக் கொடியே யசைவன;
சேய வோடைக் களிறே திகைப்பன;
பாய சோலைத் தருவே பயத்தன.   107

     (இ-ள்.) வெளிப்படை. மயில்போலுஞ் சாயலையுடைய
பெண்களின் இடைகளே தளர்வன; அப்பெண்களின்
கூட்டங்களையுடைய மாடங்களின்மேல் உள்ள கொடிகளே அசைவன; சிவந்த பொன்னிறமான நெற்றிப்பட்டங்கள் பூண்ட யானைகளே
திகைப்பன; பரவிய சோலைகளிலுள்ள மரங்களே பயத்தையுடையன.

     (வி-ரை.) தளர்ச்சியையுடையன நுசுப்பே; அசைவையுடையன
கொடியே; திகைப்பையுடையன களிறே; பயத்தையுடையன தருவே;
இவையன்றித் தளர்வு முதலியனவற்றை உடையபொருள் வேறில்லை
என்பது கருத்து.

     நுசுப்பே தளர்வன - தளர்தல் - துவளுதல் - இளைத்தல்
- என்பது சிலேடை.

     ஆயம்- (பெண்களின்) கூட்டம்.

     கொடியே அசைவன - அசைதல்- காற்றினால் ஆடி
அசைதல் - ஓர் நிலையில்லாது பெயர்தல் சிலேடை.

     களிறே - திகைப்பன - திகைப்பன - திகை - திசை -
திக்குக்களில் உள்ளன. திகைத்தல் - மயங்குதல் - மயக்கத்தை
உடையன என்பது சிலேடை. திக்குக்களில் உள்ளனஎன்றபொருட்குச்
சேய களிறு என்று கூட்டி நெடுந்தூரத்தில் உள்ள என்று பொருள்
கொள்க.

     பாய் - பரவிய. தருவே பயத்தன - பயத்தன - பயனை
உடையன - (பயம்- பயன் - பழம்.) - பயத்தை (அச்சத்தை)
உடையன என்பது சிலேடை. இவ்வுலக நிலையில் உயிர்களுக்கு
வரும் ஐந்து பயங்களையும் அரசன் நீதிமுறை யாட்சியினாற்
போக்குதலினாலும், அவ்வுலகநிலையில் வரும்பயம் வாராமல்
தெய்வம் காத்தலினாலும் அந்நகரில் சிலேடை வகையால்
தருக்களினது பயம் தவிர வேறு பயமில்லை என்பதாம்.
     
     இவ்வாறு தளர்ச்சி முதலியன வேறில்லையாதலுக்குக் காரணம்
தெய்வங்களும் ஒழுக்கங்களுமாம் என்பது குறிப்பு. 107