1185.
அண்ண லாரன்ப ரன்பேமு னார்த்தன;
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன;
வண்ண நீண்மணி மாலையே தாழ்வன;
எண்ணில் குங்குமச் சேறே யிழுக்கின.
108

     (இ-ள்.) வெளிப்படை. சிவபெருமானன்பர்களின் அன்பே முன்
ஆர்த்தன; குளிர்ந்த வாசனையுடைய மலர்களின் பூந்தாதுக்களே
துகளுடையன; அழகிய நீண்ட மணி மாலைகளே தாழ்வுள்ளன;
அளவில்லாத குங்குமக் குழம்புச்சேறே இழுக்கையுடையன.

     (வி-ரை.) அன்பிலாகிய ஆர்ப்பும், தாதின் துகளும், மணி
மாலைகளின் தாழ்வும், சேற்றின் இழுக்குமேயன்றி வேறு ஆர்ப்பு,
துகள், தாழ்வு இழுக்கு என்பன இல்லை என்றதாம்.

     அன்பே முன் ஆர்த்தன - ஆர்த்தல் - ஆரவாரித்தல்.
"ஆர்ப்பரவஞ்செய்ய" (திருவெம்பாவை - 11). அன்புமிகுதியினால்
"ஆடுதலும் பாடுதலுமாய் நிகழ்"தல். "சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் றிருவார்த்தை விரிப்பார்" (திருவாசகம்),
"தம்முட்பித்த ரைப்போலப் பிதற்றுவார்" (திருவாரூர் - குறிஞ்சி -
அப்பர் தேவாரம்) முதலிய திருவாக்குக்கள் இந்நிலையை விளக்குவன.
ஆர்த்தல் - கட்டுவித்தல். (ஆர்த்தபிறவி - திருவாசகம்) என்றும்,
நிறைவித்தல் - நுகர்வித்தல் என்றும், கொண்டு, அப்பொருள்கட்கு
ஏற்ப உரைப்பாருமுண்டு.

     தாதே துகளன - துகள் - பொடி. புழுதி (குற்றமுடையன)
- என்பது சிலேடை. பூந்தாதுக்களே யன்றித் துகள் வேறில்லை
என்பதாம். "தொன்மை முறை வருமண்ணின் றுகளன்றித்
துகளில்லா, நன்மைநிலை ஒழுக்கம்" (திருநா - புரா - 2) என்றது
காண்க.

     மாலையே தாழ்வன - தாழ்தல் - தொங்குதல் -
கீழ்நிலையிற் றாழ்வுறுதல் - என்பதுசிலேடை. மணிமாலைகள்
தாழ்தலன்றித்தாழ்வுடையன வேறில்லை என்க.

     சேறே இழுக்கின - இழுக்கு - வழுக்குதல் -
இழுக்குடையவை (குற்றமுடையவை) வேறில்லை என்க.

     ஆர்த்தல் - அன்பர் செயல். தாது - சிவபெருமானை
அருச்சிக்கும் மலர்களின் தாதுக்கள்; மணிமாலை - இறைவரை
அலங்கரிக்கச் சூட்டுவன; சேறு - திருவிழாவில் திருவீதி குளிரத்
தெளிப்பன என்றிவ்வாறு தொடர்புபடுத்திக் கண்டு கொள்க. "எவருந்
தொழுதெழு மடியார் திருவல கிடுவார் குளிர்புனல் விடுவார்கள்"
(திருநா - புரா - 163) முதலியவை பார்க்க.

     அண்ணலார் அன்பே என்றும், அன்பர் அன்பே என்றும்
தனித்தனி கூட்டி உரைத்துக்கொள்வது மொன்று.

     துகள்வன - என்பதும் பாடம். 108