1186.
வென்றி வானவர் தாம்விளை யாடலு
மென்று முள்ளவர் வாழு மியற்கையு
நன்று முள்ளத்து நண்ணினர் வேட்கைக
ளொன்று மங்கொழி யாவகை யுய்ப்பது.
109

     (இ-ள்.) வெளிப்படை. வென்றியையுடைய தேவர்களைப்போல
விளையாட்டயர்தலையும், காயசித்திபெற்று ஏனையோர்போல உடல்
அழியாமற் செய்து நீடித்து இருக்கின்ற சித்தர்கள்போல் எந்நாளும்
வாழ்ந்திருக்கின்ற இயல்பினையும், மற்ற எல்லா நன்மைகளையும்
பெறக் கருதித் தங்கள் உள்ளத்தில் விருப்பங்கொண்டு
சேர்ந்தவர்கள் அவாவிய பொருள்களுள் ஒன்றும் ஒழியாதபடி
செலுத்துவது அந்தத் திருநகரம்.

     (வி-ரை) தேவர்கள்போல விளையாடுதலும், சித்தர்போல
என்றுமிருப்பதும், மற்றும், நன்மைகளும் வேண்டி அங்குறைவோர்க்கு
அந்நகரம் அவ்விருப்பங்களுள் ஒன்றும் விடாமல் எல்லாம் நிறையக்
கொடுக்கும் என்றபடி.

     இனி, இவ்வாறன்றித், தமது பகைவரை வெற்றிகொண்டு
விளையாடுதலையும், அவ்வாறு வெற்றிகொண்டு, பின்னர் நீண்ட
ஆயுளுடன் வாழ்தலையும், பிற நன்மைகள் பெறுதலையும் விரும்பி
வானவர் நண்ணினர்; அவர் வேட்கையுள் ஒன்று மொழியாவகை
உய்ப்பது என்று கூட்டி உரைப்பாருமுண்டு.

     முன் மூன்று பாட்டுக்களானும் பொதுவாக மக்களது
வாழ்க்கைநிலைச் சிறப்பும் அன்பர் செயற் சிறப்பும் கூறியவகையால்
நகரச் சிறப்புரைத்தார். இப்பாட்டால் தேவர் சித்தர்களுடைய
இயல்பினால் நகரச் சிறப்புக் கூறுகின்றார்.

     என்றும் உள்ளவர் என்றது உபசாரம். சித்தர்கள் காயகற்ப
முறைகளைச் சாதித்ததன் பலனாய்ப் பிறரினும் நீண்ட ஆயுள்
படைத்தவர்கள் என்பதாம். "நெடுநா ளிருந்தபேரு நிலையாக
வேயினுங் காயகற் பந்தேடி" என்றனர் தாயுமானார். சரீரசித்தி
யுபாயம்பற்றித் திருமூலர் திருமந்திரத்துட் கூறுவன காண்க. என்றும்
அழியாமல் இருப்பவர் சிவபெருமான் ஒருவரேயாம். தேவர் முதலிய
யாவரும் ஒரோர் காலத்தில் சிவனுள் ஒடுங்கவுள்ளவரே யாவர்.
ஆன்மாக்களெல்லாம் நித்தியர்கள் எனப்பட்டாலும் மலத்தினும்
பிறவியினும் கட்டுப்பட்டவர்கள் என்க.

     உய்த்தல் - செலுத்துதல் - கொண்டு கொடுத்தல்.

     வேட்கையுள் - என்பதும் பாடம். 109