1187.
புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்
பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெலா
நிரம்பு கொள்கல மென்ன நிறைந்ததால்.  
110

     (இ-ள்.) வெளிப்படை. திரிபுரங்களை எரித்தவாராகிய
சிவபெருமான் எழுந்தருளிய காஞ்சிபுரமானது தனது புகழ்பரவிய
நீண்ட பதினான்கு புவனங்களிலும் உள்ள எல்லையில்லாத எல்லாப்
போகங்களின் சிறப்புக்கேதுவான வளங்களெல்லாம்
நிரம்பியுள்ளதொரு கொள்கலம்போல நிறைந்துள்ளது.

     (வி-ரை.) புரங்கடந்தவர் - திரிபுரத்தை எரித்தவர்
சிவபெருமான். கடத்தல் மேல் செல்லுதல் - அழித்தல் என்ற
பொருளில் வந்தது.

     புவனம் பதினான்கு - மேல் ஏழ் உலகமும், கீழ் ஏழ்
உலகமும். வரம்பில் போக வனப்பின்வளம்- போகங்கள்
எல்லையற்றன; அவற்றுக்காதாரமாக வுள்ளன வளங்களாம்;
அவ்வளங்களுட் சிறந்தவையெல்லாம்.

     கொள்கலம் - அந்த வளங்க ளெல்லாவற்றையும்
தன்னகத்துக் கொண்ட பாண்டம்.

     இப்பாட்டினால் எல்லா அண்டங்களிலும் உள்ள
எல்லாவளங்களும் காஞ்சியில் உள்ளன என்றபடியாம்.
எவ்வுலகத்தவர்களும் இங்குவந்து இறைஞ்சுதலினால்
அவ்வளங்கள் யாவும் உள்ளனவாயின என்க. 1166 - 1170
பாட்டுக்களும் பார்க்க. 110