1194.
|
திருமேனி
வெண்ணீறு திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனவழுக்குக் கந்தையுட னெழுந்தருளி வருமேனி
யருந்தவரைக் கண்டுமன
மகிழ்ந்தெதிர்கொண்
டுருமேவு மயிர்ப்புளக முளவாகப் பணிந்தெழுந்தார்.
117 |
1194. (இ-ள்.)
வெளிப்படை. வெண்ணீறு மிக விளங்கும்
கோலத்தையுடைய திருமேனிமேல் கருமேகம் போர்த்தது போல
அழுக்குடைய கந்தையோடு வருகின்ற மேனிப்பொலிவுடைய
அருந்தவரைத் திருக்குறிப்புத் தொண்டர் கண்டு, மனமகிழ்ந்து,
எதிர்கொண்டு, தமது உடல் மயிர்ப்புளகம் உண்டாக, அவரைப்
பணிந்து எழுந்தனர். 117
1194.
(வி-ரை.) திருமேனி
....... கோலத்து - இதனையேமுன் மாதவ வேடம் என்றார். கோலத்து - கோலத்திலே.
கோலத்து மேனி
கந்தையுடன் என்க. வெண்ணீற்றுக்கோலம் கந்தையுடன் கூடி
விளங்கிற்று.
கருமேகம்
என அழுக்குக் கந்தை - அழுக்குக் கந்தையைக் கருமேகத்திற்கு உவமித்தார்.
கருமேகம் - சூல்கொண்டு விரைவில்
மழை பெய்யவுள்ள மேகம். இங்கு அன்பர்க்குப் பெரும்புனன்
மழையும், பேரருள் மழையும்பெய்யக் காரணமாயிருத்தல்பற்றி
அழுக்குக் கந்தையைக் கருமேகம் என்றார் போலும். இந்த
அழுக்குக் கந்தை இச்சரித நிகழ்ச்சிக்குக் காரணமாதலும்
காண்க. மெய்யும் பயனும் பற்றிவந்த வுவமம்.
உருமேவு
மயிர்ப்புளகம் உளவாகப் பணிந்தெழுந்தார் -
பெரியார்களையும் கடவுளரையும் காணும்போதும் பேசும்போதும்
எண்ணும்போதும் மயிர்க்கூர்ச்செறிதல் அன்பின் சிறந்தஇலக்கணமாம்.
"ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண் டாற், கூசிமிகக்
குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்வுற், றாசையினாலாவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து, பேசுவன பணிந்தமொழி யினியனவே
பேசுவார்" என்று வரும் பத்தராய்ப்பணிவார் புராணம் பார்க்க. இவை
சிவனடியாரைக் கண்டவுடன் செய்யத்தகுவன. 117
|