1190.
|
தேரொலிக்க
மாவொலிக்கத் திசையொலிக்கும்
புகழ்க்காஞ்சி
"யூரொலிக்கும் பெருவண்ணா" ரெனவொண்ணா
வுண்மையினார்;
நீரொலிக்க வராவிரைக்க நிலாமுகிழ்க்குந் திருமுடியார் பேரொலிக்க வுருகுமவர்க்
கொலிப்பர்பெரு விருப்பினொடும்.
113 |
(இ-ள்.)
வெளிப்படை. தேர்கள் ஒலி செய்யவும், குதிரைகள்
ஒலி செய்யவும், எல்லாத் திசைகளிலும் சென்று பரவுகின்ற
புகழினையுடைய காஞ்சி மாநகரத்தில் ஊரில் உள்ளார்க்குத் துணி
ஒலிக்கும் பெரிய வண்ணார் தாமே இவர் என்று சொல்ல முடியாத
பெரிய நிலையினை உடையராகிய இவர், கங்கை நீர் ஒலிக்கவும்,
அரவுகள் இரைக்கவும், சந்திரன் முகிழ்க்கின்ற அடியார்களுக்குப்
பெரிய மகிழ்ச்சியோடும் துணிகளை ஒலித்துக் கொடுப்பர்.
(வி-ரை.)
தேர் ஒலிக்க - மா ஒலிக்க - மா - குதிரை.
மா
- யானை என்றலுமாம். மா விலங்குப்பொதுப்பெயர்
என்றுகொண்டு,
யானை குதிரையிரண்டனையும் கொள்வதுமாம். இவை
காஞ்சிமாநகரத்தில் மக்களும், அரசரும், தேவர்களும்ஊர்ந்துவருவன.
1175 - 1177-ல் இவைபற்றிக்கூறியவை பார்க்க. மாவின்
ஒலி
உயிருள்ள பொருளின் ஒலியாதலின் உயிரில்லாத பொருளாகிய தேர்
ஒலியினின்றும் வேறு பிரித்துக் கூறினார். இவ்வொலிகள்
காஞ்சியின்புகழ் திசைகளில் சென்று பரவுதற்கும் அறிவித்தற்கும்
காரணமாயிருத்தல்பற்றி ஓசை யென்றொழியாது
பொருட்பொலிவுள்ள
சத்தம்போல ஒலி என்று கூறினார். திசையொலிக்கும் என்ற
கருத்துமிது.
தேர்
ஒலிக்க - தேர் ஒலிக்கும்படி என்றுகொண்டு, தேர்கள்
சத்திக்கும்படி அவற்றிற் பூட்டிய மாக்கள் ஒலிக்க என்று கூட்டி
உரைத்தலுமாம்.
திசை
ஒலிக்கும் புகழ் - எல்லாத் திசைகளினின்றும், முத்தி
பெறும்பொருட்டு மக்களும், வரம்பெறும்பொருட்டுத் திக்குப்பாலகர்
முதலிய தேவரும் வருகின்றனர் என்பதும் குறிப்பு.
இனித், தேரும்
மாவும் காஞ்சி நகரத்துள்ளார் இரவலர்க்குக்
கொடுக்கும் ஈகைப் பண்டங்களாம் என்றும், அக்கொடையின்புகழ்
எல்லாத் திசைகளிலும் பரவுமென்றும் கூறும் குறிப்பில் வைத்ததும்
காண்க. "தேரொடு மாசிதறி" என்ற மதுரைக் காஞ்சி (224)ம்,
முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் கதையும் நினைவு கூர்க.
ஊர்
ஒலிக்கும் பெருவண்ணார் என ஒண்ணா
உண்மையினார்- ஊராருக்கெல்லாம் துணிகள் ஒலிக்கும் பொது
வண்ணாராவர் இவர் என்று சொல்லக் கூடாத தன்மை, இவரது
உண்மை யடிமைத் திறத்தை அறிந்தார் இவரை ஊர்ப்பொது
வண்ணார் என்று சொல்லத் துணியார் என்பது.
நீர்
ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும்
திருமுடியார் - அராவும் நிலவும் ஒருங்கு வாழும் சடை என்பதாம்,
"சந்திரனை மாகங்கை திரையான் மோதச் சடாமகுடத் திருத்துமே"
(அதிகை - தாண்டகம்), "பாம்போடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்"
(புகலூர் - தாண்ட) முதலியவை நினைவு கூர்க. பகையாகிய அரா
நச்சுக் காற்று இரைப்பினும், நீர் ஒலித்தலினால் நிலா முகிழ்க்கும்
என்றதொரு குறிப்பும் காண்க. "கங்கை யிரைப்ப வராவிரைக்குங்
கற்றைச் சடைமுடியான்" (திருப்பொற் - 14) என்ற திருவாசகமும்
காண்க. முகிழ்த்தல் - முளைத்தல் - முளத்தல்.
மீளத்
தோன்றுதல்.
பேரொலிக்க
உருகுமவர் - சிவபெருமானது பெயரைக்
கேட்டவுடன் உருகுகின்ற மனமுடையவர்கள் சிவனடியார்கள்.
"வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே!
எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப், பள்ளந்தா
ழுறுபுனலிற்
கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்" (திருச்சதகம்) என்ற திருவாசகமும்,
"முன்னமவனுடைய நாமங்கேட்டாள்" என்ற திருத்தாண்டகமும்,
"பிறையாளன் றிருநாம மெனக்கொருகாற் பேசாயே"
(திருத்தோணிபுரம்) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமும்
முதலியவை காண்க.
உருகுமவர்க்குப்
பெருவிருப்பினொடும் ஒலிப்பர் என்க.
ஒலித்தல் - துணிதோய்த்து அழுக்குப் போக்குதல். தோய்க்கும்
போது கல்லுடன் துணி மோதும் ஒலி உண்டாதலினாற் போந்த
ஒலிக்குறிப்பினால் வந்த பெயர் போலும்.
இப்பாட்டில்
ஒலிக்க என்ற பலவும் சொற்பின் வருநிலை.
ஊர் ஒலிக்கும் - ஒலிப்பர் என்றவை சொற்பொருட்
பின்வருநிலை.
உருகுமவர்க்கு
ஒலிப்பர் - சிவபெருமானது பெயரைக்
கேட்ட மாத்திரையின் உருகுகின்ற அடியார்களை, அவர்களது
மனமுருகுதலால் வரும் மெய்ப்பாடுகளாலும், திருவேடத்தாலும்,
வாக்காலும் காயத்தாலும் செய்யும் திருத்தொண்டினாலும்
அறிந்து அத்தன்மையர்களுக்கு விருப்பத்தினோடும் ஒலிப்பர்
என்பதாம்.
விருப்பினொடும்
- தமது குலத்தொழிலாகிய தூசு
ஒலித்தலை அவ்வூராருள் ஏனையோர்பாற் செய்ய
நேர்ந்தபோது அதன் வருவாயைத் தமது அமுதுக்காகக்
கொள்பவர் என்பதும், அடியார்க்கு ஒலிக்க நேர்வதனை
விரும்பிச் செய்தனர் என்பதும் ஆம். திருநீலகண்ட நாயனார்
சரிதம் (362) காண்க. 113
|