1191.
|
தேசுடைய
மலர்க்கமலச் சேவடியா ரடியார்தந்
தூசுடைய துகண்மாசு கழிப்பார்போற் றொல்லைவினை
யாசுடைய மலமூன்று மணையவரும் பெரும்பிறவி
மாசுதனை விடக்கழித்து வருநாளி லங்கொருநாள், 114 |
1191.
(இ-ள்.) வெளிப்படை. ஒளியுடைய தாமரை மலர்போன்ற
திருவடியினையுடைய சிவபெருமானடியார்களது துணிகளில்
துகளாலாகிய அழுக்கினைப் போக்குபவர்போலத் தமது பழவினை
பற்றிவரும் குற்றங்களாகிய மும்மலங்களும் அணைதலினால்
வருகின்ற பெரும்பிறவியென்னும் அழுக்கினை விடுமாறு போக்கி
வருகின்ற நாள்களில் அங்கு ஒரு நாளின்கண். 114
1191. (வி-ரை.)
தேசுடைய சேவடி - தம்மையடைந்த
அன்பர்களுடைய ஆணவவிருளாகிய அகவிருளைப் போக்குகின்ற
தென்பது குறிப்பு. தேசு- ஒளி.
அடியார்தம்
தூசு உடைய துகள் மாசு - தூசு - துணி -
உடை. தேசுடைய சேவடியா ரடியார்களாதலின் அவர்களது உடை
எஞ்ஞான்றும் மாசுடையன ஆகா; ஆனால் அவற்றிற் றுகள் படிந்த
மாசு மட்டில் கூறப்படும் என்பார் தூசுடைய மாசு என்னாது,
தூசுடைய துகள் மாசு என்றார். "பங்கமென்
னப்படா பழிகளென்
னப்படா, புங்கமென் னப்படாப் புகழ்களென்னப்படும் ... அடிகள்
வேடங்களே" (கொல்லி - திருந்துதேவன்குடி - 6) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரங் காண்க.
கழிப்பார்
போல் என்றதில் போல் என்ற
கருத்தும் இது.
உண்மையில் அது மாசு எனப்படமாட்டாது என்றது
குறிப்பு. போல்
என்றதனால் அவர் கழித்து வந்தது தூசுடைய துகண்மாசு அன்று;
அது தமது பெரும் பிறவியாகில மாசு தனை விடக்கழித்ததுவேயாகி
முடிந்தது என்றபடி. போல் என்ற சொல் இவ்வாறு
வழங்கப்படுதல்
பற்றி 460 - 752 - 772 பாட்டுக்களில் உரைத்தவை நினைவு
கூர்தற்பாலன.
தொல்லைவினை
ஆசுடைய மலம் மூன்று -
பிறவிக்கேதுவாகிய ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மூன்று
மலங்கள். தொல்லைவினை என்றது அநாதியே
தொடர்ந்துவருகின்ற
கான்மியமாகிய மூலகன்மத்தை; அது மும்மலங் காரணமாகத்
தோன்றுவது. மும்மலங்களுள் எண்ணப்படுவது மூல கன்மம்.
மலமூன்றும்
அணையவரும் பெரும் பிறவி மாசு - மும்மல
காரியமாய் வருவது இப்பிறவி. இது உயிருக்கு அழுக்காய் அதனைப்
படிவித்து மறைப்பது ஆதலின் மாசு என்றார்.
மாசுதனை
விடக் கழித்தலாவது - அரன்பணி - அடியார்
பணி என்னும் சிவபுண்ணியமாகிய சாதனையினால் பிறவியாகிய
அழுக்கினைப் போக்கிக்கொள்ளுதல். இதுபற்றி 803-ல் சாருமல
மூன்றுமற என்றவிடத் துரைத்தவை காண்க.
வருநாளில்
- "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" என்றபடி
நாள்தோறும் படியும் பிறவி மாசினை விடக்கழிக்கின்ற வகையால்
அடியார்தந் துணி தோய்த்துத் துகள் மாசு கழித்து வந்தனர்
என்பதாம். 114
|