1192.
பொன்னிமயப் பொருப்பரையன் பயந்தருளும்
                                   பூங்கொடித
னன்னிலைமை யன்றளக்க லெழுந்தருளு நம்பெருமான்
றன்னுடைய வடியவர்தந் தனித்தொண்டர் தம்முடைய
வந்நிலைமை கண்டன்பர்க் கருள்புரிவான்
                             வந்தணைவார்,
115

     1192. (இ-ள்.) வெளிப்படை. பொன்மயமுடைய இமயமலையின்
அரசன் பெற்றருளிய மகளாராகிய பூங்கொடிபோன்ற
பார்வதியம்மையாரது தவநிலையினை உலகறிய அளக்கும் பொருட்டு
முன்னாளில் எழுந்தருளிய நம்பெருமான், தமது அடியவர்களுடைய
ஒப்பற்ற தொண்டரது அந்த நிலைமையினைக் கண்டு அன்பர்க்கு
அருள்புரியும் பொருட்டு வந்து அணைவாராகி, 115

     1192. (வி-ரை.) பூங்கொடிதன் நன்னிலைமை யன்றளக்க
எழுந்தருளும் நம் பெருமான்
- அம்மையாரின் நற்பூசையின்
நிலைமையை அளப்பவர்போல உலகிற்காட்ட எழுந்தருளிய பெருமான். 1134 - 1144 பார்க்க. கந்தபுராணத்துத் தவங்காண்
படலத்து வரலாறு குறித்ததெனினும் ஒக்கும். "குரும்பைமுலை
மலர்க்குழலி கொண்ட தவங் குறிப்பினொடுஞ் சென்றவடன்
குணத்தினைநன் கறிந்து, விரும்பு வரங்கொடுத்தவளை
வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன்" (கலயநல்லூர்- தக்க - 1)
என்ற நம்பிகள் தேவாரங் காண்க.

     அடியவர்தம் தனித்தொண்டர் - திருக்குறிப்புத்தொண்ட
நாயனார். இவ்வாறு அடியார்களது குறிப்பறிந்து ஏவ

  1. ல்செய்வ தரிதுஎன்பார்தனி என்றார்.

     அந்நிலைமை - அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டின்
தன்மை.

     கண்டு - திருவுள்ளத்திற் கொண்டு என்க. காணுதல் -
உலகர்க்குக் காட்டும் பொருட்டு. 1204 பார்க்க. அன்பர் - அவர்.
அன்பர் என்றது சுட்டுப்பெயராய் நின்றது.

     அருள்புரிவான் வந்து அணைவார் - புரிவான் -புரிவதற்கு
- புரியும்பொருட்டு அணைபவர் என்க. வானீற்று வினையெச்சம்.

     நம்பெருமான் - அருள்புரிவான் - அணைவார் (1192) - தாங்கி
- குறுகி (1193) - எழுந்தருளிவரும் (1194) என முடிக்க. தாங்கி -
குறுகி
என்ற வினையெச்சங்கள் வரும் என்ற பெயரெச்சத்தின்
வினையுடன் முடிந்தன.

     வந்தணைந்தார் - வந்தணைவான் - என்பனவும்
பாடங்கள். 115