1193.
|
சீதமலி
காலத்துத் திருக்குறிப்புத் தொண்டர்பா
லாதுலராய் மெலிந்துமிக வழுக்கடைந்த கந்தையுடன்
மாதவவே டந்தாங்கி மாலறியா மலரடிகள்
கோதடையா மனத்தவர்முன் குறுநடைகள் கொளக்குறுகி,
116 |
1193. (இ-ள்.)
வெளிப்படை. குளிர் மிகுந்த காலத்தில்
திருக்குறிப்புத் தொண்டரிடத்தில் ஏழையாய் மெலிவுற்று மிக
அழுக்கடைந்த கந்தையுடனே மாதவ வேடமாகிய
சிவவேடந்தாங்கிக் கொண்டு, திருமாலும் அறியாத மலர் போன்ற
பாதங்கள், குற்றமடையாத மனத்தினையுடைய அன்பர் முன்னே,
குறுநடை கொள்ளும்படி வந்து சேர்ந்து, 116
1193.
(வி-ரை.) சீதமலிகாலம்
- மிக்கக் குளிர்பொருந்திய
காலம். அக்காலம் மழை மிகுதியாய்ப் பெய்த நாள்கள் போலும்.
சித்திரையிலும் பெருமழை பெய்து குளிர்மிகுதலும் உண்டுபோலும்.
"மேல் கடற்பால் அக்குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன்"
(1196) "இன்று அந்திபடு வதன்முன்னம் தருகின்றேன்" (1197)
"முன்பொலித்துமனைக் காற்றேற்க வறிந்திலேன்" (1201) என்று
பின்வருவனவற்றால் அக்காலம் வெயில் உடையநாள் என்றும்
தெரிகின்றது. இந்நாயனார் திருவடிப்பேறடைந்த திருநாள்
சித்திரைத் சுவாதியாம் என்பர். அதற்குப் பொருந்தப் பொருள்
கொள்க.
ஆதுலர்-
ஏழை. இது அழுக்கடைந்த கந்தை ஒன்றினையே
தாங்கிவருதலால் விளக்கப்பட்டது. ஆதுலர்
- விரத்தர்
என்றுரைப்பாருமுண்டு.
கந்தை-
பொந்தை - கந்தை. 504 பார்க்க
மாதவ
வேடம் - சிவனடியார் திருவேடம். திருநீறு -
உருத்திராக்கம் - வேணி என்ற இவை தாங்கிவரும்
திருக்கோலம். இதுவே சிறந்த தவவேடமாம்.
கோதடையா
மனத்தவர் - அண்ணலார் சேவடியின் சார்வாக
மனம் முதலிய மூன்றையும் மண்ணின்மிசை வந்தநாள்முதல்
அணைவித்தாராதலின் (1189) கோது எவையும்
அவர் மனத்தினுள்
அடையாவாயின.
அடிகள்
குறுநடைகள் கொள - ஆதுலராய் மிக மெலிந்து
ஓர் அழுக்குக் கந்தையுடன் கொண்ட வேடத்திற்கேற்பக் கால்கள்
தள்ளாடிய நடையுடன் விளங்கின என்பது. குறுநடை -
தளர்ச்சியால்வரும் சிறுநடை. 116
|