1195.
எய்துமவர் குறிப்பறிந்தே யினியமொழி பலமொழிந்து
"செய்தவத்தீர் திருமேனி யிளைத்திருந்த தென்?"
                                     னென்று,
கைதொழுது "கந்தையினைத் தந்தருளுங் கழுவ" வென,
மைதிகழ்கண் டங்கரந்த மாதவத்தோ
                             ரருள்செய்வார். 118

     1195. (இ-ள்.) வெளிப்படை. வந்த அவரது திருவுள்ளக்
குறிப்பினை அறிந்தே "செய்தவத்தீர்! தேவரீரது மேனி
இளைத்திருந்த காரணம் என்ன?" என்று, இனிய மொழிகள் பலவும்
சொல்லிக் கைதொழுது "கந்தையினைத் தோய்த்து ஒலித்தற்
பொருட்டுத் தந்தருளும்" என்று சொல்லத் திருநீலகண்டத்தை
மறைத்து வந்தவராகிய மாதவத்தோர் சொல்வாராய், 118
     

     1195. (வி-ரை.) எய்தும் அவர் குறிப்பு அறிந்தே -தம்முன்
திரு அடிகள் குறு நடைகொண்டு வந்தாராதலின் (1193) அவ்வாறு
தம்மிடம் வந்த அவரது குறிப்பைத் தெரிந்து. "தொண்டர்
திருக்குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மையினா" ராதலின் (1189)
உள்ளக்குறிப்பினை உடல்நிலையாலும் அவர்வந்த செயலாலும்
அறிந்தனர் என்க. தொண்டர்க்கு விருப்புடன் பணிசெய்யும்
ஏகாலியராகிய தம்பால் அழுக்குக்கந்தையுடன் ஆதுலராய் வருதலின்
தொண்டர் திருவுள்ளக்குறிப்பிதுவேயாம் என்றறிந்தனர் என்பது.

     என்? என்று இனியமொழி பல மொழிந்து என்க. இவை
அடியவரைக் கண்டவுடன் சொல்லவேண்டிய குளிர்ந்தமொழிகள்.
மேல் வருவன தொண்டு செய்வதற்குரிய தொழில் மொழிகள்.
"சிவநேசர் பாதம் வணங்கிச் சிறக்க, அவரேவல் செய்க வறிந்து",
"ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்டவர்கரும
முன்கரும மாகச் செய்தே, கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே" - சிவஞானசித்தி 12
(2).

     திருமேனி யிளைத்திருந்தது- "ஆதுலராய் மெலிந்து" - (1193)
பார்க்க. இளைத்த திருமேனி காட்டி வந்ததின் கருத்து "இந்தவுடற்
கிடர்செய்தீர்" (1197) என்று தாம் சுட்டிக் கூறியபடியே கொண்டு,
"மெய்குளிரும் விழுத்தவர் பால்" (1200), "திருமேனி குளிர்காணும்
தீங்கு" (1201) என்று நாயனார் வருந்தித் தலையைக் கல்லிற்
புடைக்கும் சரித நிகழ்ச்சியினை விளைத்தற் பொருட்டாமென்க.

     கைதொழுது- முன்னர்ப் "பணிந்தெழுந்து" (1194) என்ற பொது
வணக்கம். இப்போது தொழுது, அடியார்க்குப் பணிசெய்யும் பேறு
தமக்குக் கிடைக்கவேண்டிச் செய்த சிறப்பு வணக்கம். வணங்கி
விண்ணப்பத்தினைச் செய்யும் மரபும் குறித்தது. கழுவ - தோய்த்து
அழுக்குப்போக்கி வெளுக்க. கழுவ- நீரினாற் சுத்தி செய்து
வெள்ளையாக்க. "தூசுடைய துகளைக் ழுவும்" என்ற குறிப்பும்
காண்க.

     மைதிகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் - திகம்பரமாகிய
அழுக்கேறாத் தமது ஆடையை அழுக்கேறியபடிகாட்டியும்,
உண்மையில் விடமாகிய மாசுடைய கண்டத்தினை மறைத்தும்
வந்தனர்என்பது குறிப்பு. இவ்வாறு வந்தது கந்தை கழுவும் தொழிலின் மூலம் அவரைப் பிறவி கழுவச் செய்தலாம்.கறைக்கண்டத் தினைக்
காட்டி வந்திருப்பரேல் நாயனார் தமது பிறவிமாசினைக் கழுவ
இவரைவேண்டியிருப்பார் என்க.

     அருள் செய்வார் - என்றார் - என வரும்பாட்டுடன்
முடிக்க.

     இன்மொழிகள் - என்பதும் பாடம். 118