1196.
"இக்கந்தை யழுக்கேறி யெடுக்கவொணா தெனினும்யான்
மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து விடமாட்டேன்;
                                 மேல்கடற்பால்
அக்குன்றம் வெங்கதிரோ னணைவதன்முன் றருவீரேல்
கைக்கொண்டு போயொலித்துக் கொடுவாருங் கடி"
                                 தென்றார். 119

        1196. (இ-ள்.) வெளிப்படை. இக்கந்தையானது அழுக்கு
மிகுதியினால் எடுக்கவொண்ணாததாயிருப்பினும், நான்,
என்மேனியிற்கொண்ட குளிரினுக்குப் பயந்து அதனை விடமாட்டேன்; மேற்குக் கடலிடத்து அத்தகிரியாகிய அந்த மலையைச் சூரியன்
சேர்வதற்கு முன் தருவீராகில் ஏற்றுக் கொண்டுபோய்
ஒலித்துக்கொண்டு விரைவில் வாரும்" என்று சொன்னார். 119
    

     1196. (வி-ரை.) எடுக்க ஒண்ணாது - தாங்க முடியாது. தரிக்க
முடியாது. எடுத்தல் - சுமத்தல். மேற்கொள்ளுதல் என்ற பொருளில்
வந்தது. அழுக்கு மிகுதியினால் தரிக்க ஒண்ணாதாயினும்
குளிர்க்குடைந்தமையால் விடமாட்டேன் என்பதாம்.

     உடைதல் - துன்பமுறுதல். குளிர்க்கு உடைந்து - குளிரின்
வருத்தத்தாற் துன்புற்று. நான்கனுருபு ஏதுப்பொருளில் வரும்
ஐந்தனுருபின் பொருளில் வந்தது. உருபு மயக்கம். விடமாட்டேன்-
கைவிடமாட்டேன்.

     மேல் கடற் பால் அக்குன்றம் - அத்தமனகிரி. அக்குன்றம்
- உலகறிசுட்டு. வெங்கதிரோன் அணைவதன் முன் - ஞாயிறு
மேல்கடல் வீழுமுன். இது நாயனாருக்குத், தூசு எற்றி வெளுத்து உலர
வைத்தற்குப் போதிய காலவெல்லை தந்தது மன்றித் தமது மேனி
குளிர்தாங்கி நிற்பதற்குரிய கால அளவு குறித்ததும் ஆயிற்று, ஞாயிறு
எறிக்கும் வேளையிற் குளிர் வருத்தாமற் றாங்கலாருமென்றும்,
ஆயிற்று. ஞாயிறு வீழ்ந்தபின் குளிர் தாங்கலாற்றாது வருத்துமென்றும்
குறித்தபடியுமாம்.

     தருவீரேல் - தருதற்கு நீர் உடன்படுவீராகில். உடன்பாடு
மேல்வரும் பாட்டிற் காண்க.

     கடிது கொடு வாரும் என்க. கடிதென்பதைப் பின்வைத்தது
அதிவிரைவு பற்றி வந்த எச்சரிக்கைக் குறிப்பு. 119