1197. |
"தந்தருளு
மிக்கந்தை தாழாதே பொலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னந் தருகின்றே" னெனவவருங்
"கந்தையிது வொலித்துணக்கிக் கடிதின்றே தாரீரே
லிந்தவுடற் கிடர்செய்தீ" ரென்றுகொடுத் தேகினார்.
120 |
(இ-ள்.)
வெளிப்படை. அடியவரை நோக்கித் தொழும்பனார்
"தந்தருள்வீராக; இக் கந்தையினைச் சிறிதும் தாழாது இன்று
அந்திபடுவதன் முன்னரே ஒலித்துத் தருகின்றேன்" என்றுகூற,
அவரும், "இந்தக் கந்தையினை விரைவாக ஒலித்து உலர வைத்து
இன்றைக்கே தாரீராகில் இந்த உடலுக்குத் துன்பஞ்செய்தீராவீர்"
என்றுசொல்லிக் கொடுத்துப் போயினர்.
(வி-ரை.)
தந்தருளும் - தாருங்கள் - தருவீராக.இவ்வாறன்றிப் பெயரெச்சமாகக் கொண்டு
தந்தருள்கின்ற இக்கந்தை என்று கூட்டி
உரைத்தலுமாம்.
அந்திபடுவதன்
முன்னம் தருகின்றேன் - "தருவீரேல்"
என்று அடியவர் வினாவினாராதலின் அப்படியே தருவதாகத் தம்
இசைவினைக் கூறியபடியாம்.
கந்தை
...... இடர் செய்தீர் - இது கந்தையைத்
தொண்டனாரிடம் கொடுக்கும்போது அடியவர் சொல்லிய
ஆணைமொழி.
இந்தவுடல்
- உயிருக்கு உடலின் மூலமாகவே துன்பம்
வருகின்றதாதலின் வரும் இடர் நான் தாங்கி வந்த உடலைப்
பற்றியதாகுமேயன்றி உள்ளிருக்கும் இறைவனாகிய என்னைத்
தாக்காது என்றபடி. இனி இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் என்
உடல்;அவற்றினுள் தட்டுப்பாடாது அவற்றை என் உடலாகக்கொண்டு
உயிர்க்குள் உயிராய் நான் நிற்கின்றேன்; உயிர்களாகிய என்உடலுக்கு
வரும் இடர்கள் என்னைத் தாக்கா என்பதும் குறிப்பு. இஃதன்றியும்
அடியவர் தங்கள் உடலை வேறாகப் பிரித்து இன்பத் துன்பங்களை
அதனிடம் சார்த்தித் தாம் அவற்றுட்படாது எண்ணுவதும் பேசுவதும்
இயல்பு. கன்மானுபவங்களுக்குத் தாம் உடன்பட்டுழலாது
அவ்வனுபவங்களை உடலூழாய்க்கழிப்பது பெரியோர்இயல்பு. அது
பற்றியும் இந்த உடலுக்கு என்றார் என்றலுமாம்.
இடர்செய்தீர்
- இறந்த காலத்திற் கூறினார்; நீர்சொல்லியபடி
தருதல் கூடுவதில்லையாதலின் இடர் செய்தவராகவே
உமதெண்ணத்தில் பலிக்க. அதற்கு தக்க பரிகாரம் தேடுவது இச்சரித
உள்ளுறையாகலான் துணிவு புற்றிச் செய்தீர் என்றார்.
120
|