1198. குறித்தபொழு தேயொலித்துக் கொடுப்பதற்குக்
                              கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண் மாசெறிந்து
                              மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவிற் பெரும்பகல்போய்ப்
                                பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால் மழையெழுந்து
                          பொழிந்திடுமால்.
121

     (இ-ள்.) வெளிப்படை. மாதவர் குறித்த காலத்திற்குள்ளே
ஒலித்துக் கொடுத்தற்காகத் தொண்டனார் கந்தையினை
கொண்டுபோந்து, வாசனையுடைய மலர்கள் நிறைந்த நீர்த்தடத்தின்
துறையில் அதனை அழுக்குப் போகத் தோய்த்துப், பின்னர் மிகவும்
புழுங்க வைத்துப், பின்னர் வேறாகத் தோய்க்கப்புகும் பொழுது
பெரும்பகல் எல்லைகழிந்து, பின் பகலாகி, மானேந்து கையினராகிய
சிவபெருமான் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுவதாயிற்று.

     (வி-ரை.) குறித்தபொழுதே - "கதிரோன் மேல்கடல்பால்
அக்குன்றம் அணைவதன்முன் தருவீர்" (1196) என்றும் மாதவரும்,
"அந்திபடுவதன் முன்னந் தருகின்றேன்" (1197) என்று தாமும்
குறித்ததாகிய பொழுது - காலம்; சூரியன் படுமுன்.

     பொழுதே - பொழுதினுள் - கால எல்லைக்குள்.வெறித்தடநீர்
- வெறி - நீரினுட் பூக்கும் மலர்களின் வாசனை. நீர்ப்பூக் கொடிகள்
நிறைதலின் அந்நீர் தூய்மையும் துணி தோய்த்து
வெண்மையாக்குதற்குத் தகுதியும் உடையதென்பதும் பெறப்பட்டது.

     துறையின்கண் - நீர்த்தடத்தில் உள்ள பல துறைகளில்
வண்ணார் துணி தோய்த்தற்கென்று ஒதுக்கப்பட்ட துறையில்.இத்துறை
அங்குத் தோய்க்கும் துணிகளின் அழுக்குப்படியும் தன்மையால்
குளித்தல் - குடித்தல் - முதலியவற்றினுக்குத் தகுதியற்றது. அவ்வாறே குளித்தல் - குடித்தலுக்குரிய துறைகளில் துணி
தோய்க்கலாகாதென்பதுமாம். ஆறுகளிலும் குளங்களிலும் வண்ணார்
துறை என்று தனியாக அமைந்துள்ளதனை இந்நாளிலும் பல
இடங்களில் காணலாம். ஆனால் இத்தகைய நல் வழக்கம் சீர்திருத்தம்
என்ற பேரால் இந்நாளில் புறக்கணிக்கப்பட்டு நீர்நிலைகளை மக்கள்
எவ்வித நியதியுமின்றி எல்லாவகையாலும் அசுத்தம் செய்து உலகை
அலைத்து வருதல் வருந்தத்தக்கது.

     மாசெறிந்து - மிகப்புழுக்கி - பிறித்தொலிக்க - இவை
மூன்றும் துணிகளை அழுக்குப் போக்கி வெளுத்தலில் அமைந்த
அங்கங்களாகிய தனிச் செயல்கள். மாசெறிதல் - முதலில் அழுக்குப்
போகத்தோய்த்தல்; புழுக்குதல் - உவர்மண் ஏற்றித் துணியை
ஆவியில் புழுக்குதல். பிறித்தொலித்தல் - அவ்வாறு
புழுக்கியபின்அத்துணியழுக்கும் உவரின் கறையும் நீங்குமாறு
மேலும்நன்றாய்த் தோய்த்தல்.

     பெரும்பகல் - உச்சிவேளை - நண்பகல்; பின்பகல் - மாலை.

     பொழிந்தீடும் - பொழிந்து இடும் என்க. இடும்- பொழிந்து
அதன் பயனாக நாயனாரை இவ்வூன உலகத்தினின்றும்
ஞானவுலகமாகிய சிவபெருமானது நித்திய உலகத்திலே கொண்டு
சேர்த்து வைக்கும் என்ற குறிப்பும் காண்க. "நீயுமினி நீடியநம்,
மன்னுலகு பிரியாது வைகுவாய்" (1204) என்பது காண்க.

     திருவருளால் - அக்காலத்தில் மழையை எதிர்பார்க்க
முடியாதிருந்தும் மழை பெய்து அப்போது திருத்தொண்டினுக்கு
இடையூறுபோலக் காணப்படினும் உண்மையில் இந்நாயனாரைத்
திருவடியிற்சேர்ப்பிக்க வந்ததாதலின் திருவருளால் மழை
பொழிந்திடும்
என்றார். எழுந்து - என்றதனால்
முன்னர்க்காண இயலாத நிலையிலிருந்தது என்பதாம். 121