1199. திசைமயங்க வெளியடைத்த செறிமுகிலின்
                             குழாமிடைந்து,
மிசைசொரியும் புனற்றாரை விழிநுழையா
                             வகைமிடைய,
வசைவுடைய மனத்தன்ப ரறிவுமறந், தருந்தவர்பா லிசைவுநினைந், தழிந், "தினியா னென்செய்கே"                           னெனநின்றார்
. 122

     (இ-ள்.) வெளிப்படை. திசை எலாம் ஒளிபெறாது மயங்கும்படி
வெளியெங்கும் அடைத்த திரண்ட முகிலின் கூட்டங்கள் நெருங்கி
மேலே நின்று பெய்யும் மழையின் தாரையானது, கண்பார்வை
செல்லக்கூடாதபடி நெருங்கத், துன்பமுற்ற மனத்தினையுடைய
அன்பர் தம் அறிவு அயர்ந்து அரிய மாதவரிடத்துத் தாம் கொடுத்த
வாக்குறுதியை நினைந்து மனம் உடைந்தவராய் "இனி நான் என்ன
செய்வேன்" என்று நின்றனர்.

     (வி-ரை.) திசைமயங்க - திசை தெரியமாட்டாது மக்கள்
மயங்க. மக்களின் மயக்கம் திசைகளின்மேல் ஏற்றப்பெற்றது.
திசைமயக்கம் - 1151 பார்க்க.

     வெளியடைத்த - ஆகாய வீதியை மறைத்த. செறி என்பது
முகிலின் நீர்ச்செறிவினையும், குழாம் முகிற்கூட்டங்களையும்
உணர்த்தின. மிடைதல் - அவ்வாறுள்ள பல கூட்டங்கள்
நெருங்குதல்.

     தாரை விழிநுழையா வகைமிடைதல் - மழைத்துளிகளின்
நெருக்கம் கண் பார்வை இடையிற் செல்லாதபடி நெருங்கிச் செறிந்து
இருத்தல். விழிநுழைதல்என்பதும் வெளியடைத்தஎன்பதும்
இம்மேகங்கள் எங்கேனும் இடைவிடுமோ என்று பார்க்கும் ஆவல்
மிக்க அன்பர் அவ்வாறு பார்க்கவும் இயலாதபடி என்றவாறு.

     அசைவுடைய - அறிவு மறந்து - நினைந்து - அழிந்து -
நின்றார் -
இவை அன்பரின் துன்பமும் கவலையுமுறுகி மேன்மேல்
வளரும் நிலை குறித்தன. அசைவு - முதலில் நிகழ்வதாய
மனத்திண்மையினைப் பெயர்த்திடும் நிலை. அறிவு மறத்தல் -
மனத்திண்மை பெயர்ந்து அசையின் அறிவு தொழிற்படாதொழிதல்.
அழிதல் - இசைவுபட்ட பொருள் இயற்றமுடியாத நிலை
நேர்ந்துபட்டமைப்பற்றி மனம் அழுங்குதல். நிற்றல் - வேறு
மனச்செயலும் புறச்செயலும் இன்றி அசைவற்று நிற்றல்.
அசைவுடைய மனம் - இதனால் அசைவு பெற்றதன்றி
வேறுவகையால் என்றும் அசைவுபடாதது என்க. "ஆயமாடக்
கொடியே அசைவன" (1184) என்றதன் குறிப்புக் காண்க.
"வானந்துளங்கிலென்" (திருவிருத்தம்.), "பூதமைந்து நிலையிற்
கலங்கினும்" (142) என்றவற்றாலறிகின்றபடி என்றும் அசைவிலாது
உறைப்புடைய அன்பர் மனம் இங்கு அசைவுபெற்றதற்குக் காரணம்
திருத்தொண்டு செய்வதற்கு நேர்ந்த இடையூறே என்பார் இசைவு
நினைத்து
என மேல் விரித்தார். "குற்றேவ லழிந்தவா" என
மேல்வரும் பாட்டிற் கூறுவதும் காண்க. 122