1200. ஓவாதே பொழியுமழை யொருகால்விட்
                            டொழியுமெனக்
காவாலி திருத்தொண்டர் தனிநின்றார்;
                             விடக்காணார்;
மேவார்போற் கங்குல்வர, "மெய்குளிரும்
                             விழுத்தவர்பா
லாவாவென் குற்றேவ லழிந்தவா!"
                         வெனவிழுந்தார்.
123

     (இ-ள்.) வெளிப்படை. நீங்காமல் பொழியும் மழை ஒருவேளை
பொழியாது விட்டொழியும் என்று, கபாலியாகிய சிவபெருமானது
திருத்தொண்டர் தனி நின்றார்; ஆனால் மழைவிடும்
நிலைகாணவில்லை; பகைவரைப்போல இரவு வரவே "குளிரால் உடல்
வருந்தும் தூய தவசியாரிடத்தில் ஆ! ஆ! எனது குற்றவேல்
தவறிவிட்டதே" எனக்கீழே விழுந்தனர்.

     (வி-ரை.) ஓவுதல் - நீங்குதல்.

     ஒருகால் விட்டொழியும் - இது நாயனார் மனத்துட் கருதிய
நம்பிக்கை. நின்றார் என நிற்றலுக்குக் காரணங் கூறியுபடி.

     மேவார் - பகைவர். கங்குலைப் பகைவரென்றது தனது
இசைவு நிறைவேறாதபடி செய்துவிட்ட செயலினால். வினைபற்றி
எழுந்த உவமம். இரவைக் கண்டு வருந்தும் அகப்பொருள்களும்
இக்கருத்துப்பற்றியன. "பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்"
(188), "திருநுத லாட்கென்ன தாங்கொலென் போதரவே" (318),
"திரிந்திளைத்து வாழியன்றோ வருக்கன்பெருந் தேர்வந்து
வைகுவவே"(339) என்ற திருக்கோவைத் திருவாக்குக்களும்,
"பையுண் மாலை தமியோர் பனிப்புற" (304)என்றதும், பிறவும்
காண்க.

     மெய்குளிரும் - குளிரும் என்றது குளிரினால் வருந்தும்
என்ற பொருளில் வந்தது உபசாரம். "மெய்க்கொண்டகுளிர்க்குடைந்து
விடமாட்டேன்"(1196) என அருந்தவர் கூறியதனை
நினைந்துகொண்டபடி.

     ஆ! ஆ! அருந்தவரின் மெய்குளிரும் என்ற நினைவு
வந்தவுடனே அதற்குத் தாம் காரணமாய்விட்ட நிலை
நினைவுக்குவர நாயனார் மனம் நடுங்கிற்று.

     ஆ! ஆ! - இரக்கங் குறித்த இடைச்சொற்கள். அடுக்கு
மிகுதிகுறித்தது. மெய்குளிரும் விழுத்தவர்பால்.....ஏவல் அழிந்தவா
என்று வாக்கியம் தொடர்ந்து. முடிபு பெறுமுன் இடையில் இந்த
அவலச்சொற்கள் வந்தது அவரது மனத்தெழுந்த
துயரமிகுதிகுறித்தன; அருந்தவரின் மெய்வருத்தத்தினைச்
சிறிதளவும் பொறாத மனநிலையின் வெளிப்பாடென்க.

     குற்றேவல் - குறுகிய ஏவல்; சிறிய ஏவல். நான்செய்வது
சிறிய ஏவற் பணியேயாம் என்ற பணிவு நிலை. இதனைத்
"தாழ்வெனும் தன்மை" என்பது ஞானசாத்திரம். குற்றேவலும் என
இழிவுசிறப்பும்மைதொக்கது.

     அழிந்தவா - அழிந்தவாறு. அழிந்தநிலை. - ஆறு.
கடக்குறை.

     விழுந்தார் - அடியார்பாற் செய்யும் ஏவல் அழிந்த படியை
எண்ணவே மனம் அழிந்தது; மனமழிந்தமையால் நிற்கும்
வலிகுறைய அதனால் நிற்கலாற்றாதவராய் விழுந்தனர் என்க. 123