1201. (வி-ரை.)
விழுந்த மழை - மழை வீழ்தல் என்பது
மரபு. "வீழ்க தண்புனல்" (திருப்பாசுரம்) "விசும்பிற்றுளி
வீழினல்லால்" (குறள்) முதலியவை காண்க. பெய்த
மழை என்னாது
விழுந்த மழை என்று இங்குக் கூறியது உலகத்தவர்
யாவரும் பெய்க
என வேண்டிநிற்கும் மழை, இங்கு நாயனார் தம்விழுத்தொண்டினுக்கு
இடையூறாய் வீழ்ந்தது என்ற மனத் துன்பத்தால்
இழுக்கிய
பொருள்படக் கூறிய குறிப்புமாம். விழுந்த -
மழை பெய்துகொண்டே
யிருக்கவும் இறந்தகாலத்தாற் கூறியது, அது வீழ்ந்து நின்றது என
இறந்தகாலத்தாற் கூறலாம்படி அது நின்றுபடுமோ என எதிர்பார்த்து
நின்ற வண்ணமாயிருந்த அவரது மனநிலை குறித்தது. "ஓவாதே
பொழியு மழை ஒருகால் விட்டொழியுமென.....நின்றார்" (1200) என
முன்பாட்டிற் கூறியது காண்க.
இவ்வாறு
வீழ்ந்த என இறந்த காலத்தாற் கூறினாரேனும்
வீழ்கின்ற என நிகழ்காலப் பொருள்கொள
நிற்பது காலவழுவமைதி.
மெய்த்தவர்
சொல்லிய எல்லை - "மேல்கடற்பால்
அக்குன்றம் வெங்கதிரோன் அணைவதன்முன்" (1196) என்று
தவசியார்குறித்த கால எல்லை. எல்லை -
கால அளவு.
"கங்குல்வர" (1200) என்றது காண்க.
முன்பு
ஒலித்து மனைக்காற்று ஏற்க - முன்பு -பின்பகலாக முற்றி மழை பொழிவதற்கு
முன்பு. மனைக்காற்றுஏற்றல்-
நீர்த்துறையினின்று தமது மனைக்குச் சென்று மழையால் நனையாமல்
மனைக்குள் காற்று ஏற்கும்படி வைப்பதனால் உலரச் செய்தல்.
அறிந்திலேன் - அந்நினைவு வரப்பெற்றேனில்லை.
செழுந்தவர்
- தவத்தின் மிகுதியாலாகிய செழுமையுடையவர்.
"மெலிந்து திருமேனி யிளைத்திருந்த தென்" (1195) என முன்னர்க்
கூறியவதனால் இங்குக் குறித்தது அவரதுதிருமேனிச் செழுமையன்று.
இப்பாட்டில் முன்னர் "மெய்த்தவர்" என்றும், "அருந்தவர்" (1199),
"விழுத்தவர்" (1200), என்றும் கூறியவை காண்க. தவத்தின்செழுமை
"மாதவவேடந் தாங்கி" (1193), "வெண்ணீறு திகழ்ந்தொளிருங் கோலம்"
(1194) என்றதனால் அறியப்பட்டது என்க.
திருமேனி
- செழுந்தவருடைய தூய உடலாதலின் இவ்வாறு
கூறினார். இவற்றால் நீறு நிறைந்த தவக்கோலத்தில் நாயனார்
ஈடுபட்டு உருகியதிறம் அறிய நின்றது. தவராகிய
திருமேனிகொண்டெழுந்தருளியவர் என்பதும் குறிப்பிற் பெறப்படுதல்
காண்க.
குளிர்காணும்
தீங்கு - குளிரை யடைந்து வருந்தும் தீமை.
"மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து" (1196) என்று அவர் கூறியதனை
நாயனார் நினைவு கூர்ந்து வருந்திய நிலை. அவரது
திருமேனிமட்டில் குளிர்காண்பதாகும்; அவர்காண நில்லார் என்ற
குறிப்பும் காண்க.
தீங்கு
இழைத்த தொழும்பனேன் - நலம் செய்ய
நினைத்தாரேயன்றித் தீங்கு இழைத்தாரிலர்; இழைக்க
எண்ணினாருமிலர்; ஆனால் கந்தையினை உரிய கால எல்லைக்குட்
கொடாத செயலினால் அத்தீங்கு வருதற்குத் தாம் காரணராயினர்
எனத் துணிந்தனர் என்க. இதனை offence
by omission,
என்பர்நவீனர்.தொழும்பனேன் -
தொண்டிற் கடையாயினேன்
என்பதும் குறிப்பு.
இனி
இதுவே செயல் - முன் எண்ணிய தொண்டின் செயல்
கந்தைகளைக் கழுவித் தருதல். அஃதியலாது மாறாய் முடிந்தபோது
இனிச்செய்யும் செயல் இதுவே. இதுவே என்பது
மேல்வரும்
பாட்டிற்கூறப்படுவது.
துணிந்து
- முடித்து; எழுவார் - மேற்கொள்வாராகி
-
எழுவாராகி. முற்றெச்சம். எழுவார் - எற்ற
(1202) என்று
கூட்டுக.124