1202. "கந்தைபுடைத் திடவெற்றுங் கற்பாறை
                           மிசைத்தலையைச்
சிந்தவெடுத் தெற்றுவ"னென் றணைந்துசெழும்
                             பாறைமிசைத்
தந்தலையைப் புடைத்தெற்ற, வப்பாறை தன்மருங்கு
வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர்
                           மலர்ச்செங்கை.
125

     1202. (இ-ள்.) வெளிப்படை. "கந்தையினைத் தோய்ப்பதற்கு
ஏற்றுகின்ற பாறையின்மேல் எனது தலையை சிதைந்துபடுமாறு
ஏற்றுவன்" என்று துணிந்து அணைந்து, செழிப்புடைய
பாறையின்மேல் தமது தலையைமுட்டி மோதிய அளவில் அந்தப்
பாறையின் பக்கத்திலிருந்து அழகிய வளைத்தழுப்பு பூண்டவராகிய
ஏகாம்பரநாதரது மலர்போன்ற செம்மையுடைய கையானது வந்து,
எழுந்து, அத்தலையைப் பிடித்துக்கொண்டது. 125
  

     1202. (வி-ரை.) கற்பாறை மிசைத்தலையைச் சிந்த
எற்றுவன்
- முன்னாக் கற்பாறையும், தலைதாங்கிய உடலும்,
சிவனடியார் பணிக்கு உபகாரப் பொருள்களாய் நின்றன. இப்போது
தாம் துணிந்தபடி தமது உடல் அடியார் திருமேனிக்குத் தீங்கு
இழைக்கும் பொருளாயினமையின் அதனை அக்கற்பாறையில்
தலையைமோதிச் சிதைப்பன் என்பதுநாயனார்கொண்ட துணிபு.
அடியார் பணிக்கு உதவியாயின பாறையே அதற்குத் தீங்கு
வந்தபோது தீர்வுதருதற்கும் உதவுதல் தகுதி என்று துணிந்தனர்
என்பதாம். இக்குறிப்புப்பெறக் "கந்தைபுடைத்திட எற்றுங்
கற்பாறை மிசை"
என்றார்.

     எடுத்து - தூக்கி - ஓங்கி. எடுத்து எற்றுவன் என்றது
தலை சிதறுண்ணும் பொருட்டு.

     செழும்பாறை - பாறையின் செழுமையாவது - முன்பு,
சிவனடியார்க்குக் கந்தை புடைத்திட உதவிவந்தமையும், இப்போது,
நாயனார் தலையை மோதிப் புடைக்க நின்றமையும், பின்பு, 
அத்தலையைப் பிடிக்க ஏகப்பவாணருடைய திருக்கை அதன்
மருங்கு எழுந்துவர நின்றவையுமாம். துணிந்து எழுவார் (1201) -
"எற்றுவன்"என்று அணைந்து - எற்றச் - செங்கை - வந்து - எழுந்து
- பிடித்தது என்று கூட்டி முடித்துக் கொள்க.

     மனத்தில் இதுவே செயல் என்று துணிந்ததற்கும்,
அத்துணிபின்படி அச்செயலை நிறைவேற்றுதற்கும் இடையில்
எவ்வகையாலும் கால நீட்டிப்பு (தாமதம்) இல்லை என்று குறிக்கத்
துணிந்து - அணைந்து - எற்ற - என்று தொடர்ந்து செல்லும்
வினையெச்சங்களாற் கூறினார்.

     எற்ற - எற்றுதலாகிய வினை (செயல்) முற்றுப்பெறாது
இடையே தலையைச் செங்கைபிடித்ததனால், அவ்வினை,
எச்சமாகவே (எஞ்சியே) நின்றதுகுறிக்க வினை முற்றாற்கூறாது எற்ற
என வினை எச்சத்தாற் கூறிய நயமும் காணக. எற்றும் செயல்
முயற்சி யளவில் நின்றதேயன்றி முடிவு பெறவில்லை; என்றதும்
காட்டினார்.

     தலையை எற்றச் செங்கை பிடித்தது - எற்ற என்ற
வினைக்கும், பிடித்தது என்ற. வினைக்கும் தலை என்ற ஒன்றே
செயப்படுபொருளாய் வைத்த நயமும் காண்க. "வேண்டும் பரிசொன்
றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே" (குழைத்த பத்து -6)
என்ற திருவாசகத்தின் குறிப்புப்படி, அன்பர் செயலும் ஆண்டான்
செயலும் ஒன்றுபட நிகழ்தலும் குறிப்பித்தவாறு காண்க. "தன்னுடைய
வடியவர்தந் தனித் தொண்டர் தம்முடைய அந்நிலைமை
கண்டன்பர்க் கருள்புரிவ" (1192) தனையே இறைவர்
விருப்பங்கொண்டர் என்பதும் கருதுக.

     எற்றப் பிடித்தது - எற்ற அடியவரது செயல்குறித்த செய
என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பிடித்தது என்ற ஆண்டவரது
செயல்குறித்த பிறவினை முதல் வினை கொண்டது. அடியார்செயல்
ஆண்டவர் செயலுடன் முடிவுபெறுதல் குறிப்பாகும்.

     அப்பாறை - எற்றிய அந்த என முன்னறி சுட்டு.

     வந்து எழுந்து பிடித்தது - வந்து - நின்ற திருத்தாண்டக
முதலியவற்றாலும் வேத முதலிய இறைவரது மொழிகளாலும்
அறியப்படுகின்றபடி இறைவருடைய கை எங்கும் நிறைந்து நிற்பது;
ஆனால் அன்பு செய்யுமிடத்துக் கூர்ந்து மேல்வருவது அதன்
தன்மை; ஆதலின் வந்து என்றார். எழுந்து என்ற கருத்துமது.
நாயனார் தலையைப் பாறையில் மோதிப்புடைக்காதபடி தலைக்கும்
பாறைக்கும் இடையே செங்கை எழுந்தது என்றபடியாம். பிடித்தது
- எழுந்ததோடமையாது அத்தலையைப் பிடித்துக்கொண்டது
இவ்வாறே "ஊறுகண் டஞ்சித் தங்கணிடந் தப்பவுதவுங் கையை,
யேறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக் கொண்டு" (829) என்ற
கண்ணப்பநாயனார் புராண வரலாறுங் காண்க.

     அணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை - பாறையில் மோத
எற்றும்போது தாங்குதற்கு மெத்தென விருக்கும் கை என்பது குறிப்பு.
வளைத்தழும்பர் - "கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார்" (1141) என்றபடி தழுவக் குழைந்த
திருமேனியுடையார் என்பது.

     மலர்க்கை என்றும், செங்கை என்றும் கூறியது மென்மையும்
செம்மையும் பெற்றதென்று குறிப்பதற்கு.

     பிடித்தது - செங்கை எனப் பயனிலை முன்வைத்தது
அருட்செயலின் விரைவு குறித்தது. 125