1204. |
முன்னவரை
நேர்நோக்கி முக்கண்ணர் "மூவுலகு
நின்னிலைமை யறிவித்தோம்; நீயுமினி நீடியநம்
மன்னுலகு பிரியாது வைகுவா; யெனவருளி
யந்நிலையே யெழுந்தருளி யணியேகாம்
பரமணைந்தார்.
127 |
(இ-ள்.)
வெளிப்படை. முன்னின்ற அவரை இறைவனார்
நேர்நோக்கி முக்கண்ணராகிய ஏகாம்பரநாதனார் "உனது அன்பின்
நிலைமையை மூவுலகங்களும் அறியும்படி செய்தோம், நீயும், இனி
நீடிய நமது நிலைபெற்ற உலகிலே பிரியாமல் இருப்பாயாக" என்று
அருளிச் செய்து, அந்நிலையினின்றும் எழுந்தருளி அழகிய
திருஏகாம்பரத்தில் அணைந்தனர்.
(வி-ரை.)
முன்னவரை - தமது முன்நின்ற
அத்திருத்தொண்டரை. "தொழுது முன் நின்றவிப் பத்தரைக்
கோதில்செந்தேன், தெளித்துச் சுவையமு தூட்டியமரர்கள் சூழிருப்ப,
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்" (ஐயாறு 7) என்ற திருவிருத்தச்
சொல்லும் பொருளும் இங்கு நினைவு கூர்தற்பாலன. முன்னவர்
-
முதன்மை பெற்றவர் என்றலுமாம்.
முக்கண்ணர்
நேர் நோக்கி - நோக்குதற்குக் கண்
கருவியாதலின் இங்கு முக்கண்ணர் என்ற பெயராற்
கூறினார்.
செய்தற்கரிய பெருஞ்செயல் செய்த தொண்டனாரைத் தமக்கியல்பாக
உரிய மூன்று கண்களாலும் முழுஅருளினோக்கமும் செய்தனர்என்பது
குறிப்பு. நேர் நோக்கி - என்ற குறிப்புமது.
மூன்றாவது கண்
நெருப்புக்கண் எனவும் மன்மதனை எரித்த பார்வையுடையதெனவும்
படுமாதலின், அவ்வாறன்றி, அருளின் நேர்பட
நோக்கினார் என்பது.
"செற்றங்கருங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவ, னெற்றியிற்
கண்கண்ட கண்கொண்டுமற்றினிக் காண்பதென்னே" (கோயில் -
திருவிருத்தம் -8) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும்
இக்கருத்தைப் புலப்படுத்தி நிற்பது காண்க. மூவுலகும் நின் நிலைமை
அறிவித்தோம் - அறிவித்தற்காகவே இவ்வருட் செயல் செய்தோம்
என்பது. அந்நிலைமை கண்டன்பர்க் கருள்புரிவான்" (1192)
என்றவிடத்துரைத்தவை பார்க்க.
நீயும்
வைகுவாய் - நீயும் - நாமும் அறிவித்தோம் நீயும்
வைகுவாய் என எண்ணும்மை. அசை என்றலுமாம்
நீடிய
நம் மன் உலகு - சிவனுலகம், நீடிய உலகு - மன்
உலகு என்க.
நீடுதல்
- எங்கும் பரவியிருத்தல்; மன்னுதல் என்றும்
அழியாதிருத்தல். மன்னி நீடிய என்று ஒருபொருளாகக்
கொண்டுரைத்தலுமாம். நீடிய - என்ற தனைச்
செய்யிய என்னும்
வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, நீடிய வைகுவாய்
என்று கூட்டி, நிலைபெற்றிருக்கும் பொருட்டு நம்முலகில்இருப்பாய்
என்றுரைப்பினுமமையும். மன் - அரசு என்று கொண்டு
எல்லாவற்றுக்கும் மேலாய் அரசாங்கத்தமர்ந்த உலகம் என்றலும்
பொருந்தும். "நிலமிசை நீடு வாழ்வார்" என்ற திருக்குறட் கருத்தும்
காண்க.
அந்நிலையே
- வெளிநின்ற அந்நிலையினின்றே.
எழுந்தருளி
ஏகாம்பரம் அணைதல் - வெளிப்படத் தோன்றிய
நிலையினின்றும் எங்கும் நிறைந்த (வியாபக) நிலையினுள் மறைதல்.
"பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பல மணைந்தார்" (648)
முதலியவை பார்க்க. "வளைத்தழும்பர் மலர்ச் செங்கை" (1202)
என்றதும் காண்க. "அணி ஏகாம்பரம்" என்றார் காஞ்சிபுரமாதலின்.
எழுந்தருளி - மறைந்து. சைவமரபு வழக்கு. 127
|