1206.
|
பூந்தண்
பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும்
புனனாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையின் மன்ன,
முந்நாள்,வரைகிழிய
ஏந்து மயில்வே னிலைகாட்டி, யிமையோ ரிகல்வெம்
பகைகடக்கஞ்,
சேந்த னளித்த திருமறையோர் மூதூர் செல்வச்
சேய்ஞலூர். 1 |
1206. (இ-ள்.)
வெளிப்படை. அழகிய குளிர்ச்சியுடைய
காவிரி, எந்நாளினும் பொய்க்காமல் நீர்தரும்,
நீர்நாடாகிய
சோழவளநாட்டில், வாய்ப்புடைய மண்ணியாற்றின் தென்கரையில்,
நிலைபெறும்படி, முன்னாளில் கிரவுஞ்சமலை
பிளக்குமாறு ஏந்திய
கூரிய வேலினது நிலைபெற்ற தன்மையைக் காட்டிப், பின்பு,
தேவர்களது கொடிய பகையாகிய சூரர்களைச் செயிக்க நின்ற,
முருகனாணையினால் அளிக்கப்பட்ட திருமறையோர்கள்
நெருங்கிய பழைய ஊர் செல்வ நிறைந்த சேய்ஞலூர்
என்பதாகும்.
1206.
(வி-ரை.) பூந் தண்
பொன்னி - பூ - அழகு. அழகு
காவிரியின் இயல்பு; கரடுமுரடாயும், மலையின் வீழருவிகள் போலக்
கடிதாயும் ஓடாது மெல்லியதாய்ப்பரந்து செல்லுதலும்
செல்லுமிடமெல்லாம் அழகு செய்தலுமாம்.
எந்நாளும்
பொய்யாது அளிக்கும் - எந்நாளும் -
மழையில்லாத காலத்தும் முதுவேனிற் காலத்தும். உம்மை உயர்வு
சிறப்பு. பொய்யா தளித்தலாவது
சுருங்கி வறண்டுபோகாது நீர்
தருதலும் பருவந் தவிராது நீர் தருதலுமாம். "வான் பொய்யினுந்
தான்பொய்யா" (பட்டினப்பாலை - 5). "தவாநீர்க் காவிரிப்பாவை"
(மணிமே).
வாய்ந்த மண்ணி - மண்ணி - கொள்ளிடத்திலிருந்து
பிரிந்துவரும் கிளையாறு. இது பல காலங்களில் பல வழிகளில்
ஓடிச் சென்றது. பழ மண்ணிப்படிக்
கரை முதலியவற்றின்
வரலாறுகள் காண்க. இவ்வாறே காவிரியும் மாறிச்செல்லும் வழிகளுடையதென்பதுபற்றிப்
பழங் காவிரி முதலிய
வரலாறுகளும் கருதுக. வாய்ந்த - காவிரி பாயும்
நாட்டில்
வடிகாலாகிய கொள்ளிடத்தினின்றும் பிரிந்து வந்து கூடிய.
வாய்த்தல் - ஏற்றவாறு பொருந்துதல்.
மன்ன
- அன்றுமுத லின்றுவரையும் இனிமேலும் நிலைபெறும்படியாக.
முன்னாள்
- காட்டி - முருகப்பெருமான் சூரசங்காரத்தின்
பொருட்டுத் தேவர் சேனைகளுடன் கயிலையினின்றும் தென்றிசையில்
வருங்காலத்து இடையில் குறுக்கிட்டு எதிர்த்த மாயமலையாகிய
கிரவுஞ்சமலையை வேலாயுதத்தினாற் பிளந்து தாரகாசுரனையும்
வதைத்தருளினர் என்ற சரிதம் கந்தபுராணத்துள் விரிவாய்க்
காணத்தக்கது. முன்னாள் - தென்றிசையிற்
போந்து சேய்ஞலூரை
யுளதாக்குதலுக்கு முன்னாளிலே. வரை - கிரவுஞ்சம் என்னும்
மாயமலை. "குன்றமெறிந்த வேலவன்" (1158), "வரையுரங்கிழித்த
திண்மை அயில்" (661) என்ற விடங்களிலுரைத்தவையும் பார்க்க.
வரைகிழிய என்றதனால் அதனை இருப்பிடமாக்கொண்டு
அதனுள்
இருந்து மாயஞ் செய்த தாரகாசுரனைக் கொன்றதும் உடன்கொள்க.
ஏந்தும் அயில் வேல் நிலைகாட்டி - வேற்படை வெல்லும்
என்ற நிலையினை விளக்கிக்காட்டி. ஞான வேற்படையின்சத்தியினை
நாட்டிக் காட்டுதலே பொருளன்றித் தாரகனை வதைத்தல் ஒரு
பொருளன்று என்ற குறிப்புப்பட, வேலால் வரை கிழித்தசேந்தன்
என்னாது, வரை கிழிய ஏந்தும் வேல் நிலைகாட்டி - என்ற நயமும்
காண்க.
காட்டி
- கடக்கும் - சூரனாதியோர் மூவருள்,வேற்படையினாற்
சங்கரிக்கப்பட்ட இருவருள், ஒருவனானதாரகனைக்காட்டி
என்ற
இதனாலும், மற்றவனான சூரபதுமனைஇகல் வெம்பகை கடக்கும்
என்றதனாலும் உணர்த்தினார். பகை என்றதனால் குலிசாயுதத்தால்
வதைக்கப்படும் சிங்கமுகனையும் கொள்ள வைத்தார்.
இகல்
வெம்பகை - போரிற் கொடிய பகைவன்; சூரபதுமன்.
கடக்கும் - சேய்ஞலூர்த் தாபனத்தின்பின் இனி நிகழ உள்ளது
என்பார் எதிர்காலப் பெயரெச்சத்தாற் கூறினார். சேந்தன் -
முருகப்பெருமான்.
அளித்த
மூதூர் - அளித்தது அதனைப் புதிதாய் உளதாக்கி
விரும்பிய என்றதாம். "செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின், மல்லன்
மாநகர் வளந்தனை நோக்கி, யெல்லை யில்லறிவன் யாமுறை
தற்கோர், நல்ல மாநகரி தென்று நவின்றான்",
"வீரவேளிது
விளம்புத லோடு, மாரும் வானவர்க ளம்மொழி கேளா,
வேரெ லாமுடைய விந்நகர் சேய்ஞ, லூரதென்று
பெய ரோதின
ரன்றே" என்னும் கந்தபுராணம் குமாரபுரிப்படலம் (14 - 15) பார்க்க.
சேய்ஞலூர் என்பது வடமொழியில் குமாரபுரி
என
வழங்கப்பட்டது.
காட்டிக்
- கடக்கும் - சேந்தன் அளித்த -
கிரவுஞ்சத்தையும் தாரகனையும் சங்கரித்த பின்னரும், சூரனை
வதைக்கும் முன்னரும் ஆக இடைவழியில் முருகர், சேய்ஞலூரை
உளதாக்கி அங்குச் சிவபெருமானைப் பூசித்தனர் என்ற சரித
நிகழ்ச்சியைச் சுருக்கி விளக்கிய திறம் காண்க. "சேயடைந்த
சேய்ஞலூர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க.
சேய் (முருகன்) நல்ல ஊர் - சேயினால் அமரப்பட்ட
நல்ல
ஊர் என்க. சேய் நல்லூர் என்பது சேய்ஞலூர் என
வழங்குவதாயிற்று. நகரத்துக்கு ஞகரம் போலி.
திருமறையோர்
மூதூர் - திரு - முத்திக்குச் சாதனமாவது,
செல்வம் - அருட்செல்வம் குறித்தது.
மறையோர்
மூதூர் - "வேதியர் வாழும் சேய்ஞல்" (ஆப்பாடி
-2) என்பது திருநேரிசை. இது மறையோர் மிகுதியும் வாழும்
நகரமாகும். சரிதமுடைய நாயனார் மறையவராதலும் குறித்தவாறு.
மூதூர் - சேய்ஞலூர் என்று முடிக்க. பெயர்ப்
பயனிலை.1
இப்பாட்டினால்
நாயனாரது திருநாடு, ஆறு, திருநகர் முதலிய
வளங்களையும், பழஞ்சரிதத் தொடர்பும், குடிவளமும் ஒருங்கே
கூறிய நயம் காண்க. இவ்வாறே "விரைசெய் நறும்பூந் தொடையிதழி
(491) என்றதும், பிறவும் காண்க.1
1முருகப் பெருமான் உளதாக்கி
யமர்ந்து சிவபூசை செய்த
சிறப்புடைய பெருந்தலமா மிதன் ஆலயம் பழுதுபட்டுப் போய் 50
ஆண்டுகளின் முன் சுவாமி, அம்பிகை முதலிய மூர்த்திகள்
எல்லாரையும் இளங்கோயிலினுள் அன்பர்கள்
எழுந்தருளுவித்துள்ளார்.இதன் கோயில் முழுதும் இடிக்கப்பட்டு
அரைகுறை வேலையாய் நின்றுபட்டிருப்பதைச் சைவ உலகம்
இன்னும் பார்த்துக் கொண்டுதான் வாளா நிற்கின்றது. "மண்ணின்
பயனா மப்பதி" (1214) என்று ஆசிரியர் விதந்து போற்றிப்
பாராட்டும் பெருமையுடையதாய்ச் சிவபூசைப் பயனை உலகுக்குக்
கொடுப்பதாயுள்ள இப்பெரும் தலத்தின் நிலை இதுவாயின்
சைவர்கள் சிவபூசையின் பயன் பெற்றுய்வதெங்கே? இதனைத்
திருப்பணி செய்து முற்றுவித்து முன்போலத் தாபித்தல்
சிவபெருமான் றிருவருளும், முருகப்பெருமான் றிருவருளும்,
சண்டீசர் திருவருளும் ஒருங்கே பெறுவிக்க வல்லதாகிய
தலைசிறந்த சிவத்திருப்பணியாகும்.
|